ஆனந்த தாண்டவம் - இதுவரை...இப்போது...இனி..

ஆனந்த தாண்டவம் - இதுவரை...இப்போது...இனி...- குமரன் கே.; பக்.132; ரூ. 250; கே. ட்ரீம் வேர்ல்டு, சென்னை-83; )044-2489 5734.
Published on
Updated on
1 min read

ஆனந்த தாண்டவம் - இதுவரை...இப்போது...இனி...- குமரன் கே.; பக்.132; ரூ. 250; கே. ட்ரீம் வேர்ல்டு, சென்னை-83; )044-2489 5734.

23 வயதே நிறைவடைந்த, மாற்றுத்திறனாளியான இந்த நூலாசிரியர் குமரன், தனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவங்களையும், தன்னுடைய இப்போதைய நிலைமையையும், இனிமேல் தான் செய்ய விரும்புவதையும் சுயசரிதை நூலாக வெளிக்கொணர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நூலின் தலைப்புக்கு ஏற்றவாறு- உடல் ரீதியாக தான் அனுபவித்து வரும் வலிகளை புறந்தள்ளிவிட்டு- தனது ஆசைகளையும், விருப்பங்களையும் எளிய தமிழில் பதிவு செய்திருக்கிறார்.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த நூலாசிரியர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே முறையான பள்ளிக்குச் சென்று படித்துள்ளார். மேல்நிலைக் கல்வியையும், பட்டப்படிப்பையும் தொலைநிலைக் கல்வி மூலம் படித்து, தற்போது உளவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார். அதோடு, தானே ஒரு மருத்துவமனையைத் தொடங்கி, உளவியலாளராகவும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் மனதில் ஊக்கமும், ஆர்வமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதையும் இதன்மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளும் ஏனைய சராசரி மனிதர்களைப் போல காதலித்து திருமணம் செய்து கொண்டு இயல்பாக வாழ உரிமையுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளதோடு, இந்தியாவில் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

"உலகிலுள்ள எல்லாரையும் போல்தான் நாங்களும், எங்களை நோக்கி பரிதாபப் பார்வை வீசுவதைவிட, தேவைப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டுவதே சிறந்தது. அன்பு கலந்த பார்வையும் சிறு புன்னகையும் போதும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வைச் செழுமைப்படுத்த. இவை நிகழும்போது இந்த உலகம் மேன்மை பெறும்' என்று இந்த நூலின் முடிவுரையில் குறிப்பிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள், அவர்களது குடும்பத்தினர் மட்டுமல்லாது, அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது என்றால் அது மிகையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com