

பசும்பொன் கருவூலம் (தேவரின் அரசியல் மற்றும் ஆன்மிகக் கட்டுரைத் தொகுதி); தொகுப்பாசிரியர்கள்: சு.சண்முகசுந்தரம், சுரா; பக்.300; ரூ.300; காவ்யா, சென்னை-24; )044-2372 6882.
தேசியமும், தெய்வீகமும் இரு கண்களென வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். காந்தியவாதியாக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் தளபதியாகத் திகழ்ந்தார். சுதந்திரப் போராட்ட காலத்திலும் அதற்குப் பிறகும் அவர் "கண்ணகி' இதழில் எழுதிய கட்டுரைகள், அவரது நேர்காணல்கள், அறிக்கைகள், வாழ்த்துரைகள் என அவரது படைப்புகளின் கருவூலத் தொகுப்பாகவே இந்தநூல் உள்ளது.
"தமிழ்க்குலத்தின் தனிப்பெருந் திருநாள்' எனும் கட்டுரையில், ""இன்றைய தமிழ்நாடு கலை, மொழி, மதம், அரசியல் தலைமை இத்தனையிலும் சீரழிந்து சின்னாபின்னப்பட்டு நிற்கின்றது. இந்த நிலை நீடிக்காது. சீக்கிரம் மாற்றமும் மாண்பும் ஏற்படப்போகிறது '' என முத்துராமலிங்கத் தேவர் குறிப்பிட்டிருப்பது 57 ஆண்டுகளுக்குப் பிறகும் தற்போதும் பொருந்துவதாக உள்ளது. சமூகம் எனும் பிரிவில் ஹரிசன மக்களுக்கு வேண்டுகோளாக அமைந்த கட்டுரையில், விவசாயத்தில் ஹரிசனங்களுக்கு முக்கிய பங்குண்டு எனக் கூறுகிறார்.
ஆன்மிகம் பிரிவில் அவர் வள்ளலார் மீது வைத்த அன்பு வெளிப்படுகிறது. நேதாஜியோடு தொடர்புடைய பல கட்டுரைகள் விறுவிறுப்பாக, கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கும் வகையில் இருப்பது நூலை வாசிப்போரின் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளன. முதுகுளத்தூர் கலவரம், அதன்படி தன் மீது பதிவான வழக்கு என அவரது கருத்துகள் அந்தக் காலகட்ட அரசியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே அவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.