

எலும்போடு ஒரு வாழ்க்கை - பிரபல ஆர்த்தோபீடிக் சர்ஜன் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு -ராணி மைந்தன்; பக்.224; ரூ.275; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-2434 2810.
முடநீக்கியலின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் எம்.நடராஜனின் வழிகாட்டுதலால், அவருடைய மகனான டாக்டர் மயில்வாகனன் நடராஜன், முடநீக்கியல்துறையில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறந்து விளங்கி அத்துறையில் புகழின் உச்சியை எப்படி அடைந்தார் என்பது இந்நூலில் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.
நூலாசிரியர் ராணிமைந்தன் டாக்டர் மயில்வாகனன் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றையும், முடநீக்கியல் மருத்துவம் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் இந்நூலில் பதிவு செய்திருப்பது சிறப்பு.
அன்றாட வாழ்க்கையில் "ராணுவ ஒழுக்கத்தை' கடைப்பிடிக்க வேண்டும் என்ற தந்தை டாக்டர் நடராஜனின் அறிவுறுத்தலை பள்ளிப் பருவம் முதலே சுய விருப்பத்தோடு பின்பற்றி, முடநீக்கியல் மருத்துவத் துறையில் தாம் உயர்ந்ததை நூல் முழுவதும் நினைவுகூர்கிறார் பத்மஸ்ரீ விருதை 2007-இல் பெற்ற மயில்வாகனன் நடராஜன்.
இங்கிலாந்து சென்று எம்.சிஎச். படிப்பைப் படித்து, ஏழைகள் பலன் அடைய சென்னை அரசு பொது மருத்துவமனையில் 26 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர் மயில்வாகனன் நடராஜனின் அனுபவம், இன்றைய இளம் மருத்துவர்களுக்கு வாழ்க்கைப் பாடமாக அமையும். எலும்பு புற்று நோய் வந்து விட்டாலே காலை அகற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது, குறைந்த செலவில் செயற்கை உலோக எலும்பு-மூட்டு இணைப்பை 1988-ஆம் ஆண்டே அவர் உருவாக்கி இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பொருத்தி மறுவாழ்வு அளித்திருப்பதை தனது வாழ்நாள் சாதனையாகக் கூறுகிறார் டாக்டர் மயில்வாகனன் நடராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.