

மறக்க முடியுமா? -கிருஷ்ண ஜகன்நாதன்; பக்.290; ரூ.250, குவிகம் பதிப்பகம், கே.கே.நகர், சென்னை 600078, ✆ 8939604745.
இந்தப் புத்தகம் ஒரு பிரபலஸ்தரின் சுயசரிதை அல்ல. ஒரு நபரின் அறுபது-எழுபது கால வாழ்வின் வெறும் அசைபோடலும் அல்ல. ஆனால், இந்தப் புத்தகத்தில் துடிப்பான ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், வாழ்ந்த சூழல், கண்டு-கடந்து சென்ற சமூகச் சித்திரங்கள் ஒரு சரித்திர ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1960-கள் முதல் 1990-கள் வரையிலான தமிழ்நாட்டின் மத்தியதர வாழ்க்கையை இதுபோல எவரும் பதிவு செய்யவில்லை என்றே கூறலாம். வாழ்வில் சம்பவித்தவற்றை நினைவுகூரும் வகையில் உலர்ந்துபோன உரைநடையில் கூறாமல், கதை சொல்லும் சுவாரஸ்யத்துடன் விவரித்துக் கொண்டு போவது, புறச்சூழல் விவரங்களை அள்ளிக் கொட்டாமல் சுருக்கமாகவே சொல்லி தனது அனுபவங்களுக்குள் இழுத்துவிடும் பாணி நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது.
புன்முறுவல் தோன்றும் நகைச்சுவை உணர்வில் இளமைக் காலம், பள்ளி, கல்லூரி நாள்களைக் கூறுகிறார். அது முடிந்து பொருள் ஈட்ட வேற்று ஊருக்குப் போவது இயல்புதான். நூலாசிரியர் குடும்பத்தை இந்தியாவிலேயே விட்டுவிட்டு குவைத்தில் வேலை செய்துவரும்போது அந்தச் சிறு அரபு நாட்டின் மீது இராக் போர் தொடுத்தது. கனவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த லட்சக்கணக்கான இந்தியர்களை உலுக்கிப் போட்ட அந்தக் காலகட்டத்தை அநாயாசமாக சில காட்சிகளில் இவர் வர்ணித்திருப்பது அருமை.
பல மாதங்கள் சொந்தங்களுடன் தொலைபேசியில்கூட தொடர்பு கொள்ள முடியாமல் கடலுக்கு அப்பால் எவருடைய சண்டைக்கோ நடுவில் அந்நிய நாட்டில் சிக்கிக் கொண்ட இக்கட்டான காலத்தை நமது கண்முன் நிறுத்துகிறார்.
தான்சானியாவில் பணியாற்றச் சென்ற அனுபவங்களைக் கூறும் 'ஆப்பிரிக்க சாகசங்கள்' பகுதியில் பணியாளர் என்ற நிலையிலிருந்து நிர்வாகியாக உயர்ந்ததை ஆர்ப்பாட்டமில்லாத தனிப்பாணியில் கூறுகிறார்.
வாழ்வில் நிறைவை எய்திவிட்ட ஒருவரின் அருகில் அமர்ந்து கேட்பதுபோன்ற எழுத்துநடை. இதன் எழுத்து முறையைச் சற்று மாற்றிப் பார்த்திருந்தால், இந்த அனுபவங்கள் கலைநயம் மிகுந்த சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் உருவாகியிருக்கும் என்பது நிச்சயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.