

ஒரு வாசகம், ஒரு மனிதர், ஒரு சம்பவம்-எழுத்தாக்கம் நா.கதிர்வேலன், வெ.நீலகண்டன்; பக்.168; ரூ.220; விகடன் பிரசுரம், சென்னை-600002, ✆ 80560 46940.
ஆனந்த விகடனில் வெளியான ஒரு வாசகம், ஒரு மனிதர், ஒரு சம்பவம் தொடர், நூலாக வெளியிடப்பட்டுள்ளது. தங்களை வழிநடத்தும் வாசகம், மறக்க முடியாத நபர்கள் மற்றும் சம்பவங்களை சமூகத்தில் முக்கியஸ்தர்களாக மதிக்கப்படும் 27 பேர் பகிர்ந்துள்ளனர்.
இந்த நூலில் பல வாசகங்களை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் 'கையில்லாமல், காலில்லாமல் உறுப்புகள் கோரப்பட்டு மனிதர்கள் இருக்கிறார்கள். வயிறு இல்லாத மனிதன் இல்லவே இல்லை', 'இறைவா, எங்களுக்கு மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், மாற்றக்கூடியதை மாற்றும் துணிவும், இவற்றைப் பாகுபடுத்தி அறிய ஞானமும் தந்தருள்வாய்' போன்ற வாசகங்கள் எப்போதும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
புரிந்துகொள்வது வேறு, உணர்ந்துகொள்வது வேறு என்பர். ஒளிப்பதிவாளர் செழியன் குறிப்பிட்ட சம்பவத்தை கற்பனை செய்து நம்மை அதில் பொருத்திப் பார்த்தால், நிச்சயம் அவருக்கு ஏற்பட்ட உணர்வை ஓரளவேனும் உணர முடியும்.
மேஜர் ஜெனரல் அயென் கார்டோஸோ குறித்து வழக்குரைஞர் சுமதி தெரிவித்த சம்பவம் நெஞ்சுரத்தின் உச்சம். கவிஞர் மனுஷ்ய புத்திரன் கூறிய சம்பவமும், நல்லி குப்புசாமி செட்டியாரின் தந்தை குறித்து எழுத்தாளர் அசோகமித்திரன் கூறியதும் நெகிழச் செய்கின்றன.
பேராசிரியை விதுபாலா கூறிய வாசகத்தை குறிப்பிட்டு, மருத்துவர் கு.சிவராமன் தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் குறித்த தகவல், உடல்நலனில் எள்ளளவும் அலட்சியம் இல்லாமல் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
எழுத்தாளர் இமையத்துக்கு பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட்டும், மருத்துவர் எழிலன் நாகநாதனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூறிய அறிவுரை நம் அனைவருக்கும் ஒவ்வொரு வகையில் பொருந்தும். நூலை முழுமையாக வாசித்த பின்னர், நம்மை வழிநடத்தும் வாசகம் எது?, நாம் பெரிதும் மதிக்கும் நபர் யார்? நமக்கு எப்போதும் நினைவில் இருக்கும் சம்பவம் எது? என்பதை இந்த நூல் சிந்திக்க வைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.