

காலமாய் நின்ற கவி பாரதி-கிருங்கை சேதுபதி; பக்.240; ரூ.200; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை - 600 050, ✆ 044-2625 1968.
இதுவரையில் 35-க்கும் அதிகமான புத்தகங்கள் பாரதியார் குறித்து எழுதியிருக்கும் கிருங்கை சேதுபதியின் பாரதி குறித்த இன்னொரு புதிய படைப்புதான் "காலமாய் நின்ற கவி பாரதி'. மகாகவி குறித்து அவர் பல்வேறு இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் எழுதிய கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
வை.சு.சண்முகனாரின் 127-ஆவது பிறந்த நாளையொட்டி, தினமணி தமிழ்மணியில் எழுதப்பட்ட "பாரதியார் பேணிய வள்ளல்' கட்டுரையைப் படித்தால் கண்ணீர் வரும். கடையத்தில் பாழடைந்த வீட்டில் தங்கியிருந்த பாரதியாரைத் தேடிச் சென்று வரவழைத்துத் தனது கானாடுகாத்தான் "இன்ப மாளிகை' இல்லத்தில் அனைத்து வசதிகளுடன் வாழவைத்தவர் கானாடுகாத்தான் சண்முகம் செட்டியார்.
'உங்கள் குடும்பம் ஒதுக்கி வைக்கப்பட்ட கடையத்தில் இருக்க வேண்டாம். இங்கே கானாடுகாத்தானில் நானும் என் மனைவியும் வசிக்கும் விதத்துக்குச் சிறிதும் குறைவின்றி இங்கேயே இருந்து கவிதை எழுதி, எங்களுடன் இலக்கியம் பேசி மகிழுங்கள்' என்று அன்புக் கட்டளை இட்டதை பாரதி மறந்துவிடவில்லை. 'சண்முகநாத நாமம் படைத்த வள்ளற்கோனே' என்றும், 'கானாடுகாத்தான் நகர் அவதரித்த சண்முகனாம் கருணைக் கோவே' என்றும் பாடி மகிழ்ந்திருக்கிறார். இதுபோன்ற பல வியத்தகு செய்திகளும், மகாகவி பாரதியார் பாடல்களில் மறைந்து கிடக்கும் எத்தனையோ நுணுக்கமான தகவல்களும், அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளும் "காலமாய் நின்ற கவிபாரதி' புத்தகத்தில் புதைந்து கிடக்கின்றன.
பக்கத்தைப் புரட்டப் புரட்ட அந்தத் தகவல் புதையல்கள் வெளிவந்து நம்மை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்துகின்றன.
பாரதியியல் ஆய்வாளர்களுக்கு இந்தப் புத்தகம் புதிய பல தகவல்களையும் தரவுகளையும் வழங்குகிறது. நீங்கள் பாரதியை நேசிப்பவராக இருந்தால், கட்டாயம் இந்தப் புத்தகத்தை வாசியுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.