

பெரிப்ளூஸ் (கி.பி. 50 - 80)-வி.எஸ்.வி. இராகவன்; பக்.296, ரூ. 300, மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 600 021, ✆ 93805 30884.
பெரிப்ளூஸ் கடற் சுற்றுப்பயண வரலாறு என்ற பொருள் தரும் லத்தீன் சொல். கி.பி. முதல் நூற்றாண்டில் ஆண்டுகள் 50 - 80-க்கும் இடைப்பட்ட காலத்திலான இந்தப் பயணக் குறிப்புகளை எழுதியவர் பெயர் அறியப்படவில்லை. ஆனால், அரேபியா, ஆப்பிரிக்கா, ரோம் ஆகிய நாடுகளுடன் இந்தியா கொண்டிருந்த வணிக செயல்பாடுகள் பற்றியும் இந்தியாவின் மலைகள், துறைமுகங்கள் பற்றியும் விளைபொருள்கள், விற்பனை பற்றியும் விவரிக்கிறது.
தமிழில் முழுமையாகத் தற்போது வந்துள்ள இந்த நூலில் முன்னுரையில் தொடங்கி நூல் நெடுகிலும் தேவையான விளக்கக் குறிப்புகளையும் நூலாசிரியர் இராகவன் தந்திருக்கிறார். தமிழ்நாட்டை டிமிரிகா எனக் குறிப்பிடும் இந்த நூலில் தமிழ்நாடு தொடர்பான ஏராளமான வரலாற்றுச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன.
அயல்நாடுகள், இந்தியா என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள இதன் பகுதிகளில் கடற்பயணத்தின் இடைப்பட வரும் துறைமுகங்கள், வணிகப்பொருள்கள் பற்றியெல்லாமும் விளக்கமாகத்தரப்படுகின்றன.
எகிப்திய கடலிலுள்ள முùஸல் துறைமுகத்தில் தொடங்கும் குறிப்புகள் இந்தியாவின் பல இடங்களையும் குறிப்பிட்டு விவரிக்கிறது.
மூஸா என்ற வணிகச் சந்தை கூடுமிடத்தையும் அங்கே இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் பற்றியும் குறிப்பிடும்போது, வெள்ளைப் போளம் பற்றிக் கூறப்படுகிறது. சிறு மரப் பட்டையிலிருந்து வடித்தெடுக்கப்படும் பிசின் போன்ற இந்தப் பொருள், இந்தியா உள்பட கிடைக்குமிடங்களைக் குறிப்பிட்டு, இந்தப் பிசினைப் பக்குவப்படுத்திப் பூசி, இறந்தோர் சடலங்களை மம்மிகளாக எகிப்தியர்கள் வைத்திருந்தது பற்றியும் விளக்கப்படுகிறது.
முசிறிஸ் என்றொரு நகரைப் பற்றி பெரிப்ளூஸ் சுட்டும்போது, விளக்கவுரையில் மிக விரிவாக தமிழ் இலக்கிய வரிகளுடன் விவரித்து, தற்போதைய கொடுங்களூரை ஆசிரியர் அடையாளங் காட்டுகிறார்.
பழங்கால வணிக வரலாற்றை அறியப் படிக்க வேண்டிய நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.