

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை (ஆய்வுரை)- ம.திருமலை, பக்.128; ரூ.140; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 625 001, ✆ 99421 76893.
பட்டினப்பாலையை ஆய்வு நோக்கில் அணுகும் நூல். விளக்கச் சுருக்கம் மற்றும் பாடலை முழுமையாகத் தந்து, நூலில் முழு ஆய்வுரை தொடங்குகிறது. 'பட்டினப்பாலைச் சுருக்கம்' என்ற தலைப்பில் பாடலின் முழு விளக்கத்தையும் தந்திருப்பது சிறப்பான பகுதி.
பட்டினப்பாலையில் புகார் நகரம் ஒரு தலைவனின் உணவுகளுடன் பின்னிப் பிணைந்து காணப்படுவது விவரிக்கப்படுகிறது.
சோழ நாட்டுக்கான பகை குறித்து கூறும்போது, 'ஒளி பொருந்திய நெற்றியும் மடப்பம் நிறைந்த பார்வையும் உடைய மகளிர் உலர வைத்திருக்கும் நெல் மணிகளை உண்ணவரும் கோழிகளை தம் காதுகளில் உள்ள பொற்குழைகளை எறிந்து துரத்தினர். இது சிறு குழந்தைகள் உருட்டி விளையாடும் மூன்று சக்கர வண்டிகளின் சக்கரத்தில் சிக்கி, அந்த வண்டிகளை உருள விடாமல் தடுக்கும் பகையைத் தவிர வேறு பகை இல்லாத நாடு சோழ நாடு' என்ற அழகிய வர்ணனை செல்வ வளத்தையும் உணர்த்தியது.
சமண - பெளத்த பள்ளிகள், துறவிகள் வேள்வி செய்யும்போது, நெருப்பிலிடும் ஆகுதி, பண்டங்களின் மீது சோழ மன்னனின் புலி இலச்சினை பொறிக்கப்பட்டது, இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகள், ஏற்றுமதிக்கான மிளகு, ஆரம், அகில், காவிரிப்பூம்பட்டினத்தில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் ஒன்றாக வாழ்ந்த செய்தி போன்றவை வரலாற்றுச் செய்திகள்.
பட்டினப்பாலை ஆய்வுரைப் பகுதியில் பாடலை சிறுசிறு பகுதிகளாக எடுத்து தொடக்கம், தெளிவுரை, ஆய்வுரை என்று விவரித்துள்ளார். பாடல் முழுவதும் இவ்வாறு பிரிக்கப்பட்டு 19 தலைப்புகளிட்டு பாடலின் கருத்தோடு தனது ஆய்வுக் கருத்துகளையும், பிற இலக்கியங்களின் கருத்துகளையும் எடுத்தாண்டு பட்டினப்பாலையை மேலும் அழகாக்கியுள்ளார் நூலாசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.