மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம் - சுப்ரபாரதிமணியன், பக்.160; ரூ. 222; வானவில் பதிப்பகம், சென்னை-17, ✆ 044- 29860070
ஏழு சகோதரிகளின் நிலம் என்று அழைக்கப்படும் இந்திய தேசத்தின் வடகிழக்குப் பகுதியான 8 மாநிலங்களின் கூட்டமைப்புப் பகுதிகளின் பயண அனுபவமாக இந்நூல் அமைந்திருக்கிறது.
இயற்கை எழில் கொஞ்சம் இந்தப் பிரதேசங்களில் உள்ள மக்கள், அவர்களின் வாழ்வியல், வழிபாடு, எதிர்கொள்ளும் பிரச்னைகள், அந்த பிரச்னைகளுக்கான காரணம் என ஒரு வரலாற்று ஆய்வாகவும் இந்த நூல் தன்னை வெளிக்காட்டுகிறது.
தேசத்தின் எல்லைகளாக இருக்கக்கூடிய பிரதேசங்களை ராணுவம் எப்போதும் பாதுகாப்பாக அறன் போலக் காத்து வருவதால் அந்தப் பகுதிகள் எப்போதுமே ராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருக்க முடியும். சொந்த தேசத்து மக்களே கிட்டத்தட்ட அகதிகளாக தன்னை உணரக்கூடிய பிரதேசங்கள் அவை என்கிற கருத்து நிதர்சனமான உண்மை என்பது இந்த நூல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
சிறிய மாநிலங்களில் வாக்கு வங்கி குறைவாக இருப்பதால் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதில் சிரமம் உள்ளதாக ஒரு நடைமுறை எதார்த்தத்தைப் பதிவு செய்கிறார் ஆசிரியர். அதனாலேயே விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளிலும் அங்குள்ளவர்கள் தங்களை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாமல் போகிறது என்கிறார் அவர்.
அசாமின் தேயிலை, மேகாலயத்தின் பயிர்கள் குறித்து நீர் மின் உற்பத்தியின் பிரதான ஊற்றாக பிரம்மபுத்திரா பாயும் பகுதிகள் இருப்பதையும் குறிப்பிடும்போது அந்த ஏழு சகோதரிகளின் பிரதேசத்தின் வளம் நமக்குத் தெரிய வருகிறது.
குறிப்பாக, மேகாலயத்தின் சிரபுஞ்சியைப் பற்றி ஆசிரியர் விவரிக்கையில் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமான அதன் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறது. ஆசிரியர் குறிப்பிட்டதுபோல சவலைப் பிள்ளையாக இருக்கும் இந்தப் பிரதேசங்கள் சத்துப் பிள்ளையாக மாற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.