எண்ணங்கள்... வண்ணங்கள்...; நீல பத்மநாபன்; பக். 212; ரூ.250; வானதி பதிப்பகம்; சென்னை-17. ✆ 044-2434 2810.
தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், இலை உதிர் காலம் உள்ளிட்ட நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கவிதைத் தொகுதிகளைப் படைத்திருக்கும் எழுத்தாளர் நீல பத்மநாபனின் 15-ஆவது கட்டுரைத் தொகுதி இந்நூல்.
'தன் ஆசிரியரும் எழுத்தாளருமான நகுலன், கதைக்காக எங்கும் தேடிச் சென்றதில்லை. தன் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள், அனுபவங்களை கதை அம்சத்துடன் தத்ரூபமாக எடுத்துரைப்பார்' எனக் குறிப்பிடும் நீல பத்மநாபன், நகுலனின் படைப்புகளை வருங்காலத் தலைமுறையினர் படிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்.
அறிமுக எழுத்தாளர்களின் படைப்புகளை விமர்சிக்கும்போது, அதன் பலம், பலவீனம் இவற்றைச் சுட்டிக்காட்டி, இனிவரும் படைப்புகள் மேலும் இறுக்கமும், தொய்வின்றியும், எளிமையும், அழுத்தமும் பெற்றுத் திகழும் என எதிர்பார்ப்பதாகக் கூறியிருப்பது அவர்களுக்கான சிறந்த வழிகாட்டுதலாக அமைந்திருக்கிறது.
"வாசகர்களின் கற்பனை மீது நம்பிக்கை இருந்தால்தான் பல விஷயங்களைச் சொல்லியும் சொல்லாமலும் சொல்ல முடியும்' என ஒரு நேர்காணலில் நீல பத்மநாபன் குறிப்பிட்டிருப்பதை இளம் எழுத்தாளர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும். பள்ளிகொண்டபுரம் நாவலின் கதாபாத்திரங்கள் எல்லாம் மலையாளிகள்; ஆனால், கதை எழுதப்பட்டது தமிழில். தமிழ்தான் எனது சிந்தனை மொழி என அவர் கூறியிருப்பது வாசகர்களாக நமக்கும் பெருமை அளிக்கிறது.
நடிகர் கமல்ஹாசனும், எழுத்தாளர் இரா.முருகனும் நீல பத்மநாபனுடன் நடத்திய நேர்காணல் நாவல்கள், திரைப்படங்கள் எனப் பல விஷயங்களைப் பற்றி விவாதிக்கிறது. மொத்தத்தில் அனைவரையும் ஈர்க்கும் ஒரு படைப்பாளியின் விமர்சனம் இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.