உத்தரா- மலையாளம்-அனிதா தாஸ், தமிழாக்கம்-மு.ந. புகழேந்தி; பக்.214; ரூ.115; நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-50, ✆ 044-2625 1968.
உத்தரா - இது ஒரு மலையாள படைப்பு. அனிதா தாஸின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், மலையாள தாக்கம் இல்லாமல் உயிரோட்டமாக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தேவதாசி முறையால் சீரழிந்த பெண்ணை மையமாகக் கொண்ட கதைக்கரு. பேரழகியான உத்தரா தன் குடும்பத்தின் வறுமையைப் போக்க அவளது தந்தையின் பணத்தாசையால் 15 வயதில் தாசியாக்கப்படுகிறாள். அவளை விலை கொடுத்து வாங்கும் தம்புரான் கேசவபெருமாள், அந்தப் பெண்ணை தனக்கு விருந்தாக்கி கொள்கிறான்.
அவரது மகன் தாயில்லா பிள்ளையான சுதேவன், உத்தரா மீது காதல் கொள்கிறான். இதையறிந்த கேசவபெருமாள், உத்தராவை பலருக்கு விருந்தாக்குகிறான். தந்தைக்குத் தெரியாமல் உத்தராவைச் சந்தித்து திருமணம் செய்ய சுகதேவன் விருப்பம் தெரிவிக்கிறான். தாசியாக இருந்தும் தன்னை ஏற்கத்துடிக்கும் அவனை நம்பி அவனுடன் செல்கிறாள் உத்தரா.
அமாவாசை இரவில் தாசிகள் மடத்திலிருந்து உத்தராவை அழைத்துக்கொண்டு புறப்படுகிறான் சுதேவன். இதையறிந்த கேசவபெருமாள் அடியாள்களுடன் அவர்கள் வண்டியை மறித்து தடுக்கிறான். தப்பியோடும் காதல் ஜோடி பிரிந்துவிடுகிறது. அதன்பின் என்ன நடந்தது? அதுதான் உத்தராவின் கதை.
தேவதாசி எப்படி உருவாகிறார்கள், அவர்களுக்கான சடங்கு என்ன? அந்த சமூகக் கொடுமைகளால் எத்தனை பாதிப்புகள் ஏற்படும் என்பன உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் இந்த நாவலில் உள்ளது. தேவதாசிகள் மீதான சித்திரவதைகள், அவர்களின் மனதுக்குள் இருக்கும்
எதார்த்த எதிர்பார்ப்புகள், ரணங்கள், வேதனைகள் இந்த நாவலைப் படிக்கும்போது கண்ணீரை வரவழைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.