மறைமலையடிகளாரின் நாட்குறிப்பேடு- மறை தி.தாயுமானவன்; பக்.176; ரூ.200; மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை-600 062; ✆ 98409 88361.
தமிழுலகம் என்றும் மறவாத தமிழறிஞர் மறைமலையடிகள் குறித்து அவரது பெயரனும் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான நூலாசிரியர் எழுதிய நூல் இது.
1876-1950 காலத்தில் வாழ்ந்த அடிகளார் 1898 முதல் 1950 வரையில் 52 ஆண்டுகள் எழுதிய நாட்குறிப்பு இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்குறிப்பு எழுதப்பட்ட காலத்தில், விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே எழுதுவது வழக்கமாக இருந்தது. தமிழறிஞராக இருந்தாலும், அவர் ஆங்கிலத்தில் மொழிப் பயிற்சி தேவைப்படுவதால், ஆங்கிலத்திலேயே நாட்குறிப்பை வரைகிறேன் என்று அடிகளார் குறிப்பிட்டுள்ளதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ மட்டுமே எழுதாமல், ஒரு நூற்றாண்டு கால சமூகப் பொருளாதார நிலை, கல்வி, வாழ்க்கை நிலை குறித்து அவர் எழுதிவந்துள்ளது தெரிகிறது. உலகச் செய்திகள், அறிவியல் கண்டுபிடிப்புகள்,
மேனாட்டு அறிஞர்களின் தத்துவவியல் கோட்பாடுகள், பிற நாடுகளின் வரலாற்றுப் பதிப்புகள், பிற மொழிகள் குறித்த அவரது பார்வை, தமிழில் தட்டச்சு உருவான விவரம் போன்ற நூற்றுக்கணக்கான விஷயங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளையுடன் ஏற்பட்ட சந்திப்பும், அவர் இவரை இளையவராகக் கண்டு வியந்ததும் நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழுக்காக பெரியார் ஈ.வெ.ரா.வுடன் ஏற்பட்ட சந்திப்புகள், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழறிஞர்களுடனான சந்திப்புகள்
போன்ற தகவல்களும் உள்ளன. இதோடு, அடிகளாரின் வாழ்க்கை சுருக்கம், அவர் பாவாணருக்கு அளித்த ஆங்கிலம்- தமிழ்ச் சான்றுகள், அடிகளார் தொடர்புடைய படங்கள், அவர் நடத்திய இதழ்களின் குறிப்புகள் போன்றவையும் நூலில் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.