தேரோடும் வீதி-நீல.பத்மநாபன்; பக்.826; ரூ.850; காவ்யா, சென்னை-5; ✆ 98404 80232.
கன்னியாகுமரியைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளரான நூலாசிரியர், 'இலை உதிர் காலம்' எனும் புதினத்துக்காக 2007-இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் இருந்துவரும் அவர் எழுதிய இந்த நாவல் 1987-இல் முதல் பதிப்பு கண்டது. தற்போது இரண்டாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்ற சிறப்புடையது.
"1977 முதல் 1987 வரை பத்தாண்டு கால தீவிர இலக்கிய உபாசனையில் உருவாக்கி தமிழ் வாசகர்களுக்கு முன் சமர்ப்பிக்கும் படையல் இது' என்று இந்த நாவல் குறித்து நூலாசிரியர் கூறுகிறார். "தலைமுறைகள்', "பள்ளிகொண்டபுரம்', "உறவுகள்' வரிசையில் அவருடைய மற்றுமொரு வெற்றிப் படைப்பு. சம வாய்ப்புகள் ஒவ்வொருவருக்கும் உறுதியளிக்கப்பட்ட நம் நாட்டில் சுதந்திரம் கிடைத்த முதல் நாற்பது ஆண்டுகள் 1947-87 காலகட்டத்தில் ஒரு படைப்பிலக்கியவாதி நிலைத்து நிற்க எதிர்கொண்ட சிரமங்கள், தன்னைத்தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி கலைநயத்தோடு வரலாறாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் சுயசரிதைச் சாயலுடன் வெளிப்படுகிறது. எழுத்தாளர்கள், பத்திரிகைகள், பதிப்பகங்களின் இடையே நடைபெறும் அரசியலை அலசும் ஒரு படைப்பாக இந்த நாவல் அமைந்துள்ளது.
நவீன கணினி உலகில் தமிழ் இலக்கிய நடையில் அந்தக் காலக் கடித நடைமுறையிலான தகவல் பரிமாற்றம் போன்ற பல விஷயங்கள் இளைய தலைமுறையினரை வியக்கச் செய்யும். இயல்பான இந்த நாவலில் நூலாசிரியரின் வேதனை, வெட்கம், நட்புகள், விரோதங்கள் போன்றவையும் பின்னிப் பிணைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.