மாதர்குல மாணிக்கம் பத்மபூசண் டாக்டர் பி.முத்துலட்சுமி ரெட்டி- தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்; பக்.196; ரூ.150; திலகவதியார் திருவருள் ஆதீன வெளியீடு, புதுக்கோட்டை-622 001, ✆ 97891 82825
நூலாசிரியர் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், திலகவதியார் ஆதீனம் சந்நிதானம் ஆவார். இந்நூல் 2007 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த நிலையில், இந்நூல் மேலும் தகவல்கள், செய்திகள், புகைப்படங்களைத் தாங்கி விரிவு செய்யப்பட்ட நூலாக தற்போது வெளியாகி இருக்கிறது.
1886-இல் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி இளம் வயதிலேயே காட்டிய ஆர்வம் அவரை பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி வரை கொண்டு வந்ததற்கு புதுக்கோட்டை மன்னர் பைரவ தொண்டைமான் கொடுத்த கல்வி கற்பதற்கான அனுமதிக்கு நன்றி சொல்ல வேண்டும். அக்காலத்தில் பெண்கள் கல்வி கற்க அனுமதி இல்லை என்பதே நிலை.
சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் பெண் மருத்துவர், ஆசியாவிலேயே முதல் பெண் மருத்துவர் என்றெல்லாம் புகழப்பட்டவர், சென்னை மாகாணத்தின் மேலவை உறுப்பினராக வந்ததும் அவரின் கடும் முயற்சியால் தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், குழந்தைத் திருமண முறை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்கான வாக்குரிமைக்காகவும் பாடுபட்டவர்.
இவரின் தங்கை சுந்தரம்மாள் கருவுற்றிருந்த நிலையில் புற்றுநோய் தாக்க, அதன் கொடுமை காரணமாக உயிரிழந்ததைத் தாங்க முடியாமல் புற்றுநோய் ஒழிப்பில் தீவிரம் காட்டியதையும் 1925-இல் தொடங்கி, 1954-இல் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை உருவானதையும் விரிவாக நூலில் குறிப்பிடுகிறார் ஆசிரியர், படிக்க கண்களில் நீர் கசியும் வகையில்.
ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் நலனுக்காக அவர் 1930-இல் உருவாக்கிய ஒüவை இல்லம் உருவான கதையும் அப்படியே. தீவிர ஆர்வம், விடாமுயற்சி, ஓயாத சலியாத உழைப்புக்கும் சாதனைக்கும் பெயர்-டாக்டர் முத்துலட்சுமி என எடுத்துக்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.