இமயமலை - ஒரு பண்பாட்டுப் பயணம் - தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர்; தமிழில் - பாவண்ணன்; சாகித்திய அகாதெமி, சென்னை - 600 018, ✆ 044-24311741, 24354815.
விடுதலைப் போராட்ட வீரரும், காந்திய ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவருமான காலேல்கர் தன் நண்பர்களுடன் 1912-இல் இமயமலைக்கு நடைப்பயணம் மேற்கொண்டார். சுமார் இரண்டு மாத காலம் பனியிலும், குளிரிலுமாக அலைந்து இமயமலையைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்றார்; பல்வேறு மனிதர்களைச் சந்தித்தார். அவரது பயண அனுபவமே இந்நூல்.
பனி மூடிய இமயமலை சிகரங்களின் அழகு, அடர்ந்த காடுகள், பள்ளத்தாக்கு, வரலாற்றுச் சின்னங்கள், ஆன்மிகத் தலங்கள், உள்ளூர் மக்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவற்றை இந்நூல் அலசுகிறது.
ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது இமயமலையைப் பார்க்க வேண்டும், அங்கு பாய்ந்தோடும் நதி நீரைச் சுவைத்துப் பார்க்க வேண்டும், அங்குள்ள பாறைகள் மீது அமர்ந்து படைத்தவனோடு உரையாட வேண்டும் என்ற சாமானிய ஹிந்துவின் எண்ணங்களை நூலாசிரியர் அழகாகப் பதிவு செய்துள்ளார்.
வேத வியாசர், ஆதி சங்கராச்சாரியர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் துறவிகளின் வாழ்வின் உன்னத தருணங்களில் இமயமலை பெரும் பங்கு வகித்தது என்பதையும் இந்நூல் அடிக்கோடிட்டு காட்டுகிறது.
நூலாசிரியரின் இமயமலைப் பயணம் வெறும் அனுபவங்களாக மட்டுமன்றி, மானுட வாழ்வை இன்னும் விரிவான கோணத்தில் அணுகிப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
இயற்கையிலேயே மனிதன் ஒரே இடத்தில் நிலைத்து வாழும் இயல்புடையவனா? அல்லது அலைந்து வாழும் இயல்பு கொண்டவனா? என்ற கேள்விக்கு இதிகாச புராண காலந்தொட்டு சமகாலம் வரையிலான விளக்கங்களுடன் இந்நூல் விரிவான விடையளிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.