அவரும் நானும்- துர்கா ஸ்டாலின்; பாகம்-1 பக். 816; ரூ.1,000; பாகம்-2 பக். 944; ரூ.1,900; உயிர்மை பதிப்பகம்; சென்னை-20. ✆ 044-4858 6727.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்வின் அத்தனை சந்தர்ப்பங்களிலும் உடன் இருக்கும் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின், 'குமுதம் சிநேகிதி' இதழில் 'தளபதியும் நானும்' என்ற தலைப்பில் எழுதிய நீண்ட தொடரே 'அவரும் நானும்' என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. இரண்டு பாகங்களிலும் சேர்த்து 184 கட்டுரைகள்.
1975-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினுக்கு தன்னைப் பெண் பார்க்க தஞ்சை தரணியின் திருவெண்காடு கிராமத்துக்கு அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி குடும்பத்தினர் வந்ததுமுதல், 2025-ஆம் ஆண்டு வரை 50 ஆண்டு காலமாக தங்கள் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் துர்கா ஸ்டாலின்.
மிகப்பெரிய அரசியல் தலைவரின் குடும்பத்துக்கு ஒரு கிராமத்துப் பெண் மருமகளாகச் சென்று, அந்தக் குடும்பத்தின் அத்தனை உறவுகளையும் அரவணைத்துப் போவது சாதாரண விஷயம் அல்ல. அதை மிகச்சரியாக செய்து குடும்பக் கடமையை நிறைவேற்றிய துர்கா ஸ்டாலின், தன் கணவரின் பொது வாழ்க்கை சிறக்கவும் சீரிய பங்கை அளித்திருக்கிறார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளில் பெரும் தவிப்புடன் கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டது, முதல்வர் பதவியேற்பு விழாவில், 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று
மு.க.ஸ்டாலின் கூறியபோது கண்களில் கொட்டிய கண்ணீர் என நெகிழ்ச்சிப் பெருக்குடன் துர்கா ஸ்டாலின் பதிவு செய்திருக்கிறார்.
'ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பதற்கேற்ப எனது வெற்றிக்குப் பின்னால் துர்கா இருக்கிறார்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். நூலைப் படிக்கும்போது அதை நாமும் உணர முடியும். துர்கா ஸ்டாலின் எண்ணங்களுக்கு லோகநாயகியின் எழுத்தாக்கம் சிறப்பு சேர்த்திருக்கிறது. துர்கா ஸ்டாலின் பார்வையில் முதல்வர் ஸ்டாலின் பற்றிய இந்த நூல் மாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.