வெற்றியின் வரைபடம்-ஸ்டோய்சிசம்-அண்ணாமலை சுகுமாரன்; பக்.128; ரூ.170; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 002. ✆ 81480 66645.
'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்கிற கணியன் பூங்குன்றனாரின் சொல்லும், நாம் இப்போது இருக்கும் நிலைக்கு நாம்தான் காரணம் என்ற உண்மையையும், ஏற்றுக்கொள்ளுதல் என்ற பக்குவத்தையும், உன் வாழ்க்கை உன் கையில் என்னும் எதார்த்தத்தையும் உறுதிப்படுத்துகிறது இந்த நூல்.
எண்ணம், செயல், சிந்தனை எல்லாவற்றையும் தாண்டி உணர்வு என்ற தளத்தை மிகவும் முக்கியமானதாக பாவித்து அதில் கவனம் செலுத்தும்போது நாம் தேடுபவை நமக்குக் கிடைக்கும் என்ற நுட்பமான உண்மையை நமக்குப் போதிக்கிறது இந்தத் தத்துவம்.
கோபத்தின் மிகச் சிறந்த மருந்து தாமதப்படுத்துதல் என்று சொல்லும் இந்தத் தத்துவ முறை, தடைகளை நமக்கான நிறுத்தங்களாகப் பார்க்காமல் திருப்புமுனைகளாகப் பார்க்க சொல்லித் தருகிறது. மண்டேலாவின் சிறை வாழ்க்கை குறித்து அவர் பார்த்த கோணத்தை நமக்கு விளக்கும்போது அதை ஏற்காமல் இருக்க முடியவில்லை.
வாழ்க்கையின் வெற்றிக்கும் ஒழுக்கத்துக்கும் நேரடியான தொடர்பிருப்பதாக நமக்கு வலியுறுத்துகிறது இந்த நுட்பமான தத்துவம். மேலும், நேரத்தைக் கையாளுவதையும் கவனிக்கச் சொல்வதாக நூலாசிரியர் நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். செüகரியமான மற்றும் பாதுகாப்பான சூழலில் இருந்து வெளிவந்து இனி புதிய பாதையில் நாம் முயற்சிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வைக்கின்றன இந்த 2,500 ஆண்டுகள் பழைமையான நுட்பங்கள்.
சாராம்சமாக சொல்லப்போனால் நாம் இதுவரை எதிர்கொண்ட வாழ்க்கையின் சம்பவங்களை இரண்டாகப் பிரித்து, கட்டுப்படுத்த முடியாதவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதும் கட்டுப்படுத்தக் கூடியவற்றை திசை மாற்றிக் கட்டுப்படுத்தவும் கச்சிதமாக புரிய வைக்கிறது இந்த ஸ்டோய்சிசம் என்கிற கிரேக்க தத்துவம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.