அன்னை இந்திரா- ஜெகாதா; பக்.296; ரூ.300; எஸ் பப்ளிகேஷன்ஸ்; சென்னை-122. ✆ 8015827644.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை போராட்டமும் வலிகளும் நிறைந்தது. பண்டித ஜவாஹர்லால் நேருவின் மகள் என்கிற புகழ் இருந்தாலும், தனக்கென தனிப் பாதை வகுத்து இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்ற பெயரைப் பெற்றவர். ரத்தத்தில் எழுதப்பட்ட இந்திராவின் தியாக வரலாற்றை உணர்ச்சிப் பெருக்குடன் சொல்கிறது இந்நூல்.
1966, ஜனவரியில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மறைவைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. பிரதமர் பதவிக்கான இறுதிப் போட்டியில் இந்திரா காந்தியும், மொரார்ஜி தேசாயும் இருந்த நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. காங்கிரஸ் எம்.பி.க்கள் வாக்களித்து இந்திரா காந்தியை பிரதமராகத் தேர்வு செய்தனர். இந்திரா காந்தி பிரதமரானதில் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜரின் பங்கு குறித்து விரிவான தகவல்களை அளித்துள்ளார் நூலாசிரியர்.
இந்திரா காந்தியின் சாதனைகளில் ஒன்று பாகிஸ்தானிலிருந்து பிரித்து வங்கதேசத்தை தனி நாடாக உருவாக்கியது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிட்டு இந்திய ராணுவம் சாகசம் புரிந்ததற்குப் பின்னால் இந்திரா காந்தியின் மன உறுதியும், விரைவாக முடிவெடுக்கும் ஆற்றலும், அளப்பரிய துணிச்சலும் இருந்தது. அந்த நிகழ்வுகளை நூலில் வாசிக்கும்போது ஒரு பெருமித உணர்வு ஏற்படுகிறது.
1971 மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி எம்.பி.யாக வெற்றி பெற்றது செல்லாது என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அவசரநிலையை இந்திரா காந்தி அறிவித்தது, அவசரநிலை காலத்தில் நடத்தப்பட்ட அடக்குமுறைகள், 1984, அக்டோபர் 31-ஆம் தேதி தனது மெய்க்காப்பாளர்களாலேயே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது என அவரது வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்துள்ளது இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.