கோள்களைத் தாண்டி... - ஞானபாரதி; பக்.168; ரூ.150; இளைஞர் இந்தியா புத்தகாலயம், சென்னை-600 060, ✆ 93817 01961.
எண்ணம்போல் வாழ்க்கை. எண்ணம் எப்படியோ, வாழ்வின் வண்ணமும் அப்படியே. எண்ணமே வாழ்வின் மூலப்பொருள். இதனை உணர்ந்து எண்ணத்தைச் செம்மையாக்கி, லட்சியத்தை நோக்கிப் பயணித்தால், மகத்தானவை நம்மை அடைந்தே தீரும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.
சூழ்நிலைகள் கடினமாக இருந்தாலும், எண்ணங்கள் வலிமையாகவும், வழிமுறைகள் நேர்மையாகவும் இருந்தால், இலக்கு எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதை நிச்சயம் அடைய முடியும் என்பதை சுவாரஸ்யமிக்க பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள்காட்டி இந்நூல் பதிவு செய்துள்ளது.
தேவையில்லாத விஷயங்கள் குறித்து நிறைய தெரிந்துகொண்டு, தெரிந்துகொள்ள வேண்டியவற்றை அறிந்து கொள்ளாமல் காலத்தை வீணடித்து என்ன பயன் என்ற நியாயமான கேள்வியை எழுப்புவதோடு மட்டுமல்லாது, இந்த உலகில் எது நிலைத்து நிற்கிறதோ அதுவே வாய்மை. அதை வளர்க்கும் எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும். பிறர் எண்ணுவதையே நாமும் எண்ணினால் நமது அமைதி குலைந்துவிடும் என்று அந்தக் கேள்விக்குப் பதிலும் அளித்துள்ளார் நூலாசிரியர்.
மகாத்மா காந்தி, அப்துல் கலாம், புத்தர், சார்லி சாப்ளின், ஐன்ஸ்டீன், அலெக்ஸôண்டர், ஹிட்லர், பெர்னார்ட் ஷா உள்ளிட்ட பேராளுமைகளின் பொன்மொழிகளும், அவர்தம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களும் நூலாசிரியரின் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் விதமாக ஆங்காங்கே மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு.
நாம் வேறு; நமது எண்ணம் வேறு அல்ல. எண்ணினால் எதுவும் நடக்கும். உயர்ந்த எண்ணத்தை எதிர்காலத்தின் மீது பாய்ச்சி ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறும் நோக்கில் ஆய்ந்து எழுதப்பட்ட நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.