பெண்கவிக் களஞ்சியம்- தாயம்மாள் அறவாணன்; பக்.1,120; ரூ.1,300; தமிழ்க் கோட்டம், சென்னை-600 029, ✆ 95977 17485.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் துறைத் தலைவராகப் பணியாற்றிய நூலாசிரியர் எழுதிய 27-ஆவது நூல் இது. சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான பெண் புலவர்கள், கவிஞர்கள் என 385 பேர் எழுதிய நூல்கள், அவற்றின் சிறப்புகள், அவர்கள் குறித்த விவரங்களை சிறப்புறத் தொகுத்துள்ளார். இவற்றில் 22 கட்டுரைகள் தினமணியின் தமிழ்மணி பகுதியில் வெளிவந்தவை.
சங்க காலம் முதல் 11-ஆம் நூற்றாண்டு வரையில் 53 பேர், இடைக்காலமான 12-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை 46 பேர், பிற்காலமான 19-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை 104 பேர், தற்காலத்தில் 182 பேர் என இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளனர்.
ஒüவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றோரின் நூல்களையும், அவர்கள் குறித்து பல சிறப்புத் தகவல்களையும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். பெண்பாற் புலவர்கள் பாடியவற்றின் சிறப்புகள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்களை சிறுசிறு வரிகளாகப் பதிவு செய்திருப்பதைப் பார்க்கும்போது, நூலைத் தொகுக்க அவர் அளித்த முக்கியத்துவம் தெரிகிறது.
"பெண் ஏன் கல்வி கற்கவில்லை? பெண் வெறுப்பு எப்போது தோன்றியது' என்ற வினாக்கள் எழும் நிலையில், அவர்களின் படைப்புகள் மிகுதியாகத் தோன்றுவதற்கான காரணங்களையும் நூலாசிரியர் பட்டியலிட்டுள்ளார். ஒவ்வொரு நூலிலும், ஒவ்வொரு புலவர் காலத்திலும், சமயங்களின் ஆதிக்கங்களின்போதும் பெண் கல்வி குறித்த சூழல்களையும் அவர் விரிவாக எடுத்துரைக்கிறார்.
தமிழ் இலக்கியத்துக்குப் பெண் ஆளுமைகளின் பங்களிப்பு குறித்து ஒருசேர அறிய உதவும் நூல். தமிழ், வரலாறு, ஆன்மிகம், பெண்ணிய ஆளுமைகள் என்று பல்துறைகளை அறியவும் வழிகாட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.