அமுதசுரபி தீபாவளி மலர் 2025

பல்சுவை தித்திப்புடன் இனிக்கும் அமுதசுரபி தீபாவளி மலர் பாதுகாத்து வைக்கப்பட வேண்டியதாகும்!
அமுதசுரபி தீபாவளி மலர் 2025
Published on
Updated on
1 min read

அமுதசுரபி தீபாவளி மலர் 2025-திருப்பூர் கிருஷ்ணன்; பக்.250; ரூ.200; சென்னை-600 040, ✆ 73050 47470.

மதுரை அன்னை மீனாட்சியும் அவளது அருமைப் புதல்வனாம் முருகனும் அருணகிரிக் கிளியைக் கண்டு ரசிப்பது போன்ற வித்தியாசமான அட்டைப்படத்துடன் மலர் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மனின் கையிலுள்ள 'அருணகிரிக் கிளி' பற்றிய அட்டைப்படக் கட்டுரை வெகு சுவாரஸ்யம். பத்துக்கும் மேற்பட்ட ஆன்மிகக் கட்டுரைகள், பன்னிரண்டு சிறுகதைகள், வாழ்வியல், சுற்றுலா என பல துறைக் கட்டுரைகள், புத்தகம் முழுவதும் ஆங்காங்கே கவிதைகள் என்று பல்சுவை இனிப்புப் பெட்டியாக கலக்குகிறது.

மரபுக் கவிதையின் மாண்புகளைக் குறித்த தலையங்கம் ஒவ்வொருவரின் நினைவுகளையும் பின்னுக்குத் தள்ளி மரபுக் கவிதைகளை தேடிப் படிக்கத் தூண்டும் விதமாக உள்ளது.

வாழ்வியல் பகுதியில் மணிமணியாகப் பல கட்டுரைகளுக்கு நடுவே தமிழின் உன்னத எழுத்தாளரான அசோகமித்திரனின் குழந்தை வளர்ப்புக் கண்ணோட்டத்தை நினைவுகூரும் கட்டுரை தனித்துவமாக ஜொலிக்கிறது.

மகாகவி பாரதி தனது குருவாக ஏற்ற அன்னை நிவேதிதையின் புனித வரலாறு மலரில் ஒரு ரத்தினமாகப் பதிந்து பட்டொளி வீசுகிறது. சுவாமி சிவானந்தரைப் பற்றிய கட்டுரை பட்டுத் துணியைக் கத்தரித்தாற் போல நறுக்கென்று பளிச்சிடுகிறது.

வங்கத்தில் நடைபெறும் காளி பூஜையின் தனிச்சிறப்பு பற்றி சுவாமி விமூர்த்தானந்தரின் கட்டுரை ராமகிருஷ்ண பரமஹம்சர், அவரது சீடர்களின் காளி பூஜை நினைவுகளைப் பக்தி ஆவேசத்துடனும் நெகிழ்ச்சியுடனும் கூறுகிறது.

இதழியல் முன்னோடி பகுதியில், 'காலம்தான் பதில் சொல்லும் என்று எழுதாதே; நீ என்ன சொல்ல வருகிறாய் என்பதைத் தெளிவாக எழுது' என்று 'கல்கி' இதழாசிரியர் ராஜேந்திரனுக்கு ராஜாஜி கூறிய அறிவுரை எல்லா எழுத்தாளர்களுக்கும் என்றென்றைக்கும் பாடமாகத் திகழும்.

பல்சுவை தித்திப்புடன் இனிக்கும் அமுதசுரபி தீபாவளி மலர் பாதுகாத்து வைக்கப்பட வேண்டியதாகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com