
உரைவேந்தரின் உரைமாட்சி-முனைவர் சோ.ந.கந்தசாமி; பக்.147; ரூ.120; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 600 113.
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட செவ்வியல் இலக்கியங்கள் தோன்றிய காலத்திலேயே அவற்றுக்குரிய உரைகள் எழுதப்படாததற்குக் காரணம், அக்கால மக்கள் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழறிவு கொண்டவர்களாக விளங்கினர். இளம்பூரணர்தான் தொல்காப்பியத்துக்கு உரை வரைந்து உரையாசிரியர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். பதிற்றுப்பத்து, புறநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணைக்கு விளக்கமாக உரை எழுதிய சிறப்பைப் பெறுபவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி பிள்ளை.
இந்தத் திறனாய்வு நூலில் ஐங்குறுநூறு (மருதம்) உரைத் திறம் குறித்தும், இரண்டாம் பகுதி நற்றிணைக்கும், மூன்றாம் பகுதி மணிமேகலைக்கு உரைத்திறமாகவும், விளக்க உரை ஆய்வாகவும் விளங்குகிறது.
ஒளவை துரைசாமி பிள்ளை உரைகளின் மேன்மையை விளக்கும் விதமாக இந்த நூலை நூலாசிரியர் படைத்திருக்கிறார். ஐங்குறுநூறு பாடல்களுக்கு பழைய உரையையும் ஒளவை துரைசாமி பிள்ளையின் உரையும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு, இரண்டையும் அறிந்து கொள்ளும் விதத்தில் அமையப்பெற்றுள்ளது.
நற்றிணை உரைத்திறத்தில் புலவர்கள் குறித்த குறிப்புகள், பாட வேறுபாடு, பாடலின் பொருண்மை, திணை விளக்கம் போன்றவை இடம்பெற்றுள்ளன. மணிமேகலையின் பின்நான்கு காதைகளுக்கு ஒளவை துரைசாமி பிள்ளை எழுதிய உரைப் பகுதி பரந்த நூல் பயிற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இறைவன் இலக்கணமும் நூற்பொருளும், தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை போன்ற தலைப்புகளில் இடம்பெற்றுள்ள விளக்கங்கள், ஆதாரங்கள் உரைத்திறத்துக்கு வலுசேர்க்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.