
அயோத்திதாச பண்டிதரின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள்-தொகுப்பு க. கலாமணி சங்கபால; பக்.178; ரூ.200, பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், சென்னை-600 021. ✆ 99622 14491.
1907 முதல் 1914 வரை தமிழன் இதழில் அயோத்திதாச பண்டிதர் எழுதிய 500-க்கும் மேற்பட்ட அரசியல் விமர்சனக் கட்டுரைகளில் 85 கட்டுரைகளை நூலாகத் தொகுத்துள்ளார் கலாமணி சங்கபால. தேவைக்கேற்ப கட்டுரைகளைச் சுருக்கியுள்ளதுடன் இன்றைய தலைமுறைக்கும் புரிகிற வகையில் மொழிநடையையும் எளிமைப்படுத்தியிருக்கிறார்.
ஜாதிகள், கல்வி, ஆங்கிலேயர்கள், காங்கிரஸ் எனப் பல்வேறு விஷயங்களில் அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டில் உறுதியுடன், மிகக் கூர்மையான கருத்துகளை முன்வைக்கிறார் அயோத்திதாசர். இந்திய தேசம் கெட்டுப் போனதற்கான காரணங்கள் என அன்று அவர் தெரிவித்தவை எல்லாமும் இன்னமும்கூட தொடருகின்றன என்பது பெரிய நகைமுரண்.
ஆங்கிலேய அரசின் நிர்வாக முடிவுகள் தொடர்பாக பல்வேறு யோசனைகளைத் தெரிவிக்கிறார் அவர்; மணியக்காரர்களிடம் நீதிபதி அதிகாரத்தைக் கொடுப்பது ஆபத்தாகவே முடியும் என்கிறார்.
இன்றைய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் முன்னோடியைப்போல், 'பறையன் என இழிவுபடுத்திக் கூறுவோரைப் பழித்தல், களங்கப்படுத்துதல் என்ற குற்றத்துக்கு ஆளாக்கும் ஒரு சட்டத்தை ஏற்படுத்த வேண்டும்' என்று நூறாண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய தேசத்துக்குப் பொது பாஷையாக ஆங்கிலம் இருக்க வேண்டும்; தேசம் முழுவதும் ஆங்கிலத்தைப் பரவச் செய்தால், அவர்களின் வித்தை, புத்தி பரவுவது மட்டுமின்றி, சாதி கர்வமும் மத கர்வமும்கூட ஒழியும் என நம்பிக்கை கொள்கிறார் அயோத்திதாசர்.
அயோத்திதாசரின் கருத்துகளை மட்டுமல்ல; ஒன்றேகால் நூற்றாண்டுக்கு முந்தைய நம் நாட்டின் அரசியல் சமூக வாழ்நிலையையும் வெளிப்படுத்துகிறது இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.