
கலைநுட்பங்கள்-க.நா.சுப்ரமண்யம் பக். 170; ரூ. 180; தேநீர் பதிப்பகம், ஜோலார்பேட்டை-635 851. ✆ 90809 09600.
கலைநுட்பங்கள்-என்னும் இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் க.நா.சு. 1987 வாக்கில், புதுவையில் தமிழியல் துறையில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றிய ஏழு மாதங்களில் எழுதியவை. 18 கட்டுரைகள் இதில் உள்ளன.
'கலை நுட்பங்கள்' 1,2,3 என மூன்று கட்டுரைகள் 'இலக்கிய மரபும் தனி மனித தேவையும்' 'இலக்கியப் படிப்பு தேவையா?' 'மேலை நாட்டு இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளும் தமிழ் மரபுகளும்' மேலை நாட்டு இலக்கிய இயக்கங்களும் தமிழ் இலக்கியத்தில் அவற்றின் தாக்கங்களும், 'கவிதை பற்றி', 'நாவலில் கதை சம்பவங்கள்-பாத்திர கட்டுக்கோப்பு கருத்து'- ஆகிய கட்டுரைகள் நீளமானவை. பெரும்பாலான கட்டுரைகளிலும் அவர் வைக்கிற வாதம், இலக்கிய விமர்சனம் தேவை என்பதும்-ஆனால் அவை இலக்கியம் வளர வழிவகுக்க வேண்டுமே தவிர அழித்துவிடக் கூடாது என்பதும்தான்.
'இலக்கிய மரபும் தனிமனித தேவையும்'- என்ற கட்டுரையில் 14 வகை மரபுகளை வரிசைப்படுத்துகிறார். அவை ஒவ்வொன்றுக்குமான விளக்கமும் தருகிறார். 'மரபை அறிந்தால்தான் மரபை மீற முடியும்' என்கிறார். மரபை மீறக்கூடாது என்றால் புதுமை இலக்கியம் படைக்கவே முடியாது என்கிறார் க.நா.சு.
கலைநுட்பங்கள்- கட்டுரையில் 'வளைந்தது வில்லு-விளைந்தது பூசல்' என்று மாணிக்கவாசகர் சொல்கையில் சிவபெருமான் திரிபுரத்தை அழித்தது நினைவுக்கு வந்துவிடும்- என்கிறார். நுட்பமாக யோசித்து பல எழுத்தாளர்களின் உத்திகளை விரிவாக விளக்குகிறார்.
கவிதை பற்றிய கட்டுரையில் எந்தக் கவிஞனும் எழுதிய கவிதையைவிட எழுத நினைத்து-எழுதாமல் விட்ட கவிதைகள் அதிகம் இருக்கும்'- என்கிறார். பல கட்டுரைகளில் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்வதற்கான காரணம்-வேறு யாரும் சொல்லத் துணியாத- நினைக்காத காரியங்களை நான் வற்புறுத்திச் சோல்லி வந்திருக்கிறேன்.!'- என்கிறார். முன் சொன்னவற்றிலிருந்து முரண் படுவது என்பது மாறுபட்ட சிந்தனையாகவே கொள்ளவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.