
பன்மொழி ஒப்பாய்வுக் களங்கள்- முனைவர் நா.வஜ்ரவேலு; பக்.148; ரூ.180; காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. ✆ 98404 80232.
ஒப்பீட்டு ஆய்வென்பது இரு மொழியில் உள்ள இரு இலக்கியங்களின் ஒற்றுமை, வேற்றுமைகளை அதற்குரிய சமூகப் பின்புலத்துடன் ஒப்பிட்டு விளக்கிச் செல்வதாகும்.
இந்த நூலில், 'தொல்காப்பியரின் மெய்ப்பாட்டுக் கொள்கையும் பரதரின் இரசக் கோட்பாடும்' என்ற கட்டுரை தொடங்கி மொத்தம் 16 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க கலைக்களஞ்சியம் கூறியுள்ள வரையறை, வகைப்பாடுகளைக் கொண்டு சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள செவ்வியல் தன்மைகள் இரண்டாம் கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இதேபோல், திருக்குறளில் இடம் பெற்றுள்ள நடத்தைகள் தொடர்பான கருத்துகள் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.
சமணக் காப்பியமாகத் திகழும் சீவக சிந்தாமணியில் அகிம்சை நெறி, பிறன்மனை நோக்காமை, கல்லாமை போன்ற கோட்பாடுகள், வள்ளலார், நாமக்கல் கவிஞர் பாடல்களில் தலித் சிந்தனைகள், பாரதியார் - தாகூர் படைப்புகளில் சமூக சிந்தனைகளின் தாக்கம் முதலானவை ஒப்பிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
ஹெலன் சிச்சூ, பாரதியார், ராஜம் கிருஷ்ணன், பிரபஞ்சன் ஆகியோர் படைப்புகளில் அமைந்திருக்கிற பெண்ணிய சிந்தனைகளை விளக்கும் கட்டுரைகளும் கவனம் கொள்ளச் செய்கிறது.
பாலபாரதி, கவிஞர் மீரா, தமிழ்ஒளி ஆகியோர் படைப்புகளில் ஜாதிய, பெண்ணிய, சமூக சிக்கல்கள், தலித் வாழ்வியல் சான்றுகளுடன் விரிவாக விளக்கிக் காட்டப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரைகளின் வழியாக தமிழ், தெலுங்கு, வடமொழி, வங்கம் என 4 மொழிகளில் இடம் பெற்றுள்ள கருத்துகளின் சிறப்புகள், அவற்றுக்கிடையே உள்ள தனித்தன்மைகள், ஒற்றுமைகள் - வேற்றுமைகள் ஆகிய பண்புகளை உணரலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.