நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல் - பதிப்பாசிரியர்கள் மரு. வெ.பா.ரிஷிகேசன், முனைவர் கலை, இராம.வெங்கடேசன், முனைவர் ஜெ. இராதாகிருஷ்ணன், பக். 560; ரூ. 400, சங்கரா பதிப்பகம், காஞ்சிபுரம்-6315612, ✆ 044-27264066.
தமிழர்கள் இயற்கையைப் பாராட்டுபவர்களாக அல்லாமல் அதன் தன்மைகளை நன்குணர்ந்து போற்றியவர்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். காஞ்சிபுரம் ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்திய 'தமிழ் இலக்கியங்களில் சூழலியம்' என்ற பன்னாட்டு ஆய்வு மாநாட்டில் வரப்பெற்ற கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 92 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
தமிழ் இலக்கியங்களில் சூழலியல் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துகள், ஐவகை நிலப் பாகுபாட்டில் மண் பாகுபாடு, உணவுச் சூழல், தாவரங்கள், இயற்கை போன்றவை கட்டுரைகளில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்கள் வியப்பைத் தருகின்றன. விலங்குகளின் தன்மை, இறையுணர்வு உள்ளிட்டவை பல்வேறு விஷயங்களை எடுத்தியம்புகின்றன. குறிப்பாக, எருமையினம் தொடர்பான பதிவுகள் சிறப்பானவை.
நிலம், மழை, நீர் சேமித்தல் போன்றவற்றை அற இலக்கியங்களும் வலியுறுத்தியுள்ளன. அகநானூற்றில் கூறப்பட்டுள்ள காற்றின் வகைகள் காற்றுச் சூழலியல் குறித்த தெளிவைத் தருகின்றன. தமிழர் நாட்டுப் பாடல்கள், முக்கூடற்பள்ளு உள்ளிட்டவற்றில் உள்ள விவசாயம் குறித்த குறிப்புகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பண்டைக் காலங்களில் மரங்களை தெய்வமாக வழிபட்டும், தங்கையாக பாவித்தும் சூழலைப் போற்றி வந்துள்ளனர் தமிழர்கள்.
நம் முன்னோர் விட்டுச் சென்ற இயற்கை வாழ்வு, சூழலியல் சிந்தனைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.