தமிழ் இலக்கியங்களில் சூழலியல் மேலாண்மை சிந்தனைகள்
தமிழ் இலக்கியங்களில் சூழலியல் மேலாண்மை சிந்தனைகள்-பக்.560; ரூ.400; சங்கரா பதிப்பகம், ஸ்ரீ சங்கரா கலை -அறிவியல் கல்லூரி, ஏனாத்தூர், காஞ்சிபுரம். ✆ 044-2726 4066.
'தமிழிலக்கியங்களில் சூழலியல் மேலாண்மை சிந்தனைகள்' என்ற பன்னாட்டு ஆய்வு மாநாட்டு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
சங்க இலக்கியத்தில் பன்னுயிர் பெருக்கம், நீர் நிலைகள், சங்ககால பெண்பாற் புலவர்களின் சூழலில் கருத்தாக்கம், எட்டுத்தொகையில் சூழலியல் என்பது முதல் கம்பன் போற்றும் இயற்கை, நற்றிணை, குறுந்தொகை, மணிமேகலை, சீவக சிந்தாமணி என பல தலைப்புகளில் அமைந்த 89 ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பாக புத்தகம் அமைந்துள்ளது.
தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் மானுட வாழ்வியலை மட்டுமல்லாது, நாம் வாழும் புவியின் சூழல் குறித்தும் திறம்படச் சிந்தித்தனர் என்பதை இந்த நூலின் வாயிலாக அறியலாம்.
அகம், புறம் தொடங்கி தேவாரம், கம்பராமாயணம் எனப் பல்வேறு நூல்களில் இருந்தும் எடுத்துக்காட்டப்படும் வரிகள் நம் நெஞ்சை அள்ளுகின்றன.
இயற்கையைப் போற்றும் அறச் செயல்பாடாக சங்க காலத்தில் வழங்கிய திணைக் கொள்கையே இன்று சூழலியலாக மலர்ந்து கவனம் பெற்று வருகிறது என்று முனைவர் சீதாலக்ஷ்மி குறிப்பிடுகிறார்.
மணிமேகலை தமிழின் முதல் சமய காப்பியம் மட்டுமல்லாமல், தொல் பசுமை இலக்கியம் என்பதை ஒரு கட்டுரை நிறுவுகிறது.
மரம், மண் போன்றவற்றில் இறைமையைக் காண்பதும், மன்னன் முறை தவறினால் -சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாத திட்டங்களை செயல்படுத்தினால்-வான்மழை பொய்க்கும் என்பதும் மணிமேகலையில் சூழலியல் கண்ணோட்டத்தை குறிப்பதாக உள்ளன.
இயற்கையில் இறைவனைக் கண்ட சம்பந்தர், பக்தியுடன் இயற்கைச் சூழலை அற்புதமாக தேவாரத்தில் பாடியிருப்பதை முனைவர் வடிவேலனின் ஆய்வு கூறுகிறது.
'சங்க இலக்கியத்திற்கு அடுத்தபடியாக இயற்கை அழகை பலவாறு பாடிய சொல்லோவியங்களை சம்பந்தர் தேவாரத்தில் காணலாம்' என மு.வ. குறிப்பிட்டுள்ளதை அவரது ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
பண்டைய தமிழ்ப் புலவோர் இயற்கையின் எழிலை மட்டும் ரசிக்காமல் அதன் அறிவியலையும் ஆழமாக உணர்ந்து தமது எழுத்துகளில் பதிவு செய்திருப்பது இச்சிறப்பான தொகுப்பு வாயிலாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
