எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!

எதிர்பாராத நிலையில் ஒரு நன்மை கிடைத்தாலோ அல்லது நற்செய்தி ஒன்று வந்தாலோ, "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே' என்று பொருள்படும் ஒரு வார்த்தைதான், "அல்ஹம்துலில்லாஹ்' என்னும் அரபிச் சொல்லாகும். இது திருக்க
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!
Updated on
2 min read

எதிர்பாராத நிலையில் ஒரு நன்மை கிடைத்தாலோ அல்லது நற்செய்தி ஒன்று வந்தாலோ, "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே' என்று பொருள்படும் ஒரு வார்த்தைதான், "அல்ஹம்துலில்லாஹ்' என்னும் அரபிச் சொல்லாகும். இது திருக்குர்ஆனின் முதல் வசனத்தின் முதல் சொல்லாக அமைந்துள்ளது. ""எல்லாப் புகழும் அனைத்துலகுக்கும் உரிமையாளனாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்; அவன் மாபெரும் கருணையாளனாகவும், தனிப் பெரும் கிருபையாளனாகவும், இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.'' (அல்குர்ஆன் 1:1-3) திருக்குர்ஆனின் முதல் அதிகாரம் ஏழு வசனங்களை உள்ளடக்கியது. இது அரபியில் "அல் ஃபாத்திஹா' என்று கூறப்படும். முதல் வசனம், ""மனிதர்களையும், கோடானுகோடி பிற உயிர்களையும், கடல், மலைகள், தாவரங்கள், பேராறுகளையும் படைத்து அதனதன் நிலையில் இயங்கச் செய்ய அருள் பொழியும் மூலக்கருவான இறைவனைப் புகழ மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் அல்லாஹ்!'' இரண்டாவது வசனம் இறைப் பண்புகளையும், மூன்றாவது வசனம் இறையாற்றலையும் சுட்டிக் காட்டுகின்றது. நான்காவது வசனம், மனிதர்கள் இறைவனை நோக்கிக் கூறுவதுபோல அமையப் பெற்றுள்ளது. ""உனக்கே நாங்கள் அடி பணிகின்றோம்; மேலும், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம்'' (1:4) மனிதர்கள் பலவீனர்கள்; அறிவியலின் பேராற்றலால் புவியை வெல்லக்கூடிய திறமைசாலியாக இருப்பினும், அத்தகைய ஆற்றலுக்காகப் பேரருள் புரிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கே அடிபணிபவனாகவும், உதவி கேட்பவனாகவும் மனிதன் இருக்கின்றான் என்பதையே நான்காவது வசனம் சுட்டிக் காட்டுகின்றது. மனிதன் மனிதனாக வாழ, பண்புகளின் சிகரமாகத் திகழ, மனித நேயம் பேண, சிக்கலில்லாத ஒரு நல்ல வழியைக் காட்டுமாறு இறைவனிடம் கோரிக்கை வைப்பதுதான் 5, 6, 7 வசனங்கள் : ""எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! அவ்வழி, எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ, அவர்களின் வழி; உன்னுடைய சினத்துக்கு ஆளாகாத மற்றும் நெறி தவறிப் போகாதவர்களின் வழியுமாகும்'' (1:5-7) ""இறையருள் பொழியக்கூடிய நன்னெறியில் நடைபோடுகின்றவர்களின் மனிதநேய செந்நெறியில் எங்களை இணைப்பாயாக!'' என்று நெஞ்சுருகப் பிரார்த்திப்பதுபோல் இறுதி மூன்று வசனங்கள் பளிச்சிடுகின்றன. "அனைத்துப் பேராற்றல்களையும் தன்னகத்தே கொண்டிலங்குபவன் அல்லாஹ்' என்பதுதான் ஒரு முஸ்லிமின் உறுதியான நம்பிக்கையாகும். அல்லாஹ்வின் பேராற்றல் மற்றும் கருணைத் தன்மைக்குச் சான்றாக, திருக்குர்ஆனில் ஆங்காங்கே பல வசனங்கள் காணக் கிடைக்கின்றன. ""அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் நன்கறிபவனாய் இருக்கின்றான்'' (2:282 வசனத்தின் இறுதிப் பகுதி) ""வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; மேலும் அவனுடைய பேராற்றல் யாவற்றையும் உள்ளடக்கியுள்ளது'' (3:189) ""அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு உதவியாளனாகவும், ஆதரவாளனாகவும் இருக்கின்றான்'' (3:68) ""திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பை வழங்குபவனும், சகிப்புத் தன்மையுடையவனுமாய் இருக்கின்றான்'' (3:155) இவ்வாறாக பற்பல வசனங்கள் இறைவனின் பெருமையை குர்ஆனில் பறை சாற்றி நிற்கின்றன. உயரிய பண்புகள் நிறைந்ததாக மானுடம் திகழ வேண்டும் என்பதுதான் இறைவனின் வேட்கையாகும். அவன் கட்டளைகளுக்கு அடிபணிந்து நம் வாழ்வை சீரும், சிறப்புமாக அமைத்துக் கொள்வோமாக! எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com