அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் முதல்படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திகழ்கிறது. மதுரையிலிருந்து தெற்கே திருமங்கலம் செல்லும் சாலையில், 5 கிலோ மீட்டர் தொல

மிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் முதல்படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திகழ்கிறது.

மதுரையிலிருந்து தெற்கே திருமங்கலம் செல்லும் சாலையில், 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம் மலை. சுமார் 300 மீட்டர் உயரமுள்ள இம் மலையில் அடிவாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.



இத்தலம் பாண்டிய நாட்டு 14 சைவத் திருத்தலங்களுள் முக்கியமானதாக விளங்குகிறது.

"திருப்பரங்குன்றம்' எனப் பொதுவாக அழைக்கப்பட்டாலும் திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசலதலம், குமாரபுரி விட்டணுதுருவம், கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதல்படை வீடு எனப் பல பெயர்களில் முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இத்தலம் சிவபெருமான், முருகப் பெருமான் ஆகிய 2 திருத்தலங்களையும் ஒருங்கே பெற்றிருப்பது தனிச்சிறப்பு.

தலபுராணம் : திருச்செந்தூரில் சூரபன்மனை சம்காரம் செய்த முருகப்பெருமான், பராசுர முனிவரின் புதல்வர்கள் அறுவரும், நான்முகன் மற்றும் தேவர்களும் வேண்டிக்கொண்டதால் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளினார் எனவும், சூரபன்மனை சம்காரம் செய்து மீண்டும் தனக்கு அரசாட்சி அளித்த முருகப் பெருமானுக்கு இந்திரன் தனது மகள் தெய்வானையை மணம்முடித்த இடம் எனவும் கூறப்படுகிறது.

இத்தலத்தைப் பற்றி திருமுருகாற்றுப்படை, அகநானூறு, கலித்தொகை, பரிபாடல், மதுரைக்காஞ்சி, தேவாரம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், மும்மணிக்கோவை உள்ளிட்ட ஏராளமான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைவ சமயக் குறவர்களான சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமான் நாயனார் ஆகியோர் இத்தலத்தை வழிபட்டுள்ளனர்.

பரங்கிரிநாதர்: இங்குள்ள இறைவனின் பெயர் பரங்கிரிநாதர், இறைவி-ஆவுடைநாயகி.

கோயிலின் தலவிருச்சகமாக கல்லத்தி மரம் லெட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் உள்ளது.

கோயில் அமைப்பு: இது குடைவரைக் கோயிலாகும். 6 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அந்தஸ்து அதிகாரியால் நிர்வகிக்கப்படுகிறது.

வடக்குத் திசை நோக்கி கோயில் அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி மலையின் வடபாதியில் உள்ளது.

திருப்பரங்குன்றம் ஊருக்குள் சென்றதும் சன்னதி தெருவில் மயில் மண்டபம் உள்ளது. அடுத்து 16 கால் மண்டபம் உள்ளது.

கோயில் முகப்பில் ஆஸ்தான மண்டபம் எனும் பெரியமண்டபம் 48 தூண்களுடன் உள்ளது. இங்கு கருப்பண சுவாமி கோயில் மற்றும் பத்ரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு மற்றும் முருகப் பெருமான் தெய்வானை திருமணக்கோலம், மஹாவிஷ்ணு, மகாலெட்சுமி ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன.

பெரிய மண்டபத்தை அடுத்து கோபுரவாயில் உள்ளது. இதில் 150 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுரம் நடுவே கீழ்த்திசை நோக்கி கோபுரவிநாயகர் முன்னிருந்து அருள்பாலிக்கிறார்.

கோபுர வாயிலைக் கடந்ததும் திருவாட்சி மண்டபம் எனும் அழகிய பெரிய கல்யாண மண்டபம் உள்ளது. இது ஆறுகால் மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது,

இதற்கு கிழக்கே லெட்சுமி தீர்த்தம் உள்ளது. இங்கு பக்தர்கள் மீனுக்கு பொறி உணவு போடுவது வழக்கம்.

தீர்த்தத்தின் மேல்புறம் வல்லப கணபதி, மடைப்பள்ளி, சன்னியாசித் தீர்த்தம் ஆகியவை உள்ளன. அருகே நந்தவனம் உள்ளது.

கம்பத்தடி மண்டபத்தில் கொடிமரம் உள்ளது. நந்தி, மயில், மூஷிகம் ஆகிய உருவங்களும் அமைந்துள்ளன.

மண்டப தென்மேற்கில் உற்சவர் மண்டபம் உள்ளது. தென்கிழக்கில் 100 அடி நீளமுள்ள சுரங்கப்பாதை உள்ளது. கம்பத்தடி மண்டபத்திலிருந்து மேலேறிச் செல்லும் வாயிலின் கிழக்குப் பக்கத்தில் அதிகார நந்தீஸ்வரர், காலகண்டி அம்மையார், மேற்குப் பக்கத்தில் இரட்டை விநாயகர் உள்ளனர்.

அடுத்துள்ள மகாமண்டபத்தில் மேற்புறம் கோவர்த்தனாம்பிகையின் தனிக்கோயில் உள்ளது. கீழ்ப்புறம் ஆறுமுகப் பெருமான் சன்னதி உள்ளது.

அறுபத்து மூவர், நால்வர் திருவுருவம், செந்திலாண்டவர், மற்றும் சனி பகவானின் தனி உருவமும் இங்குள்ளன. இக்கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை.

கருவறை: 3 வாயில்களுடன் அர்த்தமண்டபம் உள்ளது. இதில், பரங்கிரிநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை (கொற்றவை) மற்றும் முருகப் பெருமான் வடக்கு நோக்கியும், பவளக் கனிவாய்ப் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.

முருகப்பெருமான் கருவறைக்குள் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். கருவறைக்கு மேற்கில் இடப்பக்கம் தெய்வானையும், வடப்பக்கம் நாரதரும் இடம் பெற்றுள்ளனர்.

தீர்த்தம் : கோயிலின் கிழக்கே 1 கி.மீ. தூரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. மலை அடிவாரத்தில் சத்திய தீர்த்தம் உள்ளது. இதில் தைமாத தெப்பத்திருவிழா நடைபெறும்.

பூஜைகள்: கோயில் நித்திய பூஜைகள் காமிக ஆகமப்படியும், திருவிழாக்கள் காரண ஆகமப்படியும், கந்த சஷ்டி திருவிழா குமார தந்திரப்படியும், மூலஸ்தான பெருமானுக்கு ஆஜிதாகமப்படியும் பூஜைகள் நிகழ்கின்றன.

எட்டுக்கால பூஜைகள் தினமும் நடைபெறுகின்றன. காலையில் கோபூஜை- 5.15, திருவனந்தல்-5.30, விழா பூஜை-7.30, காலசந்தி-8, திருக்காலசந்தி-10.30, உச்சிகாலம் (பகல்)-12.30, மாலையில் சாயரட்சை -5.30, அர்த்தசாமம்-9.15, பள்ளியறை-9.30.

மலை மீதுள்ள அருள்மிகு காசிவிசுவநாத சுவாமிக்கு காலை 9 மணிக்கு நித்ய பூஜை நடைபெறும். கால பூஜைக்கு தினமும் சரவணப் பொய்கையிலிருந்து தீர்த்தம் எடுத்து யானை மீது அமர்த்தி பலபீடத்துக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருவிழாக்கள்: சித்திரை- முருகப்பெருமானுக்கு தங்கக் கவசம் சாற்றுதல், மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாண விழாவுக்குப் புறப்படுதல்.

வைகாசி- வசந்தவிழா (விசாகம்), பாலாபிஷேகம், கந்தசஷ்டி மற்றும் ஆடிப்பூரம், ஆடிக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஐப்பசி பூரம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவரங்கள், திருக்கார்த்திகை, திருப்பள்ளி எழுச்சி (மார்கழி), ஆரூத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, தெப்பத் திருவிழா, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனிப் பெருவிழா, ஆனி ஊஞ்சல், மொட்டையரசுத் திருவிழா, ஆனி முப்பழத் திருவிழா.

கோயிலைச் சுற்றி தென்பரங்குன்றம் மற்றும் சமணர் குகைகள் உள்ளன. மயில்களின் காப்பகமும் செயல்பட்டுவருகிறது. கோயில் பகுதியில் பசுமடம் உள்ளிட்டவையும், வேதபாடசாலையும் செயல்படுகின்றன.

போக்குவரத்து வசதிகள்: கோயிலுக்கு மதுரையிலிருந்து செல்லலாம். திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் இருந்தாலும் குறிப்பிட்ட ரயில்களே நிற்கும்.

மதுரை மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றிலுந்து பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் பூஜைகள், தங்கத் தேர் இழுத்தல் மற்றும் அன்னதானத் திட்டத்தில் சேருவோர் அலுவலகத் தொலைபேசி எண்: (0452) 2482248, விடுதி தொலைபேசி: (0452) 3952198 மற்றும் கோயில் துணை ஆணையர் மற்றும் நிர்வாக அலுவலர் தொலைபேசி: (0452) 2484359 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

கோயிலின் இணையதள முகவரி: WWW.thiruparankuundramtemple.org

மின்னஞ்சல் முகவரி:

thiruparankundramdc@sancharnet.in

  கோயில் வங்கிக் கணக்கு எண்:

ICICI Bank Thiruparankundram 600901009569ஆகும்.

திருமண கோலத்தில் சுப்பிரமணிய சுவாமியுடன் தெய்வானை

பங்குனிப் பெருவிழாவுக்காக கம்பத்தடி மண்டபத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை முன்னிலையில் நடைபெறும் கோயில் கொடியேற்றம்

பங்குனித் திருவிழாவின்போது அருள்மிகு தெய்வானையுடன் காட்சி தரும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி

ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் கோயில் எழில்மிகு தோற்றம்

அன்னவாகனத்தில் அருள்தரும் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மன்

திருவிழா நாள்களில் சர்வ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மன்

அருள்மிகு சண்முகருக்கு நடைபெறும் பாலாபிஷேகம்

பூப்பல்லக்கில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மன்

அருள்மிகு தெய்வானையுடன் வீதி உலாவரும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி

 பூத வாகனத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி-தெய்வானை அம்மன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com