இந்துக்களின் தென்னகத்தின் காசி முக்கூடல் சங்கமத்தில் பவானி சங்மேஸ்வரர் கோயில்

முக்கூடல் நகரான பவானியில் தன்னைத் தேடி வரும் பக்தர்களின் குறைகளைப் போக்கி அருள் பாலித்து வருகிறார் பவானி, காவிரி கரைகளின் நடுவில் அமர்ந்திருக்கும் சங்கமேஸ்வரர். வடமாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதி
இந்துக்களின் தென்னகத்தின் காசி முக்கூடல் சங்கமத்தில் பவானி சங்மேஸ்வரர் கோயில்
Published on
Updated on
2 min read

முக்கூடல் நகரான பவானியில் தன்னைத் தேடி வரும் பக்தர்களின் குறைகளைப் போக்கி அருள் பாலித்து வருகிறார் பவானி, காவிரி கரைகளின் நடுவில் அமர்ந்திருக்கும் சங்கமேஸ்வரர்.

வடமாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கூடுமிடம் திரிவேணி சங்கம். தென்னகத்தில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதி ஆகியன சங்கமிக்கும் இடம் பவானி கூடுதுறை.

சங்ககிரி, நாககிரி, மங்கலகிரி, வேதகிரி, பதுமகிரி என ஐந்து மலைகளுக்கு நடுவிலும், இரு நதிகளின் மத்தியிலும் அமையப் பெற்றது இக்கோயில்.

சைவ, வைணவ வழிபாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் ஷ்ரிவேதநாயகியம்மன் உடனமர் சங்கமேஸ்வரர், ஷ்ரிசெüந்திரவள்ளித் தாயார் உடனமர் ஷ்ரிஆதிகேசவப் பெருமாள் இக்கோயிலின் உறைவிட தெய்வங்கள். தல விருட்சம் இலந்தை மரம்.

அருணகிரி நாதர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தில் கொங்கு நாட்டில் பரவலாக உள்ள பல்லவர் கால கட்டடக் கலையைக் காணலாம். சோழ மன்னன் கரிகாலன், இவரைத் தொடர்ந்து, 1640-ம் ஆண்டுகளில் கெட்டிமுதலி எனும் குருநில மன்னரும் திருப்பணி வேலைகள் செய்துள்ளனர்.

தமிழ் ஆண்டு பிறப்பும், தொடர்ந்து நடைபெறும் சித்திரைத் திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படும். முக்கூடலில் மூழ்கினால் தீங்கு நேராது என்பது என்பதால் ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, கிரகண காலங்களில் திரளான பக்தர்கள் கூடுதுறையில் குளித்து இறைவனை வழிபடுவர்.

இங்குள்ள அமிர்தலிங்கேஸ்வரர் கோயிலில் குழந்தைப் பாக்கியம் இல்லாதோர் அமுதலிங்கத்தை எடுத்து வலம் வந்தால் மகப்பேறு அடைவர் என்பது நம்பிக்கை.

சபரிமலை செல்லும் பக்தர்கள் சங்கமேஸ்வரரைத் தரிசித்து பின்னர் பயணத்தைத் தொடருவர். சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள், பயணிகள் என ஆயிரக்கணக்கில் வருவர்.

இக்கோயிலில் காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 8-க்கு காலை சாந்தி, உச்சிக்காலம் 12 மணி, இடைக்காலம் மாலை 4.30 மணி, சாயரட்சை 5.15 மணி, அர்த்த ஜாமம் 7.30 மணி என ஆறு காலப் பூஜைகள் நடைபெறும்.

ஆங்கிலேயர் ஆட்சியில் சேலம், கோவை மாவட்டத் தலைநகராக விளங்கியது பவானி நகரம். பவானிக்கு மேலும் புகழ் சேர்ப்பது காளிங்கராயன் அணை. வெள்ளோட்டைச் சேர்ந்த காலிங்கராயன் என்பவர் பவானி ஆற்றில் அணையைக் கட்டியதோடு, 90 கி.மீ. தூரத்துக்கு கால்வாயும் வெட்டினார்.

கி.பி.1253-ல் தொடங்கிய இப்பணி 1265-ல் முடிந்தது. இதன்மூலம் தற்போது 14 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

பக்தர்களின் துயர் தீர்க்கும் இக்கோயில் ஈரோட்டிலிருந்து 15 கி.மீ. மற்றும் கோவையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இணைய தள முகவரி: www.bhavanisangameshwarartemple.org.  ஈ-மெயில்: koodalsangameshwarar @ sancharnet.in.

 ஆங்கிலேயர் வழங்கிய தந்தப் பல்லக்கு

 ஆங்கிலேயர் ஆட்சியில் சேலம், கோவை மாவட்டத் தலைநகராக இருந்த பவானியில் கடந்த 1802-ல் வில்லியம் காரோ ஆட்சியராக பணி புரிந்தார். தற்போது பயணியர் விடுதியாக உள்ள பங்களாவில் தங்கியிருந்த இவர் வேதநாயகியின் புகழைக் கேள்விப்பட்டு, தரிசிக்க விரும்பியுள்ளார்.

 மற்ற மதத்தவர் கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை என்பதால் அம்மன் சன்னதிக்கு நேரெதிரில் மூன்று துவாரங்கள் செய்து அதன் வழியாக அம்மனை வழிபட்டு வந்தார் கலெக்டர் வில்லியம்.

 இவர் பங்களாவில் தூங்கிக் கொண்டிருந்தபோது வேதநாயகி போன்ற தோற்றத்துடன் கனவில் வந்த பெண், படுக்கையை விட்டு எழுந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.

 இவர் வெளியேறி சில நிமிடங்களில் பங்களா கூரை இடிந்து விழுந்தது. அம்மனின் அருளால் உயிர் தப்பிய வில்லியம் காரோ யானை தந்தத்தினாலான பல்லக்கு கட்டிலை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com