தீராத நோய்களையும் தீர்க்க திருவுளங்கொண்ட இறைவன் மந்திரமும், தந்திரமும், மருந்துமாகி ஸ்ரீ வைத்தியநாதர் என்னும் திருப்பெயர் தாங்கி, வைத்தியநாதனாக எழுந்தருளிய திருத்தலம் வைத்தீஸ்வரன் கோயில்.
இடம் - தலப்பெயர்கள்:
புள்ளிருக்குவேளூர், சடாயுபுரி, வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி, அங்காரகபுரம், அம்பிகாபுரம் எனப் பல்வேறு பெயர்களைக் கொண்ட வைத்தீஸ்வரன் கோயில் நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ளது.
இறைவன் - இறைவி திருநாமங்கள்:
இத்தலத்து இறைவன், ஸ்ரீ வைத்தியநாத சுவாமி என்னும் திருப்பெயருடனும், இறைவி ஸ்ரீ தையல்நாயகி என்னும் திருப்பெயருடன் அருள்பாலிக்கின்றனர்.
சிவ துரோகம் செய்த தட்சனின் உடலும், தலையும் ஒன்று சேர அருளியது, அங்கார பகவானை பீடித்திருந்த சரும நோய் நீக்கியது உள்ளிட்ட ஏராளமான அருள்புகழ் கொண்டது இத்திருத்தலம்.
இத் திருத்தலத்தில் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமி, ""எவ்வாறு துதிப்பேன்'' என மயங்கிய குமரகுருபர அடிகளுக்குப் ""பொன்பூத்தகுடுமி'' என அடியெடுத்துக் கொடுத்துப் பிள்ளைத்தமிழ் பாட அருளினார் எனத் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழிபட்டவர்கள்:
சடாயு, வேதம் (ரிக்), முருகப்பெருமான், சூரியன், அங்காரகன், பிரம்மன், சதானந்தர், ராமர், கலைமகள், பூமகள், துர்க்கை, சிவசன்மன், துருவாசன் முதலானோர் வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம்.
திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள், காளமேகப் புலவர், ராமலிங்க சுவாமி ஆகியோர் இத்தலத்து இறைவனைத் தரிசித்துப் பாடல்கள் பாடியுள்ளனர்.
திருநாவுக்கரசர் இத் திருத்தலத்துக்கு எழுந்தருளிய வரலாற்றுக் குறிப்புகள் இல்லாவிட்டாலும், தேவாரத்தில் ஐந்தாம் திருமுறையில் திருக்குறுந்தொகை "அடங்கல் முறையில்' திருநாவுக்கரசரால் இத்தலத்தின் சிறப்புகள் பாடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சடாயு குண்டம்:
சடாயுவின் வேண்டுகோள்படி ராமபிரான் இத் திருத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் சடாயுவின் உடலைத் தகனம் செய்த இடம், இக்கோயிலில் "சடாயு குண்டம்' என்ற பெயருடன் உள்ளது.
சித்தாமிர்த தீர்த்தம்:
பிறந்தாலும், இறந்தாலும் போக மோட்சங்கள் அருளும் தலமாகப் போற்றப்படும் இத்தலத்தில் 6 தீர்த்தங்கள் உள்ளன. அதில், முதன்மையானது சித்தாமிர்தத் தீர்த்தம்.
சதானந்த முனிவரின் சாபம் காரணமாக, இத் தீர்த்தத்தில் தவளை, பாம்புகள் இல்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
சித்தாமிர்த தீர்த்தம் தவிர, கோதண்ட தீர்த்தம், கெüதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அங்கசந்தான தீர்த்தம் ஆகியனவும் இத் தலத்தில் உள்ளன. மேலும், ஆதி வைத்தியநாதர் கோயில் அருகே உள்ள "வேம்பு' தலவிருட்சமாக உள்ளது.
பூஜைகள்:
இத்திருக்கோயிலில், தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் கார்த்திகைத் திருநாள், கந்த சஷ்டி போன்ற விசேஷ நாள்களில் மட்டுமே ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும்.
அர்த்தஜாம பூஜையின்போது ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்னரே, சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். இதற்கு "புழுகாப்பு' எனப் பெயர் வழங்கி வருகிறது. மேலும், இத்தலத்தில் புழுகாப்பு தரிசனம் மிகவும் சிறப்புமிக்கதாகக் கூறப்படுகிறது.
செவ்வாய் மற்றும் கிருத்திகை தினங்களிலும், உற்சவ காலங்களிலும் முருகப்பெருமானுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. கிருத்திகை தினங்களில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நவரத்ன கவசமும் அணிவிக்கப்படுகிறது.
பிற நாள்களில் சுவாமிகளுக்குத் தங்கக் கவசம் அணிவித்துத் தரிசிக்க விரும்புவோர், முன்னதாகவே அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும்.
அங்காரகத் தலம்:
நவக்கிரகங்களில் ஒருவரான (செவ்வாய்) அங்காரகனைப் பீடித்திருந்த சரும நோயை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி தீர்த்தருளியதால் இத்தலம் அங்காரகத் தலமாகப் போற்றப்படுகிறது. செவ்வாய்க்கிழமைதோறும் ஆட்டுக்கிடா வாகனத்தில் அங்காரகன் பிரகார உலா நடைபெறுகிறது.
திருக்கயிலாயப் பரம்பரைத் தருமபுர ஆதீனத்தின் பரிபாலனத்துக்கு உட்பட்டது இத்திருக்கோயில்.
வழித்தடம்:
சென்னையிலிருந்து தல யாத்திரை வருபவர்கள், கடலூர் - சிதம்பரம் - சீர்காழி வழியாக வைத்தீஸ்வரன் கோயிலை அடையலாம். திருச்சியிலிருந்து வருவோர், தஞ்சாவூர் - கும்பகோணம் - மயிலாடுதுறை வழியாக வைத்தீஸ்வரன் கோயிலை வந்தடையலாம். இந்த இரண்டு வழித் தடங்களிலும் தொடர்ந்து பேருந்து போக்குவரத்துகள் உள்ளன. (தற்போது ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது).
இத்திருத்தலத்தைச் சுற்றி, சத்திரங்கள், மடங்கள், கட்டளை விடுதிகள் பல உள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய தனியார் விடுதிகளும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.