

"மனிதர்களில் இத்தனை நிறங்களா?' என்பது ஆண்டாண்டு காலமாக வியப்புடன் கேட்கப்பட்டு வரும் கேள்வி. உலக மக்களில் ஒவ்வொரு தனி மனிதரும் உடலின் நிறத்தைப் போலவே, குண ரீதியாக ஒவ்வொரு நிறமுடையவர்களாக அமைந்து இருப்பது ஆச்சர்யமொன்றுமில்லை.
சிந்தனையில், செயலில், வெளிப்படுத்துதலில் வித்தியாசப்பட்டுக் காணப்படுகின்றனர். "ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டுத் துயருறுவோர்களுக்கும் குரல் கொடுக்க ஒரு வர்க்கம்; அக்குரலை ஒடுக்க ஒரு வர்க்கம்! அடிமையாக ஒரு வர்க்கம்; அவர்களை அடிமைப்படுத்த ஒரு வர்க்கம்! ஆட்சி புரிய ஒரு வர்க்கம்; அடங்கிப் போக ஒரு வர்க்கம்!' என நாகரீகம் வளராத காலத்திலும், நாகரீகம் வளர்ந்ததாகக் கூறப்படும் இன்றைய நவீனக் காலத்திலும் இருப்பதை வியப்பதற்கில்லை.
ஆனால் மேற்கண்ட சமத்துவமற்ற சமுதாய மக்களில் "யார், யார் பேறு பெற்றவர்கள்?' என்று இறைமகன் இயேசு, தன்னைத் தேடி வந்த மக்களின் முன் மிக ஆழமான கருத்துக்கள் நிறைந்த உரையை மலைப் பிரசங்கமாக முழங்கினார். இது புனித விவிலியத்தின் "புதிய ஏற்பாடு' பகுதியில் இடம் பெற்று இன்றளவும் பலரால் பேசப்பட்டு வருகிறது.
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர்கள் அவரருகே வந்தனர். அப்போது திருவாய் மலர்ந்து அவர் கற்பித்தவையாவன :
* ""ஏழை எளியவர்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
* துயருறுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
* கனிவுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
* நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
* இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் (விண்ணுலகில்) இரக்கம் பெறுவர்.
* தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
* அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் "கடவுளின் மக்கள்' என அழைக்கப்படுவர்.
* நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை-பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்''
பிறகு இயேசு தம் திருத்தூதர்களை நோக்கித் திரும்பி கீழ்க்கண்டவாறு சொன்னார் :
""நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி, மனிதர் முன் ஒளிர்க!
அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்'' என்றார்.
மேலும், ""திருச்சட்டத்தையோ, இறை வாக்குகளையோ நான் அழிக்க வந்தேன்' என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்! "விண்ணும், மண்ணும் ஒழிந்து போகும் முன், திருச் சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ, ஒரு புள்ளியோ ஒழியாது' என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர், விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவர். (மத்தேயு 5:1-19)
ஆம்! மாக்களாகிய நாம் மக்களாகி மண்ணுலகிலும், விண்ணுலகிலும் சிறந்து விளங்க வேண்டுமெனில் உவர்ப்புப் போகாத "உப்பு' போல இருக்க வேண்டும். உப்பு நாம் உண்ணுகின்ற உணவிலே கலந்தது. நம் உடலிலே கலந்தது. நம் உயிரிலே கலந்தது. இன்றைக்கும் கிறிஸ்துவ தேவ ஆலயங்களில் உப்புத் தண்ணீரைக் கொண்டு மக்களை குருக்கள், இறை இயேசுவின் பெயரால் ஆசீர்வதிக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.
அதே வேளையில் நாம் செய்கின்ற செயல்கள் அறச் செயல்களாகப் பரிணமித்து குன்றின் மேலிட்ட விளக்காக மக்களுக்குப் பயன் தர வேண்டும் எனக் கூறுகிறார் இயேசு. நாமும் பயன் தரத்தக்க அறச் செயல்களைச் செய்ய முயன்று இறை இயேசுவின் அன்பையும், கருணையையும் பெறுவோமாக!
- வி. ரூஃபஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.