48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

என்றும் திறந்திருக்கும் பரமபத வாசல்!

"விழுப்புரம்' என்ற ஊரை அறியாத தமிழர்கள் எவரும் இல்லை. ஆயின் இங்குள்ள ஒரு திருமால் ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் பதிக்கப்பட்டுள்ள ஒரு செப்பேட்டில் "விழுப்புரம் என்று வழங்கும் ஜனகாபுரி' என்று குறிப்பிடப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:52 am

"விழுப்புரம்' என்ற ஊரை அறியாத தமிழர்கள் எவரும் இல்லை. ஆயின் இங்குள்ள ஒரு திருமால் ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் பதிக்கப்பட்டுள்ள ஒரு செப்பேட்டில் "விழுப்புரம் என்று வழங்கும் ஜனகாபுரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் குடி கொண்டுள்ள தாயாரின் திருநாமம் ஜனகவல்லி என்று இருப்பதால் "ஜனகாபுரி' ஆயிற்றோ?

  கி.பி. 640ல் பல்லவர் காலத்து நிருபதுங்க வர்மனது ஆட்சிக் காலத்தில், "விஜய நிருபதுங்க ஜெயந்தாங்கி சதுர்வேதி மங்கலம்' என்று விழுப்புரம் அழைக்கப்பட்டுள்ளது. கி.பி. 1015ல் முதலாம் ராஜராஜனின் பட்டப்பெயரைத் தாங்கி, "ஜனநாத சதுர்வேத மங்கலம்' என்றும் அழைக்கப்பட்டது இன்றைய விழுப்புரம். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலம் முதல், "விழுப்புரம்' என்ற பெயரே நிலை பெற்றது.

  "மதுரையை வெற்றி கொண்ட கோப்பரகேசரி' என்ற புகழ்ப் பெயருடைய முதலாம் பராந்தக சோழன் கட்டிய திருமால் கோயிலைப் பற்றிதான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளோம். இன்று அக்கோயில் புத்தொளி பெற்று, புனித நன்னீராட்டு விழா கண்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி!

  கிழக்கு நோக்கிய திருக்கோயிலின் நுழைவாயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் அழகு சேர்க்கிறது. உள்ளே நுழைந்ததும் 40 அடி உயரக் கொடி மரம், நம்மை எதிர் கொள்கிறது. 1890ம் ஆண்டில், இந்நகரத்து துளுவ வேளாளர் மரபினரும், கருணீக மரபினரும் ஒன்று சேர்ந்து இதனை நிறுவினராம்.

  வெளி மண்டபத்தின் முன்னே, பழமை வாய்ந்த, மேற்கு நோக்கியபடி சேவை சாதிக்கும் வீர ஆஞ்சநேயரின் சந்நிதி உள்ளது. அனுக்ரக மூர்த்தியான அனுமன், இங்கே பக்தர்களின் தோஷங்கள் அனைத்தையும் நீக்கி அருளுகிறார்.

  அடுத்து ஜனகவல்லி தாயார் சந்நிதி. அங்கே தாயார், அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்க, அருகிலேயே பலகைச் சிற்பமாக பல்லவர் காலத்து திருக்கோயில் என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் "விஷ்ணு துர்க்கை' காணப்படுகிறாள். போருக்குச் செல்லுமுன் மன்னர்கள் "கொற்றவை வழிபாடு' செய்வது பண்டைய மரபு. எட்டு கரங்களுடன், நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் இந்த விஷ்ணு துர்க்கை.

  அடுத்துப் பிராகாரத்தை வலம் வருகையில், பதினாறு கரங்களுடன், மூன்று நயனங்களுடன், கிழக்கு முகமாகச் சேவை சாதிக்கிறார் சுதர்ஸனர். அவரது திருமேனியின் பின்புறம் நான்கு கரங்களுடன் யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் சந்நிதி இது.

  வடக்குப் பிராகாரத்தில் ஆண்டாள் சந்நிதி உள்ளது. தெற்கு நுழைவாயில் அருகே விஷ்வக்சேனர்! அடுத்து, தெற்கு முகமாக சேவை சாதிக்கிறார் வரதராஜப் பெருமாள். ஒன்பது அடி உயரத்தில், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக, கம்பீரமான கோலம் அது!

  ஜெய விஜயர்களைக் கடந்து, மகா மண்டபத்தில் வீற்றுள்ள ஆழ்வார்கள், ஆச்சாரியர்களை ஒரே மேடையில் தரிசிக்கிறோம். கிழக்கு முகமாக லட்சுமிநாராயணரோடு, கண்ணாடி பதிக்கப்பட்ட பள்ளியறையையும் காண்கிறோம்.

அமர்ந்த கோலத்தில் சேவை!

  பிரதானக் கருவறையில் வைகுந்தவாசப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். சோழர் காலத்துக் கருங்கல் சிற்பம், எழிற் களஞ்சியமாக நம்மை வியக்க வைக்கிறது. வலது திருவடியை பத்ம பீடத்திலும், இடது திருவடியை மடித்தும், அபய ஹஸ்தராக, சங்கு-சக்கரம் ஏந்தியபடி, கிழக்கு திருமுக மண்டலமாக, தேவியர் இருவரோடு காட்சி தருகின்றார் பெருமாள். அந்தராளத்தில் காணப்படும் இரு தூண்கள், "வைகுண்டத் தூண்கள்' என்று அழைக்கப்படுகின்றன. எம்பெருமானை சேவித்த பின்னர், பரம பத வாசல் வழியே வந்து, கருடாழ்வாரையும் தரிசிக்கிறோம்.

கோலாகல உற்சவங்கள்

  ஆண்டில் ஒரு நாள் மட்டும், அதாவது வைகுந்த ஏகாதசியன்று மட்டுமே "பரமபத வாசல்' திறப்பது பெருமாள் கோயில்களில் வழக்கம். ஆனால், விழுப்புரத்து வைகுந்தவாசனின் கோயிலில் "பரமபத வாசல்' என்றும் திறந்திருப்பது, தனிச் சிறப்பு ஆகும்.

  ஆங்கில ஆண்டின் முதல் நாளன்று, வைகுந்தவாசர் ராஜ அலங்காரத்தோடு சிம்மாசனத்தில் அமர்ந்தபடி சேவை சாதிப்பது, கோலாகலமாக இருக்கும். ரத சப்தமி தினத்தன்று ஒரே நாளில் எம்பெருமான் ஏழு வித வாகனங்களில் தரிசனம் தருவது கண்கொள்ளாக் காட்சி ஆகும். தவிர, இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பத்து நாட்கள் அத்யயன உற்சவமும், மாசி மாதத்து திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன.



ராமனாக காட்சி தரும் வைகுந்தவாசன்

  ஸ்ரீராம நவமி உற்வத்தில் பதினோரு நாட்களும் வைகுந்தவாசப் பெருமாள் ஸ்ரீராமனாகக் காட்சி தரும் அபூர்வ சேவையைக் காணலாம். வைகாசியில் பிரம்மோற்சவம், ஆடிப் பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம், புரட்டாசியில் ஸ்ரீநிவாஸராக வைகுந்தவாசர் காட்சி தர மூன்றாம் சனிக்கிழமை நடைபெறும் சஹஸ்ர தீப ஊஞ்சல் சேவை ஆகியவை பிரமிப்பை ஏற்படுத்தும். ஐப்பசியில் பவித்ரோத்ஸவமும், கார்த்திகை தீபமும், இதர சிறப்பு உற்சவங்கள் ஆகும்.

புத்தொளி கண்ட ஆலயம்

  வரலாற்றுச் சிறப்பு கொண்ட வைகுந்தவாசப் பெருமாள் திருக்கோயிலில் திருப்பணிகள் நிறைவேறின. கடந்த 26-ம் தேதியன்று மகா சம்ப்ரோக்ஷணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. வைகானச ஆகம முறைப்படி யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று, பக்த கோடிகள் திரளாகப் பங்கேற்று வைகுந்தவாசனின் திருவருள் பெற்று மகிழ்ந்தார்கள்.

ராம நாம ஸ்தூபி!

  சேவார்த்திகளால் பக்தி சிரத்தையுடன் எழுதப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கோடி ராமநாமங்கள் அடங்கிய நோட்டுப் புத்தகங்கள் உள்ளே வைக்கப்பட்ட "ராமநாம ஸ்தூபி' ஒன்றும் நூதனமாக அமைக்கப்பட்டது மகா சம்ப்ரோக்ஷணத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.