தாமோதரத் திருவிழா!

  "கெüடிய வைணவத்தில்' நான்கு மாதங்கள் முக்கியமானவை. இந்த "சாதுர் மாத' காலத்தில் கடைசியாக வருவது "தாமோதர மாதம்' ஆகும். தமிழ் மாதங்களில் கார்த்திகையைப் போல் இந்த தாமோதர மாதத்தில் பகவானின் ஆலயத்தையும், ப
தாமோதரத் திருவிழா!

  "கெüடிய வைணவத்தில்' நான்கு மாதங்கள் முக்கியமானவை. இந்த "சாதுர் மாத' காலத்தில் கடைசியாக வருவது "தாமோதர மாதம்' ஆகும். தமிழ் மாதங்களில் கார்த்திகையைப் போல் இந்த தாமோதர மாதத்தில் பகவானின் ஆலயத்தையும், பூஜை அறையையும் நெய் தீபங்களால் அலங்கரிப்பார்கள். இவ்வருடம் அக்டோபர் 4 முதல் நவம்பர் 2 (புரட்டாசி 18 முதல் ஐப்பசி 16) வரை தாமோதர மாத விரதம் அனுசரிக்கப்படுகிறது.

  கெüடிய வைணவ மஹான்களில் முக்கியமானவர், "கெüராங்கர்' எனப்படும் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர். இவர் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் வங்காளத்திலுள்ள "நவத்வீபம்' என்னுமிடத்தில் அவதரித்து, பாரதம் முழுவதும் ஹரி நாமத்தின் பெருமையைப் பரப்பினார். இறுதியில் "புரி'யில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதருடன் ஐக்கியமானார்.

தாமோதர மாதம் என்பதன் பொருள் :

  தாமோதரர் என்றால் ஸ்ரீகிருஷ்ணரை குறிக்கும். "தாம' என்றால் கயிறு. "உதர' என்றால் வயிறு. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, அன்னை யசோதா தேவி கயிற்றால் உரலில் கட்டியதால் கண்ணனுக்கு "தாமோதரன்' என்ற திருநாமம் உண்டானது. இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டும், கிருஷ்ணரின் தூய பக்தையான ராதா ராணியை வழிபடும் பொருட்டும் "தாமோதரத் திருவிழா' கொண்டாடப்படுகிறது. பாத்ம புராணம், ""இம்மாதம் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும். இம்மாதத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு பக்தியுடன் சிறிதளவு பக்திசேவை செய்தால்கூட கிருஷ்ணர், தன் திவ்ய ஸ்தலத்தையே அப்பக்தனுக்கு வழங்குவார்'' என்று கூறுகிறது. அதேபோல், ""புண்ணிய மாதங்கள் அனைத்திலும் அதிபுண்ணிய மாதம் தாமோதர மாதம்'' என்று ஸ்காந்த புராணமும் இம்மாதத்தின் மகிமைகளை பலவாறு விவரிக்கிறது.

விழாக்கள் நிரம்பிய மாதம் :

  பல முக்கிய நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடந்துள்ளன. "தீபாவளி'யாகக் கொண்டாடும் "நரக சதுர்தசி' -நரகாசுரன் வதம், "லஷ்மி பூஜை', "பகுளாஷ்டமி' என்னும் கிருஷ்ணருக்காக ராதா ராணி ஏற்படுத்திய தீர்த்தக் குண்டம் உருவான நாள், "துளசி-சாளக்கிராம திருக்கல்யாணம்', "கோவர்த்தனகிரி'யை தூக்கி நிறுத்தியது உள்ளிட்ட பல "லீலைகள்' இந்த மாதத்தில்தான் நடைபெற்றுள்ளன.

தாமோதர விரதம் :

  இது அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதமாகும். தாமோதர மாத விரதத்தைப் பின்பற்றுவோர் அளவிட முடியாத மிக உயர்ந்த ஆன்மீகப் பலனைப் பெறுகின்றனர் என்று வேத சாஸ்திரங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.

  மிகச் சிறந்த பக்தரான மாமுனிவர் நாரத ரிஷி, ""இந்த தாமோதர மாதம் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானது; இம்மாத விரதத்தினைக் கடைபிடிக்காதவரிடம் இருந்து கிருஷ்ணர் தன் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார் (அதாவது அவர்களை விரும்புவதில்லை)'' என்று குறிப்பிடுகிறார். அந்தளவிற்கு மிக முக்கியமானது இந்த விரதம். உலகத்தின் ஆன்மீகத் தூதுவரான ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதா அவர்கள் கூறும்பொழுது, ""சாதுர் மாதம் என்றழைக்கப்படும் நான்கு மாதங்களும் முக்கியமானவையாகும். அதிலும் குறிப்பாக "தாமோதர மாதம்' என்றழைக்கப்படும் இந்தக் கடைசி மாதம் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானது'' என்று குறிப்பிட்டுள்ளார். இனி அந்த விரதத்தைக் கடைபிடிக்கும் முறையைக் காண்போம்.

விரதம் கடைபிடிக்கும் முறை :

  இவ்வருடம் அக்டோபர் மாதம் 4-ம் தேதி ஞாயிறு (பௌர்ணமி) முதல், நவம்பர் 2ம் தேதி திங்கள் (பௌர்ணமி) வரை இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது. 1. உணவுக் கட்டுப்பாடு, 2. கிருஷ்ணருக்கு தினசரி நெய் தீபம் காட்டுவது, 3. "ஹரே கிருஷ்ண' மஹாமந்திர ஜபத்தை இயன்ற அளவு செய்வது ஆகியன இந்த விரதத்தின் முக்கிய மூன்று விதிமுறைகளாகும்.

உணவுக் கட்டுப்பாடு :

  அசைவ உணவு வகைகளைப் பொதுவாக எப்போதுமே தவிர்க்க வேண்டும். இது தவிர இம்மாதம் முழுவதும் உளுந்து மற்றும் உளுந்தால் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்களை விரதமிருப்போர் சாப்பிடக் கூடாது. ஏகாதசி நாட்களில் வழக்கம்போல் தானிய உணவு சேர்க்கக் கூடாது.

நெய் தீபத்தின் பெருமை :

  இம்மாதம் முழுவதும் தமோதரரான ஸ்ரீகிருஷ்ணருக்கு நெய் விளக்கு தீபம் காட்டுவது மிகவும் சிறந்தது என்று ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். ""யார் ஒருவர் இம்மாதத்தில் தினசரி நெய் விளக்கு தீபம் காட்டுகிறாரோ அவருடைய பல கோடானு கோடி பாவங்கள்கூட அவரிடமிருந்து நீங்கி விடுகின்றன'' என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது. இஸ்கான்-ஹரே கிருஷ்ணா கோயில்களில் தினசரி மாலை, தீபம் காட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  தாமோதர மாதத்தில் தங்கள் கரங்களால் நேரடியாகப் பகவானுக்கு தீபம் காட்டுபவர்கள் கிருஷ்ணரின் மிகச் சிறந்த திருவருளுக்குப் பாத்திரமாவார்கள். மற்றவர்கள் இதேபோன்று பகவானுக்கு தீபம் ஏற்ற உதவி செய்தால், மேலும் பன்மடங்கு பகவானின் திருவருளை பெறுவர். இம்மாதத்தில் கிருஷ்ண பிரசாத அன்னதானம் செய்வதும் மிக மிக விசேஷமானது.

  தினசரி ஸ்ரீகிருஷ்ணருக்கு சுவையான உணவுப் பதார்த்தங்களைப் படைத்து பிரசாதமாக ஏற்பதுடன், மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். ""தினசரி தீபம் காட்டும்போது "தாமோதர அஷ்டகம்' என்று கூறப்படும் சத்யவிரத முனிவரால் இயற்றப்பட்ட துதியைப் பாடினால் அது தாமோதரரை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தும்'' என்று "ஹரி விலாசம்' என்ற நூல் கூறுகிறது.

மஹாமந்திர ஜபம் :

  ""ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண... கிருஷ்ண, கிருஷ்ண, ஹரே ஹரே! ஹரே ராம, ஹரே ராம... ராம, ராம, ஹரே ஹரே'' என்னும் பதினாறு வார்த்தைகளடங்கிய இந்த மஹாமந்திரத்தை குறைந்த பட்சம் 108 தடவையும், அதிகபட்சம் எவ்வளவு முறையும் உச்சரிக்க முடியுமோ அவ்வளவு முறையும் உச்சரிக்கலாம்.

  ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய சீடரான ஸ்ரீகோஸ்வாமி, ""விரதங்கள் பின்பற்றுவதில் ஹரி நாமத்தை உச்சரிப்பதே முக்கியமானது ஆகும்'' என்று வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் இந்த மஹாமந்திரம், விரதத்தைக் கடைபிடிப்பதற்கான மனநிலை உட்பட அனைத்து நலன்களையும் தரும்.

முழுப் பலனையும் பெற வழி :

  மக்கள் நலன் கருதி இஸ்கான் -ஹரே கிருஷ்ணா கோயில்களில் 30 நாட்களும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தினமும் மாலை 6.30 மணி முதல் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் அனைவரும் பங்கேற்று தங்கள் கரங்களால் ஸ்ரீகிருஷ்ணருக்கு நேரடியாகத் தீபம் காட்டி, பக்திச் சேவைகளில் பங்கேற்று, மஹா மந்திரத்தை உச்சரித்து தாமோதரனின் திருவருளை எப்போதும் பெறலாம்.

- சங்கதாரி தாஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com