ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - பாசுரம்-3

இரண்டாம் பாசுரத்தில் நோன்பினைக் கடைப்பிடிக்க என்ன செய்ய
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - பாசுரம்-3
Published on
Updated on
1 min read

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்: இரண்டாம் பாசுரத்தில் நோன்பினைக் கடைப்பிடிக்க என்ன செய்ய வேண்டும், விலக்க வேண்டியவை எவை, கைக்கொள்ள வேண்டியவை எவை என்றெல்லாம் சொன்ன ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் நோன்பினால் உலகத்துக்கு விளையும் நலன்களை எடுத்துக் கூறுகிறார்.

மகாபலி சக்ரவர்த்தி வார்த்த நீர் கையில் விழுந்தபோதே, ஆகாயம் அளவுக்கு வளர்ந்து தன் திருவடிகளாலே மூன்று உலகங்களையும் அளந்த அந்த உத்தமனின் திருநாமங்களைப் பாடிக்கொண்டு, சுயநலனுடன் எதையும் வேண்டாமல், புருஷோத்தமன் மீது கொண்ட அன்பின் மிகுதியால் நோன்பு நோற்கிறோம். 

நோன்புக்காக இவ்வாறு சங்கல்பம் செய்துகொண்டு நீராடினால் நாடு எங்கிலும் தீங்கு எதுவும் இல்லாமல் சுபிட்சமாக இருக்க மாதம் மும்மாரி பொழியும். அந்த வளமையில், ஆகாயம் அளவுக்கு வளர்ந்து பெருத்துள்ள செந்நெல் பயிர்களின் நடுவே மீன்கள் துள்ள, அழகிய நெய்தலாகிற பூங்குவளை மலரில் விருப்பம் கொண்ட வண்டுகள் மயங்கி உறக்கம் கொள்ள, மாட்டுத் தொழுவத்தில் சலிக்காமல் பொருந்தியிருந்து இரு கைகளாலும் பிடித்து வலிக்க, பசுக்கள் மிகுதியான பாலை வழங்கி, பால் வெள்ளத்தாலே குடங்களை நிறைத்து நீங்காத செல்வம் நிறையும் படி செய்யும். பாவாய் நீ எழு என்று ஆண்டாள் நோன்பின் மகிமையை எடுத்துரைக்கிறார்.

விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com