

கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் புதன்கிழமை கொடியேற்றத்துடன் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா ஏற்பாடுகள் துவங்கின.
தமிழக- கேரள எல்லையான கூடலூர் வனப்பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு லோயர் கேம்ப்-பளியன்குடி வழியாக 5.6 கி.மீ. தூரம் நடந்து செல்லக்கூடிய நடைபாதை உள்ளது. மேலும், கோயிலுக்கு கேரளம் வழியாக 14 கி.மீ. ஜீப்பில் செல்லக்கூடிய வனச்சாலையும் உள்ளது.
இக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை பௌர்ணமி நாளில் 9 மணி நேரம் மட்டுமே கேரள வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.
இந்தாண்டு கோயில் திருவிழா ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறுகிறது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழக-கேரள அரசுகள் விழா முன்னேற்பாடுகள் குறித்த 5 ஆலோசனைக் கூட்டங்களில் 4 கூட்டங்களை நடத்தி முடிந்துள்ளன.
கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லாததால், கோயிலுக்கு நடந்து செல்லும் வழியில் வனப்பகுதியில் பளியங்குடி என்ற இடத்தில், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில், புதன்கிழமை கொடியேற்றம் நடத்தப்பட்டது.
இந்தக் கொடியேற்ற விழாவுக்கு பச்சை மூங்கிலில் கொடிமரம் தயார் செய்து, பூஜை செய்யப்பட்ட கண்ணகி உருவம் பொறித்த மஞ்சள் கொடியை அறக்கட்டளையினர், கேரள ஐயப்ப சேவா சங்கத்தினர், கணபதி பத்ரகாளி சேவா சமிதியினர் ஆகியோர் சேர்ந்து, கொடி மரத்தை நட்டு கொடியேற்றி வைத்தனர்.
முன்னதாக, கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முடிவில், அன்னதானம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.