தீபாவளி திருநாள்;

மகிழ்ச்சியான தீபாவளியை முன்னோர்களுடன் சேர்ந்து செய்வதற்கு ஒப்பான ஒன்றே தீபாவளி படையல்  இதை தீபாவளி அமாவாசைக்கு முன்கூட்டி கடைபிடித்தலாகும். இந்த ஆண்டு தீபாவளி படையலுக்கு உகந்த நாட்கள்.  அக்டோபர் 27, 28, 30,31
தீபாவளி திருநாள்;
Updated on
6 min read

தீபாவளி திருநாள் என்பது ஐந்து நாட்களை உள்ளடக்கிய தொடர் வழிபாடு. இதில் மிக முக்கியமாக நரக சதுர்தசி விளங்குகிறது. தீபாவளி என்பதை  தமிழில் தீப + ஆவளி “தீபவரிசை “ என்றும் பொருள் கொள்ளலாம். செல்வசெழிப்புடன் விளங்க லக்ஷ்மியை தீப ஒளியாக பாவித்து வழிபடலே இந்நாளின் மிகமுக்கிய நோக்கம். இந்த பண்டிகைகளில் விஷ்ணு, லக்ஷ்மி, குபேரன், இந்திரன், சிவன், சக்தி, முருகன், யமன் ஆகிய தெய்வங்கள் வழிபடப்படுகிறது

கோவஸ்த துவாதசி(வசுபராஸ்):

அதிகாலையில் பசுவையம் கன்றையும் வழிபாடு செய்து பகவான் விஷ்ணுவை நந்தகோபாலனாக துதிக்கும் நாளாக வட இந்தியாவில் மிகவும் புணிதமாக கடைபிடிக்கப்படுகிறது. பிரதோஷ காலத்தில் துவாதசி திதி இருப்பது அவசியம்

தனவந்த்தரி ஜயந்தி: திரியோதசி திதி

நரகசதுர்தசிக்கு முன்னாளில் ஆஸ்வீஜ பகுள திரியோதசி திதியும், ஹஸ்தம் நட்சத்திரமும் இருக்கும் தினத்தில் தேவர்கள் சாகவரத்துடன் இருக்க திருப்பாற்கடலில் கடைந்த அமுதத்தை வெளிக் கொணர்ந்த ஸ்ரீ விஷ்ணுவின் ஸ்வரூபமான  தன்வந்தரியின் ஜயந்தி நாளாகும். இத்தினத்தில் அமிர்த கலசத்துடன் காட்சியளிக்கும் பகவான் தன்வந்தரியை வழிபடுவதால் நோய் நீங்கி ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

ஓம் வாசுதேவாய வித்மஹே வைத்யராஜாய தீமஹி தன்னோ தன்வந்திரி பிரசோதயாத்

நரக சதுர்தசி:

துவாபர யுகத்தில் பகவான் விஷ்ணு ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில் மக்களை கொடுமைபடுத்திய நரகாசூரன் அரக்கனை ஸ்ரீசத்யபாமா துணையுடன் வதம் செய்தநாளாகவே இது கருதப்பட்டாலும். ஸ்ரீராமன் சீதையுடன் அயோத்தியா திரும்பியுதும், பாண்டவர்கள் வனவாசம் முடித்து திரும்பியதும் இந்நாள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நரகாசூர வதம்:

நரக சதுர்தசி நிர்ணயத்தில் ஆஸ்வீஜ சதுர்தசி திதி, சந்திர உதயம் எனும் விதி மிகமுக்கிய மானதாகும்.

பகவான்விஷ்ணு நரகாசூரனை ஆஸ்வீஜ பகுள சதுர்தசி(ஐப்பசி தேய்பிறை பதினான்காம் நாள்) திதியில், இரவு ஐந்தாம் ஜாமத்தில், சூரிய உதயம் முன்னர். சந்திரன் உதித்த காலத்தில் வதம் செய்தார். இதை அறிந்த மக்கள் இந்த வேளையில் தீயன அழிந்து நல்லவை இருக்கவேண்டும் என விரும்பி எண்ணை குளியல் செய்தார்கள். (தேய்பிறை சதுர்தசி அன்று நிலவு சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் இக்காலத்தில் சூரிய உதயம் முன்னர் வைகறை பொழுதில் நல்ல பார்வை உடைய கண்களால் மட்டும் சந்திர உதயம் காணமுடியும். ஆகவே கணித வழியில் சந்திரோதயம் தீர்மாணிக்ப்படுகிறது)

எச்சரிக்கை: 1.கேதாரீஸ்வரர் சதுர்தசி நோன்பு, 2.மாதசிவராத்திரி சதுர்தசி விரதம், 3.கேதார கௌரி நோன்பு ஆகியன மூன்றும் வெவ்வேறானவை ஒன்றல்ல !

பொதுவாக சதுர்தசி எண்ணைகுளியல் செய்ய உகந்த நாள் அல்ல ஆயினும் நரக சதுர்தசி மட்டும் எண்ணைகுளியலுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது என்பதை பல தர்மசாஸ்திரங்களை மேற்கோள்காட்டி வைத்தியநாத தீக்ஷியம் எனும் தர்ம சாஸ்திர நூல் கூறுகிது

"யஸ்யாம் ஹதச் சதுர்தச்யாம் நரகோ விஷ்ணுநா நிசி

தஸ்யாமப் யஞ்ஜனம் கார்யம்  நரைர் நரக் பீருபி:'

சாஸ்திரங்களில் சூரிய உதயத்திற்கு பின் 5 நாழிகைக்கு மேல் மாலை அஸ்தமனத்திற்கு 2 நாழிகைக்கு முன்னர் எண்ணை குளியல் நன்று மற்ற நேரங்களில் தைல ஸ்னானம் எனப்படும் எண்ணை குளியல் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது (காலவிதான பத்ததி நூல்- தைல ஸ்னான விதி). தைல ஸ்னானத்தை "அப்யங்க ஸ்னானம்' என்றும்; "மலாபகர்ஷணம்' என்றும் அழைப்பதுண்டு. ஸ்மிருயில் பானுவாரத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்வது மனசங்கடத்தையும், திங்கட்கிழமை உடல்நலமும், செவ்வாய் துன்பத்தையும், புதன் கிழமை செல்வசெழிப்பையும், வியாழக்கிழமை உடல் நலத்தையும், வெள்ளிக் கிழமை வறுமையையும், சனிக்கிழமை விரும்பியனதை அடைவதும் அளிக்கும் என்று கூறப் படுகிறது. விதிவிலக்காக பெண்களுக்கு மட்டும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் உகந்த நாட்களாக கூறப்பட்டுள்ளது ஆயினும் நரக சதுர்தசி குளியலுக்கு கிழமை, நட்சத்திரம், இரவு போன்ற விஷயங்கள் பொருந்தாத மிகவும் விசேஷமான நாளாகும்.

கங்காஸ்நானம்:

தீபாவளி குளியல் என்பது கங்கை நதியில் குளிப்பதற்கு ஓப்பாக கருதப்படுவதால் இது கங்காஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது. தர்மசாஸ்திர மூலகிரந்தங்களான விஷ்ணுபுராணம், ஸ்ம்ருத்யர்த்தஸாரம், ஸ்ம்ருதிரத்னம், காலாதர்சத்திலும், ஸாரஸங்க்ரஹத்தில் ஆஸ்வீஜ மாதத்தில் சூரியன் சுவாதியில் நிற்க, சந்திரன் சுவாதியில் வரும் நாளில் குளித்தல் லக்ஷ்மீகராமனது என கூறுகிறது

சில வருடங்களில் மட்டுமே சூரியன் சுவாதியில் நிற்க தீபாவளி நிகழும், ஏனெனில் சூரியன் சௌரமான முறையில் துலா (ஐப்பசி தமிழ்) மாதத்தில் மட்டுமே சுவாதியில் இருப்பார், ஐப்பசி மாத துவக்கத்தில் அல்லது முடிவில் சாந்திரமான ஆஸ்வீஜ மாத அமாவாசை ஏற்படின் நட்சத்திர மாறுதல் இருக்கும்

ஆல், அரசு, புரசு, அத்தி, மாவலிங்கம் ஆகிய ஐந்து மரங்களின் பட்டைகளையும் தண்ணீரில் சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கொதிக்கவைத்து வெந்நீர் தயார் செய்ய வேண்டும். காய்சிய நல்லெண்ணையை உச்சந்தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தடவி சற்று ஊறவேண்டும்.

பிரம்மன் காத்தல் நிலையில் (ரக்க்ஷை) “நாயுருவி”  செடி வடிவில் இருக்கிறார். இந்த நாயுருவி செடியால் தலையை மூன்று முறை தடவியநிலையில் வலமாக சுற்றி கால்படாமல் பெருமரத்தின் அடியில் சேர்பித்து பின்னர் கங்கை, லக்ஷ்மியை தியானித்து தலைகுளித்தல் வேண்டும்.

குறிப்பு : தலைக்கு தடவிய மீதம் உள்ள எண்ணையால் (கைகளால்) உடலில் மற்ற பகுதிகளை தொடுவது கூடாது

இத்தினத்தில் நீரில் கங்கையும், எண்ணையில் ஸ்ரீலக்ஷ்மி வசிப்பாள் என்கிறது சாஸ்திரம்

"தைலே லக்ஷ்மீர் ஜலேகங்கா தீபாவளிதினே வஸேத்'

கங்காஸ்நானத்திற்கு பின்னர் தீபம் ஏற்றி புத்தாடைகள் உடுத்தி சம்பிரதாயப்படி விபூதி, நாமம் இட்டு தங்க நகைகள் பூண்டு லக்ஷ்மி நாராயனனை வணங்கி செல்வ செழிப்புடன் ஆரோக்கியத்துடன் விளங்க பிராத்தித்து லக்ஷ்மி, விஷ்ணு அஷ்டோத்திரம் வாசித்து தீபாவளி லேக்கியம், இனிப்பு பலகாரவகைகள், பழங்களை படைத்து கற்பூர தீபம் காண்பித்து அங்கம் புழுதிபட சேவித்து பின்னர் லேக்கியத்தையும் இனிப்புகளையும் உண்டு வானவேடிக்கையில் ஈடுபடவேண்டும். பெரியவர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்தி அவர்களின் ஆசியை பெறுதல் மிகவும் முக்கியமானதாகும். அவலக்ஷ்மி நீங்கி லக்ஷ்மி கடாக்ஷம் பெருக பிராத்தனை செய்தல் வேண்டும்

கீழ் கண்ட சுலோகத்தைக் இறைவன் முன்நின்று கூறவேண்டும்.

"விஷ்ணோ: பாத ப்ரஸூதாஸி வைஷ்ணவீ விஷ்ணு தேவதா

த்ராஹி நஸ்த்வேனஸஸ் தஸ்மாத்  ஆஜன்ம மரணாந்திகாத்

திஸ்ர: கோட்யோர்த்த கோடீச  தீர்த்தானாம் வாயுரப்ரவீத்

திவி புவ்யந்தரிக்ஷே ச  தானிமே ஸந்து ஜாஹ்னவி'.

தாய் போன்ற கங்கா தேவி நீ மகாவிஷ்ணுவின் பாதத்தில் தோன்றி வைஷ்ணவியாகவும், விஷ்ணுவை அதிதேவதையாக உடையவளாகவும் விளங்குகிளாய். ஜனன - மரண இடைப்பட்ட காலங்களில் பாவங்களிலிருந்து எங்களைக் காத்தருள வேண்டும். தேவலோகம், பூமி, அந்தரிக்ஷம், மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ள தாக வாயு பகவான் கூறியுள்ளார். தங்கள் கருணையால் அவைகள் என்பொருட்டு இங்கு வந்து அருள வேண்டும்'.

நீரின்றி அமையாது உலகம் எனும் வள்ளுவன் வாக்குப்படி நீர் மிகமுக்கியமானதும் தாயார் போன்றதாகும். அந்த நீரை கங்கஸ்நானம் என செய்வதால் நல்லவை நடக்கும்

கோபூஜை(லக்ஷ்மிபூஜை)

பசுவிற்கு தானம்: பசுவை லக்ஷ்மி ஸ்வரூப மாக நினைத்து திலகம் இட்டு வணங்கி, கோதுமை தவிடு 2 கிலோ, வெல்லம் சிறிது கலந்து உணவாக தந்து வாலை தொட்டு வணங்கவும்.

மாலையில் தீபம்:

மாலையில் பிரதோஷகாலத்தில் லக்ஷ்மி கடாக்ஷ்ம் வேண்டும் என பிராத்தித்து சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் பூஜை அறையில்(நடுவீடு) மற்றும் வீட்டு வாசலிலிலும் தீபம் ஏற்றி வழிபடவும்.

இந்தப் புனிதத்திருநாளில நாம் எதற்காகப் பிறந்தோம்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் சிந்தித்து, நம்முடைய மனத்திலே நரகாசுரன் போன்ற தீய குணங்கள் எல்லாம் இருந்தால் அவற்றை அழிக்கக் கண்ணபிரானைப் பிரார்த்தித்து, மனிதன் தேவனாக மாற முடியாவிட்டாலும், மனிதனாகவாவது வாழ முயற்சி செய்து இறைவனுடைய அருளைப் பெறுவோமாக.

விளக்கு எறியாத கிராம கோவில்களில் தீபம் ஏற்ற எண்ணை தானம் செய்வது, மின்சார கட்டணம் கட்டுவது, பழுதான மின்விளக்குகளை மாற்றி புதிய மின்விளக்குகளை பொருத்துவம் காலமாற்றங்களுக்கு ஏற்ப தீபாவளியை கொண்டாடுவதற்கு ஒப்பாகும்

விரதங்கள்:

தீபாவளியை ஒட்டி சதுர்தசி விரதம், அமாவாசை விரதம் என இருவேறு விரதங்கள் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இவை இரண்டும் சிவனை நினைத்து வழிபடுவதாகும்:

சதுர்தசி நோன்பு (சதுர்தசி விரதம்: )

இது தேய்பிறை சதுர்தசி திதி நள்ளிரவில் வியாபித்திருக்கும் அன்று சிவனை உத்தேசித்து விரதம் இருந்து நோன்பு எடுத்தலாகும் தீபாவளிக்கு முன்னாள் இந்த விரதம் வரும்

தேய்பிறை சதுர்தசியில்(சிவராத்திரி) ஈஸ்வரனை நினைத்து அம்பாள் விரதம் இருந்த மிகவும் சிறப்ப்பான நாளாகும். தமிழகத்தில் சிலபகுதிகளில் இந்த விரதம் வழக்கத்தில் உள்ளது.

கேதாரகௌரீ விரதம்: (அமாவாசை விரதம்) ஐப்பசி அமாவாசை

இமயமலையின் ஒரு சிகரமான கேதாரத்தில் திருக்கோயில் கொண்டவர் கேதாரேசுவரர். திருகேதாரம், அந்தஸ்த்தலம். கௌரீ பகவான் கேதாரேசரை புரட்டாசி சுக்லபக்ஷ தசமி தொடங்கி ஐப்பசி அமாவாஸை வரை வழிபட்டாள். பிருங்கி என்ற முனிவர் கடும் சிவபக்தர். சிவனையல்லால் வேறு தெய்வம் வணங்காதவர். உமையும் இதற்கு விலக்கல்ல. சிவனையன்றி உமை தனித்தில்லை. உமையின்றி சிவன் தனித்தில்லை. இதனை மறுத்த பிருங்கி முனிவர் சிவனுக்கும் தேவியின்இடையில் வண்டு உருவில் நுழைந்து சிவனை மட்டும் வலம்வந்து வணங்கினார். இதனால் தேவியின் சாபத்துக்கு உள்ளாகி கால்களின் வலிவிழுந்து முடமானார்.

தேவி தன்னை மதிக்காத சூழலை அவமானமாகி கருதி  கைலாஸத்தில் இருந்து பூலோகம் வந்தார். கௌதமரின் ஆசிரமம் சென்று அவரது வழிகாட்டுதலில் கேதாரேச விரதத்தின் மூலம் வழிபட்டு சிவனது இடது பாகத்தைப் பெற்று அர்த்தநாரீசுவர வடிவில் இணைந்தாள். தேவிக்கு அவமானம் உண்டாக்கியதை எண்ணி வருந்திய பிருங்கி முனிவரும் மூன்றாம் கால்பெற்று இருவரையும் இணைந்து வழிபட்டார்.

21 இழையுள்ள நூலை திரித்து தினம் ஒரு முடிப்பாக 21 நாட்களில் 21 முடிப்புகள் இட்டு 21 நாட்களும் அந்தச் சரடுடன் வழிபட்டு தீபாவளி அமாவாஸ்யையன்று சரட்டைக் காப்பாகக் கட்டிக் கொள்வர். அம்மி மீது குழவியை நிறுத்தி சிவலிங்கமாகப் பாவித்து வழிபடுவர். 21 நாட்கள் தொடர்ந்து வழிபட இயலாதவர் கடைசி நாள் மட்டும் வழிபடுவர்.

விரதம் சில வருடங்களில் தீபாவளி அடுத்த நாளிலும் அரிதாக ஒருநாள் இடைவெளி விட்டும் வரும்.

கோவர்தன தினம்:

தீபாவளி அமாவாசை அடுத்த நாள் பிரதமை திதி அன்று கிருஷ்ணர் பசுக்களையும், மக்களையும் கடும் மழையில் இருந்து காப்பாற்ற கோவர்தனமலையை குடையாக தூக்கிபிடித்த நாளாக வழிபடப்படுகிறது. குறிப்பாக வட இந்தியாவில் யாதவ குலமக்கள் விரும்பி வழிபடும் நாளாகும்

தீபாவளி அமாவாசை அடுத்த நாள்  கார்தீக சுத்த பிரதமை இன்று முதல் சாந்திரமான கார்திகை மாதம் பிறக்கிறது. இன்று முதல் சஷ்டி திதி வரை ஆறுநாட்கள் கந்தனை வளர்த்த கார்திகை பெண்களை உத்தேசித்து முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கந்தசஷ்டி அன்று சூரபத்மனை முருகன் வதம் செய்ததை விளக்கும் வகையில் சூரசம்ஹாரம் நிகழும், மறுநாள் முருகன் திருக்கல்யாணம் நடைபெறும்

தீபாவளி துவங்கி இம்மாதம் முழுவதும் மாலையில் இல்லங்களில் வாசலில் தீபம் ஏற்றி வணங்குவார்கள்.

யம துவிதியை:

தீபாவளி அமாவாசை அடுத்த இரண்டாம் நாள்  கார்தீகை சுத்த துவதியை திதி அன்று யமனை வழிபடுவதால் சகோதரர்கள், சகோதரிகள் நலமுடன், ஆயுளுடன் விளங்குவார்கள். அன்று மாலையில் இல்லத்திலும், சிவன் சன்னதியிலும்  நல்லெண்ணைய் தீபம்(யம தீபம்)  ஏற்றி நீண்ட ஆயுள் தரவேண்டி சிவனின் பட்டம் பெற்ற எமனை நினைத்து வணங்க வேண்டும். சகோதரிகள் இல்லம் சென்று அவர்களை புத்தாடை தந்து, வணங்கி அல்லது ஆசிர்வதித்து அவர்கள் இல்லத்தில் உணவு உண்பது நன்று.

முன்னதாக காலையில் எருமை மாட்டிற்கு கோதுமை தவிடு, பிடி அரிசி, எள், வெல்லம் தந்து பசியாற்ற வேண்டும்.பசு வழிபாடு போன்றே எருமை வழிபாடும் புணிதமாக கருதப்படுகிறது. அஷ்டமி திதியன்று எருமை மாட்டிற்கு உணவை தருவதால் யமபயம் நீங்கும். சிவனை தியானித்து மிருத்யுஞ்ச மந்திரம் ஜபித்தல் நன்று.

தீபாவளி கூடுதல் தகவல்கள்:

தீபாவளிக்கு முன்னாள் வரும் தனதிரியோதசி வடமாநிலங்களில் செல்வம் செழிக்க வழிபடும் மிகமுக்கியமான பண்டிகையாகும்

குஜராத்தில் புதிய நிதியாண்டு துவக்கமாக கருதி, லட்சுமி குபேர பூஜை வழிபாடு செய்து புதுவருட கணக்கை துவங்குவார்கள். மேலும் செழிப்புடன் விளங்க செல்வத்தின் அதிபதி இந்திரனையும் அன்று வழிபடுவார்கள். தமிழகத்திலும் மார்வாடி சமூகத்தினர் தீபாவளியை புத்தாண்டு துவக்கமாக கருதி கொண்டாடுகிறார்கள்.

ஜைனர்கள் மஹாவீரர் புனித நிர்வாண நிலையை அடைந்த நாளாக வழிபாடுகிறார்கள்

தீபாவளி படையல்:

மகிழ்ச்சியான தீபாவளி அமாவாசையில் வருவதால் அன்று முன்னோர்களுக்காக அமாவாசை வழிபாடு செய்ய இயலாத சூழல் என கருதி, அமாவாசை வழிபாட்டை முன்கூட்டி தீபாவளி படையல் என்ற பெயரில் செய்வதாகும். இந்த மூதாதையர் வழிபாடு தென்தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் அன்று மூதாதையர்கள் நினைவாக புதுதுணிகள் படைத்து அதை ஏழைகளுக்கு தருவார்கள்.

தீபாவளி அன்று ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் செய்தும், ஆதரவற்ற குழந்தைகளுடன் வானவேடிக்கையில் ஈடுபட்டு அவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க உதவலாம்.

எச்சரிக்கை: முதியோர் இல்லத்திற்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பகளை வழங்காதீர்கள். அவர்களின் உடலுக்கு நல்லதல்ல எனவே அதற்கு பதிலாக வேறு ஏதேனும் உடலுக்கு உகந்த உணவுப்பொருட்களை தரலாம்.

தன்வந்தரி ஜயந்தி 1.11.2013 வெள்ளி

சதுர்தசி முன்னாள் அன்று  உலக நண்மைக்காக திருப்பாற்கடலில் அமிர்தகலசத்துடன் தோன்றினார் விஷ்ணு ஸ்வருபமான ஸ்ரீதன்வந்தரி பகவான் இன்று அவரின் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வியாதிஸ்தரக்ள் தன்வந்தரி மந்திரத்தை ஜபித்து பிரார்தனை செய்தல் நன்று

நரக சதுர்தஸி குளியல் : 1.11.2013 வெள்ளி இரவுக்கு பின்(ஆங்கிலப்படி 02.11.2013 அன்று அதிகாலை)

இரண்டாம் ஜாமத்திலேயே சதுர்தசி திதி துவங்கி விடுகிறது. இதன் அடிப்படியில் சதுர்த்தசி 4ம் ஜாமத்தில் முழுமையாக இருக்கும் மற்றும் சந்திரோதயம் உள்ள காலமே(ஆங்கிலப்படி 2.11.2013 அதிகாலை) நரக சதுர்தசி ஆகும். இந்தகாலத்தில் தலைகுளித்தலே சிறந்தாதாகும்.

தீபாவளி: 2.11.2013 சனிக்கிழமை

சனிக்கிழமை அன்று இரவு 8:16 வரை சதுர்தசி உள்ளதால் அன்று தீபாவளி மற்றும் சதுர்தசி நோன்பு (கேதாராத்ரி விரதம்) கடைபிடிக்கவும்

அமாவாசை நோன்பு: 3.11.2013 ஞாயிறு - கேதார கௌரி நோன்பு, லக்ஷ்மி நோன்பு

இந்த நோன்பை 3.12.2013 ஞாயிறு அன்று கடைபிடித்தல் நன்று

தீபாவளி படையல்:

மகிழ்ச்சியான தீபாவளியை முன்னோர்களுடன் சேர்ந்து செய்வதற்கு ஒப்பான ஒன்றே தீபாவளி படையல்  இதை தீபாவளி அமாவாசைக்கு முன்கூட்டி கடைபிடித்தலாகும். இந்த ஆண்டு தீபாவளி படையலுக்கு உகந்த நாட்கள்.  அக்டோபர் 27, 28, 30,31

அமாவாசை திதி: 3.11.2013 ஞாயிறு

எம துதியை 5.11.2013 செவ்வாய் (சகோதரர் நலம் வேண்டி சிவ வழிபாடு)

ஸ்ரீயமுனை யமதர்மராஜனை அண்ணன் நலனுக்காக வழிபட்ட நாள். இத்தினத்தில் யமனை வீட்டிற்கு விருந்துண்ண அழைப்பதாகும். காலையில் எருமை மாட்டிற்கு ஊறவைத்த கோதுமை தவிடு, வெல்லம், அகத்திகீரை, எள் கலந்து உணவாக அளித்து சகோதரர்கள் நலமுடன் ஆயுளுடன் இருக்க பிரார்த்தனை செய்வதாகும். அன்று சிவனை வழிபட்டு, மிருத்யுஞ்ச மந்திரம் ஜபித்தல் நன்று.

மேற்கோள் நூல்கள்: தர்ம சிந்து, வருஷாதி நூல், வைத்யநாத்தீக்ஷ்யம், விரத பூஜை விதாநனம், காலப்பிரகாசிகை, கால விதானம் பத்ததி, பூஜா சங்கரஹம், உத்திரகாலமிருதம், காமிகாகமம், ஸ்ரீபிரம்ம கைவர்த புராணம்(துலா காவேரி ஸ்நான பாகம்)

கட்டுரையாளர்: பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர் - ஜோதிடர் - பஞ்சாங்க கணிதம்; கைபேசி: 98403 69677 (தொடர்பு நேரம்: பகல் 1 மணிக்கு மேல்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com