
மகா சிவராத்திரி வியாழக்கிழமை (பிப்ரவரி 27) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நவகைலாயங்களில் அமைந்துள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் என சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதுபோல் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் இரு மாவட்டங்களில் உள்ள நவகைலாய தலங்களை வழிபடுகின்றனர்.
நவகைலாய திருத்தலங்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ளன. இந்த அனைத்துக் கோயில்களும் நவகிரகங்களுடன் தொடர்புடையவை.
நவகைலாயம் வரலாறு: தென் தமிழகத்தின் எல்லையாகத் திகழ்வது பொதிகைமலை. அங்கு அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் மீண்டும் பிறவா வரம் வேண்டி (முக்தி வேண்டி) சிவபெருமானை வணங்கினார். இதை அறிந்த அகத்திய முனிவர் தாமிரவருணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி சிவனை வழிபட்டு, பின்னர் நவகோள் வரிசையில் சிவனை வணங்கவேண்டும் என்றார்.
நவகோள்களை அறிவதற்காக ஒன்பது மலர்களை ஆற்றில்விட்டு, இவை எந்தெந்தக் கரையில் ஒதுங்குகிறதோ அங்கு சிவலிங்கத்தை வைத்து வழிபடுமாறு வேண்டினார். உரோமச முனிவரும் அவ்வாறே செய்தார்.
அதில் முதல் மலர் பாபநாசத்திலும் (சூரிய தலம்), இரண்டாவது மலர் சேரன்மாதேவியிலும் (சந்திரன்), மூன்றாவது மலர் கோடகநல்லூரிலும் (செவ்வாய்), நான்காவது மலர் குன்னத்தூரிலும் (ராகு), ஐந்தாவது மலர் முறப்பநாட்டிலும் (குரு), ஆறாவது மலர் ஸ்ரீவைகுண்டத்திலும் (சனி), ஏழாவது மலர் தென் திருப்பேரையிலும் (புதன்),
எட்டாவது மலர் ராஜபதியிலும் (கேது), ஒன்பதாவது மலர் சேர்ந்தபூமங்கலத்திலும் (சுக்கிரன்) கரை ஒதுங்கின. அந்த இடங்களே நவ கைலாயம் என்று அழைக்கப்படுகின்றன.
பாபநாசம் (சூரியன்): நவகைலாய திருத்தலத்தில் முதலாவதான இத்தலம் பாபநாசத்தில் இருக்கிறது. இது திருநெல்வேலியிலிருந்து மேற்கே 45 கி.மீ. தொலைவில் பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் உலகாம்பிகை.
சேரன்மகாதேவி (சந்திரன்): பாபநாசத்திலிருந்து கிழக்கே 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் ஆவுடைநாயகி.
கோடகநல்லூர் (செவ்வாய்): சேரன்மகாதேவியிலிருந்து திருநெல்வேலி சாலையில் 15 கி.மீ. தொலைவில் கல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சிவகாமி.
குன்னத்தூர் (ராகு): திருநெல்வேலி நகரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சிவகாமி. இக்கோயிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
முறப்பநாடு (குரு): திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் சாலையில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சிவகாமி.
ஸ்ரீவைகுண்டம் (சனி): முறப்பநாடு கோயிலிலிருந்து கிழக்கே 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சிவகாமி.
தென்திருப்பேரை (புதன்): திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 8-ஆவது கி.மீட்டரில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை.
இராஜபதி (கேது): தென்திருப்பேரையிலிருந்து 6-ஆவது கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை.
சேர்ந்தபூமங்கலம் (சுக்கிரன்): தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் புன்னக்காயல் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் செளந்தர்யநாயகி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.