ஐப்பசி ஓணத்தில் அவதரித்த பொய்கையாழ்வார்

ஐப்பசி ஓணத்தில் அவதரித்த பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் (திருநட்சத்திரம்:  ஐப்பசி – திருவோணம்) அக். 31- இன்று அவருடைய திருநட்சத்திரம்...

பொய்கையாழ்வார்

(திருநட்சத்திரம்:  ஐப்பசி – திருவோணம்)

(அக். 31)

வடவேங்கடம் முதல் தென்குமரி வரை விரிந்து பரந்த தமிழகத்தை தமிழன்னையாகப் பாவித்தால், அவளின் நெற்றித் திலகம்போலத் திகழ்வது, தொண்டை நாடும் அதன் தலைநகராகத் திகழ்ந்த காஞ்சிபுரம் நகரமும்.

தொன்றுதொட்டு பழம்பெரும் நகராக விளங்கி வருகிறது இந்த காஞ்சிபுரம் நகரம். இதற்கு கச்சி என்றும் திருஅத்தியூர் (சின்ன காஞ்சிபுரம்) என்றும் பெயர்கள் பலவுண்டு. அந்த அத்தியூரான அத்திகிரியில் கோயில் கொண்டு அருள்பாலிப்பவரே அத்திகிரி அருளாளனான வரதராஜப் பெருமான்.

சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம் நகருக்குப் பல வைணவத் திருத்தலங்களும் பல சிவத் தலங்களும் பெருமை சேர்க்கின்றன. வைணவக் கோயில்கள் பல கொண்ட அந்தக் காஞ்சி மாநகருக்குப் பெருமை சேர்த்திருந்தது,  திருவெஃகாவில் உள்ள யதோக்தகாரி பெருமாள் சந்நிதி.  திருமாலின் பெருங்கருணை நிறைந்திருக்கும் அந்தத் தலத்தில் பெருமாள் பக்தர்களின் பக்திப் பனுவல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

‘சொன்னவண்ணம் செய்த பெருமாள்’ என்று பின்னாளில் மிகப் புகழ்பெற்ற யதோக்தகாரி சந்நிதியின் அருகே ஒரு பொய்கை. அந்தப் பொய்கையில் தேவர்களும்,  வானுலகக் கன்னியர்களும் நீராடுவார்களாம். அத்தகு சிறப்புடையதும், கருணை மிகப் பொழியும் பரந்தாமனின் மார்பைப் போன்று மிகக் குளிர்ச்சி பொருந்தியதுமான அந்தப் பொய்கையில், பொற்றாமரை மலர் ஒன்று அன்றலர்ந்த மலராய் மணம் வீசிக்கொண்டிருந்தது.

கண்ணுக்கு இனிய காட்சியும் மனதுக்கு பக்தி மணமும் கொடுக்கும் அந்த அழகிய பொற்றாமரை மலரில், அன்பே குணமாகக் கொண்டு, அறிவொளி வீசும் ஞானச்சுடராக ஒருவர் அவதரித்தார்.  திருமாலின் சங்காகப் புகழ்பெற்ற பாஞ்சஜன்னியத்தின் அம்சத்தவராக அயோனிஜராக ஒரு பொய்கையில் அவதரித்ததால்  ‘பொய்கையார்’ என சிறப்பிக்கப்பட்டார்.

பொய்கையார் என்கிற இந்தப் பெயரை சங்க இலக்கியங்களான புறநானூறிலும் நற்றிணையிலும் கூடக் காணலாம். அவர் புறநானூறிலும் நற்றிணையிலும் சில பாடல்களைப் பாடியதாக நமக்குக் கிடைக்கும் குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறது. அதேபோல், சேரனுக்கும் சோழனுக்கும் நடந்த போரில் அகப்பட்ட சேர அரசனை விடுவிப்பதற்காக, சோழன் கோச்செங்கணானைப் புகழ்ந்து  ‘களவழி நாற்பது’ என்ற நூலைப் பாடியவரும் பொய்கையார் என்பவர் தான்.

ஆனால், சங்ககாலப் பொய்கையாரும், களவழி நாற்பது பொய்கையாரும், ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாரும் ஒருவரல்லர் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம். காரணம், மூவரும் வெவ்வேறு காலத்தவர் என்பது மட்டுமல்லாமல், மூவருடைய பாடல்களிலும் காணப்படும் வேறுபாடுகளும், எண்ணங்களின் மாறுபாடுகளும் மூவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றன எனலாம்.

ஆழ்வாரான பொய்கையாரின் பாடல்களில்  ‘தோள் அவனையல்லால் தொழா’ என்றும்,  ‘நயவேன் பிறர் பொருளை நண்ணேன்’ என்றும் வருவதால், இவருடைய பக்திச் சிறப்பும் உயர்வும் நமக்குத் தெரியவரும். மேலும் இவர் முனிவர் வகையறாவைச் சேர்ந்தவர் என்பதால், இவர் மன்னரைப் பாடிப் புகழ வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும் தெளியலாம்.

சிறு வயதிலேயே பகவத் பக்தியில் ஈடுபட்டுத் திளைத்த பொய்கையாழ்வார், இளமையில் கற்க வேண்டிய நூல்களை திருவரங்கப் பெருமானின் கருணையால் குற்றம் நீக்கிக் கற்றுணர்ந்தார். அதன் காரணத்தால், இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது திருமாலின் தொண்டே எனத் தெளிந்தார்.  உலகப் பற்றையும்,   ‘நான்’  என்ற அஹங்கார உணர்வையும்,  ‘எனது’ என்ற மமகார உணர்வையும் முழுவதுமாகத் தூக்கி எறிந்து, பகவான் ஸ்ரீமந் நாராயணனிடமே அன்பு பூண்டு, அவன் சேவைக்கே தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டார்.

என் உள்ளம் அவனது அன்பையே எக்காலமும் சிந்தித்து மகிழ்கிறது. என் நாக்கோ, மகாலட்சுமித் தாய் உறையும் திருத்துழாய் மாலை சூடிய அவன் மார்பை, செங்கமலக் கண்களை, சக்ராயுதம் தரித்த கையை, கழல்கள் அணிந்த கால்களை, வெண்ணெய் ஒழுகும் செம்பவழ வாயை எப்போதும் பாடிக்கொண்டேயிருக்க விழைகிறது. என் கண்களோ, மாயக் கள்ளன் திருமகள் நாதனான கண்ணபிரானைக் காண் என்கின்றன. என் செவிகளோ, அவன் புகழையே எப்போதும் கேள் என்று கேட்க விழைகின்றன.

- இப்படியே அவர் எந்நேரமும் சொல்லிக் கொண்டிருப்பார். கண்கள் இரண்டும் ஆனந்தக் கண்ணீர் சொரிய, அகம் கரைந்து உள் ஒடுங்கி திருமாலின் திவ்விய ரூப சௌந்தர்யத்தில் தன்னையும் மறந்திருப்பார்.

இயல்பிலேயே இறையருளால் இயல் இயற்றும் வரம் கைவரப் பெற்ற பொய்கையார், பகவானின் கல்யாண குணங்களைப் பாடி பக்தரோடு பரவசராய் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வார். அப்படி இருக்கும்போது, ஒரு நாள் பூதத்தாழ்வாரோடும் பேயாழ்வாரோடும் இவரைச் சந்திக்க வைத்து, இம்மூவருக்கும் தன் திவ்விய ரூப அழகைக் காட்டி, இவர்களின் பக்தியை ஊரறியச் செய்ய எண்ணம் கொண்டான் நாரணன்.

அதன் பிறகு இவர் அமுதனைப் போற்றி பாசுரங்கள் பாடினார். அது நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் முதல் திருவந்தாதியாக இடம்பெற்றுள்ளது.

இந்தத் தொகுப்பில் நூறு அந்தாதிப் பாடல்கள் உள்ளன. இந்தப் பாசுரங்கள் அனைத்தும் அழகிய வெண்பா நடையில் அமைந்திருக்கின்றன. வெண்பா என்ற பா வகையையும் ஏற்று, அந்தாதியையும் எடுத்துக்கொண்டு இவர் செய்த முதல் நூற்றந்தாதியில் இருந்து, சில முக்கியமான பாசுரங்களைப் பார்க்கலாம்.

சைவ- வைணவ ஒற்றுமை பேசியவர்:

கடைச்சங்க காலத்திலேயே பெரிதாக வளர்ந்துவிட்ட சைவ- வைணவ சமய பேதங்கள் எல்லாம், கடைச்சங்க காலத்தின் இறுதியில், அதாவது முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் படித்த பண்டிதர்களிடம் அதிகமாக இருந்தன. ஆனால் இந்த இரு சமயங்களின் மூலங்களான, ‘அரனும் அரியும் ஒன்றே’  என்று கூறும் முதல் குரல், முதலாழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வாரின் குரல்.

இந்தக் குரல் மற்ற ஆழ்வார்களிடம் இருந்தும் எழுந்திருக்கிறதா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. பொய்கையாழ்வார் காலத்தில் இருந்த மக்கள் மனநிலையைச் சீர்படுத்த இந்தக் கருத்து தேவைப்பட்டிருக்கலாம். அதுபோல, ஆழ்வார்களின் கால நிலையை ஒட்டி ஆழ்வார்களில் கடைசியாக வந்த திருமங்கையாழ்வாரும் ஓரளவு சமத்துவம் கொண்டிருந்தார் என்பது அவருடைய பாசுரங்கள் வழி நாம் அறியலாம்.

பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியில் ஒரு பாசுரத்தில்,

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று. (5)

-என்றவாறு,  “அரன்,  நாராயணன் ஆகியவை உனது பெயர்கள். எருது, கருடன் ஆகியவை உம் வாகனங்கள். ஆகமமும் வேதமும் உன் பெருமை பறைசாற்றும் நூல்கள். மலையும் (கைலாய மலை) கடலும் (திருப்பாற்கடல்) உன் இருப்பிடங்கள். அழித்தலும், காத்தலும் நினது தொழில்கள். வேற்படையும், சக்கரப் படையும் நின் ஆயுதங்கள். தீயின் சிவப்பும், கார் மேகத்தின் கருப்பும் நின் உருவம். ஆயினும் உடல் – ஒன்றே!” என்கிறார்.

இப்படிக் கூறுவதன் மூலம், அந்தக் காலத்தில் நிலவிய பேத உணர்வுக்கு எதிர்க் குரல் கொடுக்கிறார் பொய்கையாழ்வார்.

அரியும் அரனும் சேர்ந்த உருவமான சங்கரநாராயணர் தத்துவத்துக்கு இந்தப் பாசுரத்தை மேற்கோள் காட்டுவர். பொய்கையாழ்வார் தம் இன்னுமொரு பாசுரத்தில், ஒருவருக்குள் ஒருவர் உறைவதை எடுத்துக் காட்டியிருப்பார்.

பொன் திகழு மேனிப் புரிசடை அம் புண்ணியனும்,
நின்று உலகம் தாய நெடுமாலும்- என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன் (98)

“பொன் நிற உடலும் பின்னிய சடையும் கொண்ட சிவபெருமானும், நின்று கொண்டே உலகை அளந்த நெடிய திருமாலும், எப்போதும் இரண்டு வடிவங்களில் திரிவார்கள் என்றாலும், சிவன் திருமாலின் உடம்பாக இருக்கிறான். திருமால் சிவனுக்குள் உறைபவனாய் அவன் வாழ்வுக்குக் காரணம் ஆகிறான்” என்று விசிஷ்டாத்வைத தத்துவப் பொருளையும் பேசுகிறார்.

ஏற்றான், புள் ஊர்ந்தான்; எயில் எரித்தான்; மார்வு இடந்தான்;
நீற்றான்; நிழல் மணிவண்ணத்தான்;  கூற்று ஒருபால்
மங்கையான், பூமகளான், வார் சடையான், நீள்முடியான்;
கங்கையான், நீள்கழலான் காப்பு ( 74)

-என்ற பாசுர அழகால் அவருடைய சமரச உணர்வைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தப் பாசுரத்தில்,  “காளை வாகனம் கொண்ட சிவன் முப்புரங்களை எரித்தவன். சாம்பல் பூசியவன். உடல் பாதியில் பெண்ணைக் கொண்டவன். சடையையும் அதில் கங்கையினையும் உடையவன். ஆயின் இச்சிவபிரானைக் காக்கும் திருமாலோ வேத புருஷனான கருடனை வாகனமாகப் பெற்றவன். இரணியன் மார்பைக் கிழித்தவன்; நீலமணி நிறத்தான்; திருமகளைத் தன் மார்பில் ஏற்றவன்; திருமுடியுடன் கங்கையின் பிறப்பிடமாகிய திருவடி கொண்டவன். ஆகவே திருமாலே சிவனின் ஆத்மாவாக அவன் உள்ளிருந்து காக்கும் பேரிறைவன்” என்று, சிவனுள்ளும் திருமாலைக் காணும் நோக்கை ஏற்படுத்தித் தருகிறார்.

கைய வலம்புரியும் நேமியும்; கார்வண்ணத்து
ஐய! மலர்மகன் நின் ஆகத்தாள்; செய்ய
மறையான் நின் உந்தியான்; மாமதிள் மூன்று எய்த
இறையான் நின் ஆகத்து இறை (28)

“கையில் சங்கு, சக்கரம் கொண்டு இலங்கும் மேகவர்ண மேனி கொண்டவனான நின் அருகில் லக்குமி இருக்கிறாள். உன் உந்திக் கமலத்தில் பிரமன் இருக்கிறான். முப்புரம் எரித்த சிவபெருமானும் உன் உடலின் ஒரு பாகம்தான்” என்கிறார். இப்படி அனைவரும் அவன் ஒருவனிடம் உறைகின்றனர் என்கிற கருத்தைக் கொண்டிருந்தாலும் அதைக் காட்டினும் சிறப்பாக, நாம் எந்த உருவில் அவனை வேண்டுகிறோமோ அந்த உருவில் அவன் நமக்கு அருள்வான் என்கிற உலகளாவிய தத்துவ உண்மையை எடுத்து இயம்புகிறார் பொய்கையாழ்வார்.

தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே;
தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர்;  தமர் உகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே,
அவ்வண்ணம் ஆழியான் ஆம் (44)

“அடியார்கள் எந்த உருவத்தை விரும்புகிறார்களோ, அதுவே அவன் உருவம். எந்தப் பெயரைக் கொடுக்கிறார்களோ அதுவே அவன் பெயர். எந்த விதமாக சிந்தித்து இடைவிடாமல் தியானம் செய்கிறார்களோ அந்த விதமாகவே இருப்பான் சக்கரக் கையான்” என்று சமரச தத்துவ நிலையைச் சொன்னாலும், இன்னுமொரு பாசுரத்தில்  “இந்த உலகத்து உயிர்கள் எல்லாம் அந்தத் திருமாலிடமே அடங்குகின்றன, எல்லா தெய்வங்களும் அவனிடமே ஒடுங்குகின்றன, எனில் அவனைக் காட்டிலும் வேறு ஒரு தெய்வத்தைத் துதிக்கவும் வேண்டுமோ?”  என்று நாராயண பரத்துவத்தை நிலை நாட்டுகிறார் பொய்கையாழ்வார்.

ஆகாசாத் பதிதந் தோயம் யதா கச்சதி சாகரம் |
சர்வதேவ நமஸ்கார: ஸ்ரீகேசவம் ப்ரதி கச்சதி ||

“எப்படி ஆகாசத்திலிருந்து மண்ணில் விழும் நீரானது ஆறுகளின் வழியே ஒன்றாகிக் கடலில் சேர்கிறதோ, அதுபோல் மற்ற எல்லா தேவதைகளுக்கும் செய்கின்ற நமஸ்காரங்கள் கடல் வண்ண நிறனான கேசவனுக்கே செல்கின்றன ”  என்று சொல்வதைப் போல் இவரும் பேசுகிறார். அதனால் நான் எதற்காக மற்ற தெய்வங்களை ஏத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகிறார்.

நயவேன் பிறர் பொருளை; நள்ளேன் கீழாரோடு;
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்;  வியவேன்
திருமாலை அல்லாது தெய்வம் என்று ஏத்தேன்;
வரும் ஆறு எம்மேல் வினை? (64)

என்று,  “பிறன் பொருளை யான் விரும்பேன்;  (அல்லது திருமாலுக்கே உரிமையான ஆத்மாவை என்னுடைய பொருளாக எண்ணி ஆசைப்படமாட்டேன் என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம்). கீழான தன்மை உடையவரோடு நட்புப் பூணேன்; உயர்ந்தவரோடு சேர்ந்திருப்பேனே அல்லாது மற்றவரோடு சேரேன் (அல்லது உலக வாழ்வில் உழல்பவரோடு சேராது திருமாலடியாரோடே கூடிக் களித்திருப்பேன் என்றும் கொள்ளலாம்).  திருமாலைத் தவிர வேறு தெய்வம் எதையும் தெய்வம் என்று துதிக்க மாட்டேன். ஆதலால் பிறப்பு, இறப்புத் துன்பம் தரும் பாவ வினை என்னை நாடி எப்படி வரும்?… நிச்சயம் வராது”  என்று கூறும்போது, நாராயணனையே தெய்வம் என்று ஏத்துவேன் என்பதையும் இறுதியாகச் சொல்லிவிடுகிறார்.

பொய்கையாழ்வாரின் இந்தக் கருத்தை ஒட்டி, அதன் பின்னர் வந்த தொண்டரடிப்பொடியாழ்வார்,

மற்றும் ஓர் தெய்வம் உண்டோ ? மதியிலா மானிடர்காள்!
உற்றபோது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்;
அற்றம் மேல் ஒன்று அறியீர்; அவன் அல்லால் தெய்வம் இல்லை;
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே!

-என்று,  “ஆபத்து வரும்போது காப்பதற்கும், கடைசிக் காலத்தில் நினைப்பதற்கும் வேறு ஏதேனும் தெய்வமும் உண்டோ ? அவன் ஒருவனே ஆபத்பாந்தவனாக ஓடோடி வருவான்” என்று சொல்லிவிட்டு, அவனை விட்டால் வேறு தெய்வமில்லை என அழுத்தமாக, நாராயண பரத்துவம் பேசுவது உணரத் தக்கது.

மேலும், பகவானின் தன்மையையும் ஆன்மாவின் தன்மையையும் வர்ணித்து, ஆன்மிக உணர்வைத் தட்டியெழுப்புகிறார். மூலப்பொருளான இறைவனை அடைந்து ஒன்றாகக் கலப்பதே ஆன்மாவின் தன்மை என்றும், அவனைப் பிரிந்திருப்பதே துன்பங்களுக்கான காரணம் என்றும் தெளிந்து தெரிவிக்கிறார்.

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது
ஒன்றும் உணரேன் நான் – அன்று
தடைத்துடைத்து கண்படுத்த ஆழி இதுநீ
படைத்திடந் துண்ட பார் (2)

“பகவானே நீ என்று கடலைக் கடைந்தாய்; எப்போது இவ்வுலகத்தை நீரால் நிரப்பினாய்; இது ஒன்றும் எனக்குத் தெரியாது. அன்றொரு நாள் கடலை அடைத்துப் பாலம் அமைக்கிறாய், அதை உடைக்கிறாய், அதிலேயே படுத்துத் தூங்குகிறாய். இந்த உலகத்தைப் படைக்கிறாய், பெயர்த்து எடுக்கிறாய், அதை உண்கிறாய்…”
– இப்படி உலகத்தின் முத்தொழிலுக்கும் காரணனாக நாராயணனைப் பாடும் பாடல் இது.  ‘இந்த உலகில் அனைத்தையும் செய்வது அவனே’ என்பது இதன்வழி உணரும் உட்கருத்து.

14-ம் பாசுரத்தில், அவரவர் தாம் அறிந்த வகையில் அவனைத் தொழுது, இவர்தான் என் கடவுள் என்று சொல்லி சுவரில் சித்திரமாக வரைந்தும், சாத்தியும், மூர்த்திகளாக வைத்தும் தொழுவார்கள். ஆனால், இதற்கெல்லாம் ஆதியானது, உலகை அளந்த அந்த உத்தமனின் உருவமே என்கிறார்.

இறைவனைப் போற்றிப் பாடுகிறவர்கள் மத்தியில், அவனைப் பழித்தும் உரைக்கின்ற சிலர் இருக்கத்தானே செய்வார்கள்?  அப்போதுதானே, போற்றுபவர்களின் சிறப்பை பகவானால் உலகுக்கு வெளிப்படுத்த முடியும்? ஆனால், போற்றுதலோ தூற்றுதலோ அவனுக்கு எல்லாம் ஒன்றுதான், அவனைப் புகழ்வதும் பழிப்பதும் அவரவர் உரிமை என்பதை ஒரு பாசுரத்தில் காட்டுகிறார்…

புகழ்வாய்; பழிப்பாய்; நீ பூந் துழாயானை
இகழ்வாய்; கருதுவாய்; நெஞ்சே – திகழ் நீர்க்
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும்,
உடலும் ஏற்றான் உயிர் (73)

“கடலும் மலையும் வானமும் காற்றும் உடலும் உயிரும் எல்லாமுமாக அவன் இருக்கும்போது, அவனைப் புகழ்ந்தால் என்ன? பழித்தால் என்ன? இரண்டும் ஒன்று தான்” என்கிற கருத்து ஆழ்ந்து நோக்கத் தக்கது.

மரணம் வரும் காலத்தே மாயவனை நினைப்பதற்கு நினைவு இருக்குமோ அல்லது நினைவு தப்பிப்போய் மரணம் துரத்துமோ தெரியாது. அந்த அளவுக்கு உலக வாழ்க்கை நிச்சயமற்ற தன்மையில் இருக்கும்போது, மரணத் தறுவாயில் அவனைத் தொழுதால் தான் வீடுபேறு கிடைக்கும் என்பது இல்லை; எப்போது உடலில் தெம்பும் உள்ளத்தில் நினைவும் நன்றாக இருக்கிறதோ அப்போதே அவனைத் தொழுது புண்ணியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலில் சக்தியுள்ளபோதே ஏதேனும் ஒரு வழியில் தொழலாம் என்கிறார்.

‘அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கமா நகருளானே’ என்கின்ற ஆழ்வாரின் கருத்து இந்தப் பாசுரத்தோடு இயைந்து போகிறது.

சொல்லும் தனையும் தொழுமின்; விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை;  நல் இதழ்த்
தாமத்தால், வேள்வியால், தந்திரத்தால், மந்திரத்தால்
நாமத்தால் ஏத்துதிரேல், நன்று.

என்ற பாசுரம் மூலம் காட்டும் கருத்து,  “ உடம்பு விரைவிலேயே விழுந்துவிடும்… நாவால் அவன் நாமத்தைச் சொல்லும் சக்தி இருக்கும்போதே, திருமாலை வழிபடுங்கள், அழகு மலர் மாலை சூட்டுங்கள், யாகம் செய்தோ, தந்திரத்தாலோ, மந்திரங்கள் ஓதியோ, அல்லது அவன் நாமங்களைச் சொல்லியோ எப்படி வணங்கினாலும் நல்லது” என்கிறார்.

இப்படி நாராயணனைச் சிறப்பித்து பாசுரங்களைப் பாடிவரும்போது, அவனுக்குக் குடையாக அமர்ந்த ஆதிசேஷன் சிறப்பையும் பாசுரத்தில் காட்டுகிறார்.

சென்றால் குடையாம்; இருந்தால் சிங்காசனமாம்;
நின்றால் மரவடியாம், நீள் கடலுள்  என்றும்
புணையாம் மணி விளக்காம், பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு.

“திருவனந்தாழ்வான், பிராட்டியுடன் கூடிய பெருமாளுக்கு அவர் செல்லும்போது குடை ஆவான். அவர் இருந்தால் சிங்காசனம் ஆவான். நின்றால் அவருடைய பாதுகை ஆவான். பரந்த கடலில் படுத்துறங்கின் தெப்பம் ஆவான். மங்கள விளக்காவான், பூம்பட்டாவான், அவர் தழுவிக் கொள்ளத் தலையணையும் ஆவான்” என்று அனந்தாழ்வானின் சிறப்பைக் காட்டுகிறார்.

இத்தகு சிறப்பு வாய்ந்த அழகிய நூறு அந்தாதிப் பாசுரங்கள் தந்தவர் பொய்கையாழ்வார்!

பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!
செய்ய துலா வோணத்தில் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே
வையம் தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனச மலர் கரு அதனில் வந்து அமைந்தான் வாழியே
வெய்ய கதிரோன்தன்னை விளக்கு இட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்பும் அவன் வாழியே
பொய்கை முனி வடிவு அழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com