பட்டியலைச் சாராத கோயில்கள்

பழைமை வாய்ந்த கோயில்கள் பல பூஜைகளே நடைபெறாத அளவுக்கு உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பட்டியலைச் சாராத கோயில்கள்
Updated on
1 min read

பழைமை வாய்ந்த கோயில்கள் பல பூஜைகளே நடைபெறாத அளவுக்கு உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 848 கோயில்கள் உள்ளன. இதில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள "ஏ கிரேடு' கோயில்களாக பெரியபாளையம் பவானி அம்மன், திருத்தணி முருகன் கோயில் ஆகிய 2 கோயில்கள் உள்ளன.

ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள "பி கிரேடு' கோயில்களாக, தொட்டிக்கலை ஆதிகேசவப் பெருமாள் கோயில், புட்லூர் பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், செம்புலிவரம் செங்காளம்மன் கோயில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய 4 கோயில்கள் உள்ளன.

ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள "சி கிரேடு' கோயில்களாக 93 உள்ளன.

கவனிப்பாரில்லை! மீதமுள்ள 748 கோயில்களும், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 12 மடங்கள், கட்டளைகளும் ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் உள்ள கோயில்களாக உள்ளன.

இந்தக் கோயில்கள், பட்டியலை சாராத கோயில்கள் என கூறப்படுகின்றன.

இதனால் இந்தக் கோயில்களை இந்து சமய அறநிலையத் துறையினர் கண்டுகொள்வதில்லை என்றும் இதுபோல் நூற்றுக்கணக்கான பழைமைவாய்ந்த கோயில்கள் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கின்றன என்றும் பக்தர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

பட்டியலைச் சாராத கோயில்கள் பலவற்றில், மின் விளக்கு வசதிகள் இல்லை. ஒரு வேளை பூஜை கூட நடத்தப்படாமலும் உள்ளன.

"கோயில்கள் இல்லாத ஊரில் குடியிருக்காதீர்' என்ற பழமொழிக்கு மாறாக 500-க்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த கோயில்கள் இருந்தும் அவற்றை முறையாகப் பராமரிக்காமல், மூன்று கால பூஜைகளை நடத்தாமல் கோயில்கள் இருந்து என்ன பயன்?

இந்து சமய அறநிலையத் துறையினர் கோயில்களின் உண்டியல் வசூலை எண்ணிப் பாராமல் அந்தக் கோயில்களை கட்ட இடம் கொடுத்த முன்னோர்களின் வள்ளல் குணத்தையும், அதை கலைநயத்துடன் கட்டிய வடிவமைப்பாளர்களின் அர்ப்பணிப்பையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றனர்.

"மூன்றில் ஒரு பங்கு நிதியை அரசு அளிக்கும்'

இக்கோயில்களின் அவல நிலை குறித்து இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

பாழடைந்த கோயில்களைச் சீரமைத்து திருப்பணி செய்ய கிராம மக்கள் நிதி வசூலிக்கும் தொகையில், மூன்றில் ஒரு பங்கு நிதியை அரசு வழங்கும். அந்தப் பணத்தில் கோயில் புனரமைப்பு செய்யலாம். அதுபோல் மாவட்டம் முழுவதும் பழுதடைந்த கோயில்கள் குறித்து பட்டியல் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பாழடைந்த கோயில்கள் சீரமைக்கப்படும். அரசே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட, ஆன்மிக ஆர்வலர்களின் பங்களிப்பு அவசியம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com