திதியை மாற்றிய தாடங்கம்

அன்று தை அமாவாசை 1 காவிரி சங்கமத்தில் பரிவாரங்களுடன் நீராடச் சென்று திரும்பும்போது ஸ்ரீ
திதியை மாற்றிய தாடங்கம்
Updated on
2 min read

அன்று தை அமாவாசை! காவிரி சங்கமத்தில் பரிவாரங்களுடன் நீராடச் சென்று திரும்பும்போது ஸ்ரீ அபிராமி அம்பிகையை தரிசனம் செய்திட திருக்கடவூரை வந்தடைந்தார் மன்னர் சரபோஜி. அச்சமயம் அம்பிகை சந்நதியில் உலக நினைவு எதுமின்றி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்த பட்டரை நோக்கி, இவர் யார்? என்று அருகிலிருந்தவர்களிடம் வினவினார்.

'இவர் ஒரு பித்தர்' என்று பதிலுரைத்தனர் அவர்கள். அம்பிகையை தரிசனம் செய்துவிட்டு வந்த மன்னர் பட்டரை சோதிக்க எண்ணி பட்டரே இன்று என்ன திதி?" என்று காரண காரியம் இல்லாமல் கேட்டார்.

பட்டருடைய செவியில் அரசரின் கேள்வி அரைகுறையாக விழுந்தது. தன் மனதிற்குள் முழுமதியின் ஒளிவட்டத்திடையே அம்பிகையின் திருவடியைக் கண்டு பரவசமடைந்து கொண்டிருந்த பட்டர், "இன்று பௌர்ணமி! என்று மன்னருக்கு பதிலுரைத்தார். அரசரும் இவர் உன்மத்தர்தான் என்றுணர்ந்து அரண்மனை ஏகினார். பட்டர் மன்னரை அவமதித்தாக மக்கள் கருதினர். தியானம் கலைந்து எழுந்த பட்டர் நடந்ததை உணர்ந்து மிகவும் வருந்தினார். வைராக்கியம் மேலிட எழுந்து சென்று அம்பிகையின் சந்நதியில் ஆழ்ந்ததொரு குழிவெட்டி அதில் தீ மூட்டி அதன்மேலே ஒரு விட்டத்திலிருந்து நூறு ஆரம் கொண்ட ஓர் உரியைக் கட்டித் தொங்கவிட்டார். பிறகு அதன்மேல் ஏறி அமர்ந்து அம்பிகையை மனதால் நினைத்துத் தலையால் வணங்கி, தன் மேல் சுமத்தப்பட்ட பெரும் பழியை துடைக்க வேண்டி, "உதிக்கின்ற" என்று தொடங்கும் அபிராமி அந்தாதியைப் பாடத் தொடங்கினார்.

ஒவ்வொரு பாடலும் முடிந்த உடனே, உரியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்துக் கொண்டே வந்தார். பகலவனும் மறையத் தொடங்கினான். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,

"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு; அவ்வழி கடக்கப்

பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டினியே!"

பாடி முடித்தவுடன் ஸ்ரீ அபிராமியன்னை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றி காட்சி தந்ததோடு மட்டுமில்லாமல் தன் தாடங்கம் தோடு ஒன்றை கழற்றி எடுத்து வானவீதியில் தவழவிட்டாள். அத்தாடங்கம் பௌர்ணமி நிலவின் ஒளியாக பொழிந்து பட்டர் வாய் சோர்ந்து அரசரிடம் கூறிய சொல்லையும் மெய் என நிரூபித்தது.

அரசர் உட்பட அனைவரும் பட்டரின் பெருமையை உணர்ந்தனர். அபிராமி அன்னையின் ஆணைப்படி தொடர்ந்து பாடி அந்தாதியை நூறு பாடல்கள் நிறைவு செய்தார் அபிராமி பட்டர்.

திருக்கடையூரில் அருளாட்சி புரியும் அன்னை அபிராமியின் மகிமையை செந்தமிழ்க் கவியாகப் பாடிப் பணிந்த அபிராமிபட்டரை இந்நாளில் (ஜன.,20-தை அமாவாசை) நினைவு கூறுவோம்! அவர் இயற்றிய அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்து பலன் பெறுவோம்!

திருக்கடையூர் திருத்தலத்தில் நிகழ்ச்சிகள்:

ஜனவரி 20ம் தேதி செவ்வாகிழமை காலை முதல் அமிர்த்தகடேஸ்வரருக்கும், அபிராமி அன்னைக்கும் மகன்யாச ருத்ர அபிஷேகம், பாராயணங்கள் அனைத்து சந்நதிகளிலும் அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெறுகிறது. மாலை சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடைபெற்ற பின் இரவு 8 மணி அளவில் அபிராமி அம்மன் சந்நதியில் பிரபல ஓதுவார் மூர்த்திகள் பங்கேற்று அபிராமி அந்தாதி 100 பாடல்களையும் பாடுவர். ஒவ்வொரு பாடல் முடிந்த பிறகு தூப, தீப, நைவேத்திய ஆராதனை நடைபெறும். பிரத்யேகமாக 79வது பாடல் முடிந்த பிறகு சிறப்பான வழிபாடு நடைபெறுகிறது. சுமங்கலிகளுக்கு திருமாங்கல்ய சரடு வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com