மஹா கும்பாபிஷேகம்: "தென்னாடுடைய சிவனே போற்றி' என கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Updated on
2 min read

சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இந்தக் கோயிலில் 2004-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ரூ.9 கோடியில் புனரமைப்புப் பணிகள் 2015-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கின. தங்கக் கவசம், வெள்ளி முகப்பு, மரக் கதவுகள், குளத்தின் படிக்கட்டுகள், தேர் உள்ளிட்ட அனைத்தும் பழுது பார்க்கப்பட்டன. இதையடுத்து, கோயில் புதுப் பொலிவுடன் காட்சி அளித்தது. இதைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழா தொடங்கியது.

முன்னதாக, மார்ச் 26-ஆம் தேதி முதல் மகா கணபதி. நவக் கிரக ஹோமங்களுடன் பூஜைகள் தொடங்கின. இதையடுத்து, கபாலீசுவரருக்கும், கற்பகம்பாளுக்கும் தனித் தனியாக பூரண கும்பம் வைத்து பூஜை, யாகங்களை 150-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை உச்சரித்து நாள்தோறும் நடத்தினர். இதேபோல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவந்தன.

பக்தர்கள் பரவசம்: இதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மஞ்சள் சாத்துப்படி, 11-ஆவது கால பூஜை ஆகியன நடத்தப்பட்டன. அதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் 7.15 மணி வரை 12-ஆவது கால பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 7.45 மணிக்கு யாக சாலையில் இருந்து புனித நீருடன் கலசங்கள் கும்பாபிஷேகத்துக்காக ராஜ கோபுரங்களை நோக்கி புறப்பட்டன.

இதைத் தொடர்ந்து, 8.39 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது வேத மந்திரங்களை உச்சரித்து கலசத்தில் உள்ள புனித நீரை கும்பங்களின் மீது சிவாச்சாரியார்கள் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து தீபாராதனை காட்டப்பட்டது.

இதைத், தொடர்ந்து, அனைத்து விமானங்கள், நர்த்தன விநாயகர், கபாலீசுவரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர், பரிவாரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது, கோயில் வளாகம், சுற்றுப்புறப் பகுதிகளில் கூடியிருந்த பக்தர்கள், "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி', "கபாலீஸ்வரா' என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இதையடுத்து, பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு பணியில் 1,200 போலீஸார்: கோயிலைச் சுற்றி 32 இடங்களில் சி.சி. டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு, 1,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தெற்கு மாட வீதியில் சிறப்புக் காவல் நிலையமும் அமைக்கப்பட்டிருந்தது. கோயிலைச் சுற்றி வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளிலிருந்து கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்னதாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள் கோயிலின் வெளிப்பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த பிரத்யேக வாகனங்கள் மூலம் கோயில் வளாகத்துக்குள் அழைத்து செல்லப்பட்டனர்.

சிறப்புகள் வாய்ந்த கோயில்

மயிலையே கயிலையாகப் போற்றப்படும் இந்தக் கோயிலில், பார்வதி மயில் வடிவம் பெற்று இறைவனை வழிபட்டதாகவும், பிரம்மன் தன் ஆற்றலை திரும்பப் பெற்றதாகவும், ராமன், சுக்கிரன் வழிபட்டு பேறு பெற்றதாகவும், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் தேவாரம் பாடியதாகவும் வரலாறு கூறுகிறது.

தேவாரப் பதிகம் பாடல் பெற்ற 274 சிவ ஸ்தலங்களில் 257-ஆவது கோயிலாகவும், தொண்டை நாட்டுத் தலங்களில் 24-ஆவதாகவும் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இவ்வாறாக, பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com