பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு பாபநாசம் காரையார் சொரிமுத்தையனார் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பங்குனி உத்திரம் திருவிழாவிற்காக பொதுமக்கள் தங்களது குலதெய்வம் மற்றும் சாஸ்தா கோவில்களுக்குச் சென்று வழிபடுவர். இதையடுத்து புதன்கிழமை பங்குனி உத்திரம் திருவிழாவிற்காக காரையார் சொரிமுத்தையனார், பிரான்சேரி கரையடி மாடசாமி கோவில், சேரன்மகாதேவி செங்கோடி சாஸ்தா கோவில், கடையம் சூட்சமுடையார் சாஸ்தா கோவில் உள்பட பல இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சாஸ்தா கோவில்களில் மக்கள் கூடி வழிபட்டனர். காரையார் சொரிமுத்தையனார் கோவிலுக்கு புதன்கிழமை இரவு முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து காணிக்குடியிருப்புக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும் பக்தர்கள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், வேன் மற்றும் கார்களில் அதிகமாக வந்ததால் காரையார் செல்லும் மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் மாடசாமி, பாபநாசம் வனச்சரகர் இளங்கோ ஆகியோர் தலைமையில் போலீஸார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
காரையார் தாமிரவருணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சொரிமுத்து அய்யனார் கோவிலில் வழிபாடு செய்தனர். பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு சொரிமுத்தையனார் கோவில் நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு, குடிநீர், காலந்தாழ்த்தாமல் சுவாமி தரிசனம் செய்ய வரிசை ஒழுங்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.