ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! (பகுதி 2)

ஓதிமலை முருகன் தரிசன அனுபவத்தை இங்கே தொடர இருக்கின்றோம். ஓதிமலை மலை அடிவாரம் முதல் பயணத்தை தொடர்ந்தோம்.
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! (பகுதி 2)
Published on
Updated on
4 min read

ஓதிமலை முருகன் தரிசன அனுபவத்தை இங்கே தொடர இருக்கின்றோம். ஓதிமலை மலை அடிவாரம் முதல் பயணத்தை தொடர்ந்தோம். நம்முடன் வந்த உறவுகள் ஒரே வீச்சில் மலையேறி விட்டனர். நாம் சற்று மெதுவாகவே சென்றோம். மலை உச்சியில் சென்று வேலவனின் திருப்பாதம் அடைந்தோம். அங்கே கண்ட காட்சி!

நாம் மாதம் மாதம் தான் உழவாரப் பணி செய்ய வேண்டும் என்று இல்லை. நமக்கு எப்பொழுது இறைத்தொண்டு செய்ய வாய்ப்பு கிடைக்கின்றதோ அப்போது செய்து விட வேண்டும். என்று நாம் அடிக்கடி பதிவுகளில் கூறி வருகின்றோம். நம்முடன் வந்த TUT உறவுகளும் இந்த கூற்றை மெய்ப்பித்தனர். அதனைப் பற்றி காணும் முன்பு, புதிய வாசகர்களுக்காக ஒரு முன்னோட்டமாய் இதோ ஓதிமலை
குறிப்புகள்.

தரைமட்டத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. உயரம். மலைக்கு மேலே செல்ல சுமார் 1,880 படிக்கட்டுக்கள். வாகனங்கள் மேலே செல்ல வசதி இல்லை. எனவே, வாகனங்களைக் கீழே நிறுத்தி விட்டு, படியேறிச் சென்றே முருகப் பெருமானைத் தரிசிக்க வேண்டும். வழியில் விநாயகரைக் கடந்து, கோயிலை நெருங்குவதற்கு முன்பு வரை சற்றே செங்குத்தாக உள்ளது. மற்றபடி, சுலபமான பயணம்தான். மலையில் தண்ணீர் வசதி கிடையாது; கடைகளும் இல்லை.

மிகப் பழைமையான ஆலயம். சுமார் 1,800 வருடங்களுக்கு முற்பட்டதாம். சேரமான் பெருமாள், மனுநீதிச் சோழன், வஜ்ரங்கபாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் காலத்தில் ஆலயத்தின் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றதாம்! அப்போது புண்ணிய நதிகள் பலவற்றிலும் இருந்து கலசத்தில் நீர் சேகரித்து வந்து, குடமுழுக்கு வைபவம் நடந்ததாம். இதை உறுதிப்படுத்தும் சான்றுகள் ஓலைச் சுவடிகளில் இருக்கின்றவாம். செங்கற்களால் ஆன இந்த ஆலயம், 1932-ல் கருங்கல் ஆலயமாக திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேக வைபவம் அரங்கேறியதாம்.

சிறிய கோயில். ஆலயத்தில் ஸ்ரீவிநாயகர், நாகர், இடும்பன், விஸ்வநாதர், விசாலாட்சி, ராஜராஜேஸ்வரி, சப்தமாதாக்கள் ஆகிய தெய்வங்களுக்கு சந்நிதி உண்டு. இதை அடுத்து, ஸ்ரீகுமார சுப்ரமண்யரைத் தரிசிக்கிறோம். 28 சிவாகமங்கள் மற்றும் குமார தந்திரம் ஆகியவற்றில் விளக்கப்படாத திருமேனி இது. ஐந்து திருமுகங்கள் மற்றும் எட்டுத் திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமானின் பின்புறம் மயில் வாகனம். சூர சம்ஹாரத்துக்கு முன்பு அமைந்த தலம் என்பதால், இந்திரனே இங்கு மயிலாக அமர்ந்துள்ளாராம். 

குழந்தை முகம்... அலட்சியம் செய்த பிரம்மனை மிரட்டியதால் முகத்தில் அதிகார தோரணை தென்படுகிறது. ஒரு காலைச் சற்று முன்னே எடுத்து வைத்துக் காணப்படுகின்ற தோற்றம் (இதைச் சற்று கூர்ந்து கவனித்தால்தான் தெரியும்). அதாவது, 'எதையும் நான் சாதிப்பேன். உங்களுக்கு உதவுவதற்காக புறப்பட்டு வருகிறேன்' என்பது போல் பக்தர்களுக்கு உதவ முன் வரும் வடிவம்! வலக் கரங்களில் ஒன்று அபய முத்திரையில் இருக்க, மற்ற மூன்று கரங்களில் கத்தி, அம்பு, வஜ்ஜிரம் ஆகியவையும், இடக்கைகளில் ஒன்று வரத முத்திரையில் இருக்க, மற்ற மூன்று கரங்களில் கேடயம், வில், பாசம் ஆகியவையும் காணப்படுகின்றன. அலங்கார சொரூபனை உளமார தரிசிக்கிறோம்.

பிற ஆலயங்களில் இருப்பது போல், பெரிய பீடம் இல்லை. இங்கு திருகு பீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகுமார சுப்ரமண்யர் தரையோடு தரையாக இருக்கும் பீடம் இது! சிவபெருமானுக்கு ஓம்காரத்தின் பொருளை விளக்கிய நிகழ்வு, மூன்று யுகங்களுக்கு முன்பு  நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல தலங்களில் தரிசித்திருந்தாலும் ஓதிமலையில் முருகப்பெருமானை தரிசித்து திரும்பும்போது ஏற்படும் பரவச அனுபவம், ஆனந்தமானது; அனுபவித்துப் பாருங்கள், புரியும்!

ஸ்ரீகுமார சுப்ரமண்யரிடம் பூ வைத்து வரம் கேட்டல் எனும் பிரார்த்தனை இங்கு விசேஷம். இல்லறம், திருமணம், தொழில், விவசாயம், வெளிநாட்டு உத்தியோகம் ஆகியவை குறித்து முருகப்பெருமானிடம் உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துகின்றனர், இந்தப் பகுதியில் வசித்து வருபவர்கள் வெள்ளை மற்றும் செவ்வரளிப் பூவை, முருகப் பெருமானின் சிரசின் மேல் ஆலய அர்ச்சகர் வைப்பார். அப்போது அந்தப் பூ, முருகப் பெருமானின் வலது பக்கத்தில் விழுந்தால், அவர் உத்தரவு கொடுத்து விட்டதாக எடுத்துக் கொள்கின்றனர். இடப் பக்கத்தில் விழுந்தால், சிறிது காலம் காத்திருக்க 
வேண்டுமாம். பூ வைத்து உத்தரவு கேட்பதற்காகவே விசேஷ தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இத்தகு சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில், இதோ நம் யாத்திரை தொடங்கியது. மேலே ஓதியாண்டவரின் திருப்பாதம் அடைந்து விட்டோம். மலை உச்சியில் தெரிகின்ற கோயிலின் நுழைவாயில் கோயிலின் நுழைவாயில் மட்டுமல்ல. நம் ஆன்மாவின் உயிர்ப்பைக் காட்ட இருக்கும் நுழைவாயில். நுழைவாயில் வாயில் வழியே உள்ளே சென்றதும், மகிழ்ச்சிக் கடலில் மிதந்தோம்.ஆம். நம் உறவுகள் ஒவ்வொருவரும் கோயிலை சுத்தம் செய்யும் சேவையில் ஈடுபட்டனர்.

உழவாரப் பணி என்றால் மாதம் ஒருமுறை அனைவரும் குழுவாக கூடி, யாத்திரை சென்று, கோயிலில் உள்ள தொண்டில் ஈடுபடுவது என்று நீங்கள் நினைத்தால் அது மிக மிகத் தவறு. எப்போதெல்லாம் நமக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நாம் திருக்கோயில் கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டும். அது தான் உண்மையான உழவாரப் பணி. இதோ நீங்களே பாருங்கள். மனதில் எவ்வளவு ஆசை இருந்தால், முருகனுக்கு தொண்டாற்ற நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

TUT உழவாரப் பனியின் படைத்தளபதி என்றே இவரை சொல்லலாம். வேலை செய்ய ஆரம்பித்தார் என்றால் முடிக்காமல் விட மாட்டார். முருகன் அருள் முன்னிற்க ! நாம் நம்மால் முடிந்த சேவையைத் தொடங்கினோம். முழு மூச்சாக உழவார பணிகளை முடித்தோம். நாமும் அனைத்தும் கண்டு மகிழ்வுற்றோம். கந்தன் கருணை என்று கேள்விப்பட்டு இருக்கின்றோம். அனுபவ ரீதியாக இங்கே நாம் உணர்ந்தோம். முருகன் தரிசனம் பெற வந்தோம். ஆனால் அதை விட நமக்கு முருகனின் சந்நிதியை சுத்தம் செய்யும் உழவாரப் பணி வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உளமாற உழவாரப்பணி செய்தோம். 

நன்றாக யோசித்துப் பாருங்கள். அன்று பல அடியார்கள் ஓதிமலை வந்தார்கள், ஆனால் நம் TUT குழுவின் அன்பர்களை ஓதிமலைக்கு வரச் செய்து, அருமையான தொண்டில் நம்மை இணைத்தார் என்றால் நாமெல்லாம் முருகனின் கடைக்கண் பார்வை பெற்றவர்கள் என்று துளியும் சந்தேகம் கொள்ள வேண்டாம். நம் மனதில் இருந்த தீய குணங்கள் விலகுவதை கண்டோம். பின்னே..சும்மாவா? உழவாரம் செய்ய நம் மனதில் அன்பின் ஆழம் இருக்க வேண்டும். அன்பின் ஆழம் இருக்க வேண்டும் என்றால், மனதில் தீமை வெளியேற வேண்டும். கண்கூடாக கண்ணுற்றோம். பணி நிறைவில்
ஓதியப்பர் சந்நிதி சென்று அமர்ந்தோம்.

- அடுத்த பதிவில் ஓதியப்பர் அருள் பெறுவோம்.

- ராகேஸ் TUT

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com