ஆட்டிப்படைக்கும் சனிபகவானை விரட்டியடித்தவர் இவர் தான்!

நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனிபகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பார்கள்.
ஆட்டிப்படைக்கும் சனிபகவானை விரட்டியடித்தவர் இவர் தான்!
Published on
Updated on
2 min read

நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனிபகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பார்கள்.

ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் சனிபகவான் தருவார். பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனியின் விளைவுகளை எதிர்கொள்ளும் ஒரு கால கட்டம் வரும். ஏழரை சனி மற்றும் சனி மஹா தசை ஆகியவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி கிரகம் தீங்கு ஏற்படுத்தும் காலங்களாகும்.

ஜோதிட சாஸ்திரப்படி சனிபகவான் ஆட்டிப்படைப்பார் என்ற கருத்தானது தவறானதாகும். ஒருவர் பிறந்த ஜாதகக் கட்டத்தின் பல்வேறு வீடுகளில் சனி கிரகத்தின் நிலையைப் பொறுத்ததாகும். சனியின் மோசமான அமைப்பு, மனிதனை இன்னல்கள் நிறைந்த ஒரு உலகிற்குள் தள்ளும். ஆனால், ஒரு லாபகரமான அமைப்போ ஒரு மனிதனுக்கு முடிவில்லாத வளங்களையும், வெகுமதிகளையும் பெற்றுத்தரும். 

ஒரு மனிதனுக்கு ஜாதகப்படி சனிபகவானின் தாக்கம் இருக்கும் போது, அவர் அனுமனை வணங்க வேண்டும் என்று சொல்வதுண்டு. அனுமன் சங்கட மோச்சன் என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால், அவர் தன் பக்தர்களை அனைத்து விதமான சங்கடங்களிலிருந்தும் விடுவிக்கிறார். அனுமன் மிகுந்த ஆற்றல் மிக்கவராக இருந்தாலும், எப்பொழுதும் பணிவானவர். அவர் சூரிய பகவானிடம் தன்னை மாணவராக ஏற்றுக் கொள்ளும் படி வேண்டினார். அதற்கு சூரிய பகவானோ, தான் நாள் முழுவதும் வானத்தில் பயணிக்க வேண்டி இருப்பதால், எப்பொழுதும் ஓய்வின்றி இருப்பதாகக் கூறினார்.

அதற்குத் தீர்வாக, அனுமன் சூரிய பகவானின் தேரின் முன் பக்கம் அமர்ந்து, அது வானெங்கும் பறக்கும் போது, தானும் உடன் பயணிக்கத் தொடங்கினார். அவர் சூரிய பகவானுக்கு முதுகுப் புறத்தைக் காட்டியபடி பயணித்தார். மேலும், சூரியனிடமிருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டார் அனுமன்.

அனுமனின் பக்தர்களை சனி ஏன் தொந்தரவு செய்வதில்லை?

அனுமன், தனது கல்வியைக் கற்று முடித்த பிறகு, குருவான சூரிய பகவானிடம், குருதட்சணையாக அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். சூரிய பகவான் குருதட்சணை எதுவும் வேண்டாமென்று கூறிவிட்டார். ஆனால், அனுமன் வற்புறுத்தவே, பின்னர் சூரிய பகவான் தன் மகனான சனி தேவனின் கர்வத்தை அழிக்குமாறு அனுமனைக் கேட்டுக் கொண்டார்.

அனுமன் சனி லோகத்திற்கு சென்று, சனி தேவனைப் பார்த்து அவரது வழிகளைத் திருத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், சனி தேவனோ கோபம் கொண்டு, இறைவன் அனுமனின் தோளின் மீது தாவி ஏறி, தனது முழு பலத்தையும் கொண்டு, அனுமனைத் தாக்க முயற்சித்தார். அனுமன் தனது உருவத்தை மிகப் பெரியதாக அதிகரித்துக் கொள்ளத் தொடங்கினார். 

அவர் மிகப்பெரிய உருவமாக ஆன பிறகு, தோளிலிருந்த சனிபகவான் மேற்கூரையில் இடித்துக் கொண்டு நசுங்கினார். அது அவருக்கு அளவில்லாத வலியை ஏற்படுத்தியது. யாராலும் தப்பிக்க முடியாததாகக் கருதப்பட்ட சனி தேவனின் கர்வம் உடைந்தது. அவர் இறைவன் அனுமனிடம் மன்னிப்புக் கோரி, தனது சக்திகளால் அனுமனின் பக்தர்களை ஒருபோதும் பாதிப்பதில்லை என்ற வரத்தை அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com