சாதனைப் பெண்மணி ஆண்டாள் அவதரித்த திருஆடிப்பூரம்

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரமே ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகின்றது. உலக மக்களைக் காக்க சக்தியாக வடிவெடுத்த அம்பாள் அன்றைத் தினமே தோன்றியதாகக் கூறப்படுகிறது
சாதனைப் பெண்மணி ஆண்டாள் அவதரித்த திருஆடிப்பூரம்

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரமே ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகின்றது. உலக மக்களைக் காக்க சக்தியாக வடிவெடுத்த அம்பாள் அன்றைத் தினமே தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆடி மாதம் முழுவதுமே அன்னைக்கு விதவித அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்வதுண்டு.

ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலமாகும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னைக்கும் வளையல் காப்பு நடத்திக் கண்டு களித்திடும் நாள்.

எத்தனையோ தெய்வப், பெண்களைப் பற்றி படித்திருப்போம். உலக நன்மைக்காக லட்சுமி தாயாரே சீதா, ருக்மணி என்ற அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்து தங்களின் அதீத பக்தியின் காரணமாக ராம கிருஷ்ணரை கணவராக அடைந்தனர். ஆனால், பூமாதேவி, ஆண்டாளாகப் பூமியில் பிறந்த போது அவளுக்காகப் பகவான் பூமியில் பிறக்கவில்லை. கோயிலில் சிலை வடிவில் சயனம் கொண்டிருந்த பெருமாளை, கணவனாக அடைய வேண்டும் என, மனதிற்குள் உறுதி பூண்டாள் ஆண்டாள்.

மகளின் இந்த விசித்திரமான ஆசையை அறிந்த பெரியாழ்வார், மானிடப் பெண் ஒருத்தி, கோயிலில் சிலையாக இருக்கும் கடவுளை எவ்வாறு கணவனாக அடைய முடியும் என, நினைத்து வேதனை அடைந்தார். ஆனால், ஆண்டாள் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவள் மனதில், பெருமாள் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்ததால், கண்ணன் சிலையாக இருந்தால் என்ன, அவன் தான் தன் கணவன் என்பதில் உறுதியாக இருந்தாள்.

தினமும் பூமாலையை தன் கூந்தலில் சூடி, கண்ணனுக்குத் தான் பொருத்தம் தானா என மனதிற்குள் மகிழ்ந்தாள். தான் சூடிய மாலையைக் களைந்து பெரியாழ்வாரிடம் பூஜைக்கு கொடுத்து வந்தாள். ஒரு நாள் பெரியாழ்வார் மாலையில் முடி இருப்பதைக் கண்டு அதிர்ந்தார். வேறொரு மாலையை சுவாமிக்கு சூட்டி வழிபட்டார். ஆனால் கோதை அணிந்த மாலையே தனக்கு விருப்பமானது என சுவாமி தெரிவித்தார்.

கடவுள் மேல் அவள் கொண்ட ஆத்மார்த்தமான பக்தியும், காதலும், சிலையாக இருந்த தெய்வத்தையும், மனம் உருக வைத்து, அவளை ஏற்றுக் கொள்ள வைத்தது. தான் நினைத்த திருமாலையே கணவனாக அடைந்து, எந்த மானிட பெண்ணும் செய்யாத சாதனையைச் செய்தாள் ஆண்டாள். சுவாமி தம் இருப்பிடமான ஸ்ரீ ரங்கத்திற்கு ஆண்டாளை அழைத்து வருமாறு பெரியாழ்வாருக்கு உத்தரவிட்டார். அங்கு ஆண்டாள் இறைவனோடு இரண்டுறக் கலந்தாள்.

இத்தகைய வைராக்கிய உணர்வு கொண்ட இந்த சாதனைப் பெண்மணி, ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள். தங்கள் லட்சியத்தில் ஒருமித்த ஈடுபாடும், அதை அடைய வேண்டும் என்ற வைராக்கிய உணர்வும் இருந்தால், நினைத்ததைச் சாதிக்கலாம் என்பதற்கு, ஆண்டாளே சிறந்து உதாரணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com