ஆண்கள் மட்டுமே நுழையக்கூடிய அம்மன் கோயில்!

பெண்கள் அனைவரும் பெண்தெய்வமாக போற்றப்படுவது அம்மனை தான். தமக்கு ஏற்படும் பிரச்னைகளில் இருந்து விடுபட, அம்மனுக்கு விரதம் இருந்து பல விதமான பிரார்த்தனைகளை...
ஆண்கள் மட்டுமே நுழையக்கூடிய அம்மன் கோயில்!
Published on
Updated on
2 min read

பெண்கள் அனைவரும் பெண்தெய்வமாக போற்றப்படுவது அம்மனை தான். தமக்கு ஏற்படும் பிரச்னைகளில் இருந்து விடுபட, அம்மனுக்கு விரதம் இருந்து பல விதமான பிரார்த்தனைகளை செய்து அம்பாளின் அருளை பெறுகின்றனர். அப்படி இருக்க, கரூர் மாவட்டம், பெரிய திருமங்கலத்தில் ஆண்கள் மட்டுமே அந்த கோயிலுக்குள் நுழைய முடியுமாம். அந்த கோயில் தான் அருங்கரை அம்மன் கோயில்.

இக்கோயிலின் தலவரலாறு:
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த மீனவர்கள் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்தனர். ஒரு சமயம் ஒரு மீனவர் ஆற்றில் வலைவீசிய போது, அம்மன் சிலை உள்ள பெட்டி ஒன்று சிக்கியது. அம்பாள் தனக்கு அருள்புரிவதற்காகவே ஆற்றில் வந்ததாகக் கருதிய மீனவர்கள், ஆற்றங்கரையிலுள்ள மரத்தின் அடியில் பெட்டியை வைத்து வழிபாடு செய்து வந்தனர். காலப்போக்கில் அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிடவே, மணல் மூடி பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது.

பெட்டி இருந்த இடத்தில் சிறிய மேடு மட்டும் இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு, இப்பகுதியில் நல்லதாய் என்ற சிறுமி, மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது ஒரு பசு மட்டும் மரத்தின் அடியில் இருந்த மணல் மேட்டின் மீது பால் சொரிந்ததைக் கண்டு வியப்புற்று அருகில் சென்று பார்த்தபோது ஒரு மேடு இருந்தது. அதன் மீது அவள் அமர்ந்தாள். அதன்பின் எழவில்லை.

மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பின. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள் அவளைத்தேடி இங்கு வந்தபோது, சிறுமி மணல் திட்டில் அமர்ந்திருந்ததைக் கண்டனர். அங்கிருந்து வர மறுத்த சிறுமி அவர்களிடம், நான் இங்கேதான் இருக்க விரும்புகிறேன்.

என்னைக்கண்ட இந்த நாளில், இதே நேரத்தில் மட்டும் எனக்குப் பூஜை செய்து வழிபடுங்கள் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள். பின், அவர்கள் சிறுமியை அம்பாளாக எண்ணி உருவம் ஏதுமில்லாமல் வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் இங்குக் கோயில் கட்டப்பட்டது.

கோயிலின் தல சிறப்பு:
சிறுமியைத் தேடிய ஆண்கள் இப்பகுதியில் வந்தது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேளை என்பதால், இங்குச் செவ்வாய்க்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது.

கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூடக் கோயிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. அம்பாளுக்குப் பூஜை முடிந்தபின்பு, படைக்கப்பட்ட பூஜைப் பொருட்கள் மற்றும் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவற்றை கோயில் முன் மண்டபத்தில் இருந்து சூரை விடுகின்றனர். இதனை, பெண்கள் தங்களது சேலையில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருள்வதாக நம்பிக்கை.

பிராத்தனை:
இங்குப் பிரார்த்தனை செய்யும் ஆண் மகன்கள் தங்கள் குடும்பங்கள் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும் வேண்டிக் கொள்கின்றனர். நேர்த்திக்கடனாகப் பக்தர்கள் அன்னதானம் செய்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com