

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது சுகவனேஸ்வரர் கோயில். சேலத்தில் உள்ள முக்கியமான வழிபாட்டுத்தலமாக இக்கோயில் உள்ளது. இக்கோயில், 13-ம் நூற்றாண்டில், மாமன்னன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. முனிவர் சுகபிரம்ம ரிஷி இக்கோயிலில் வழிபட்டு, தவம் செய்து வந்தார் என்பது சான்றோர் கூற்றாகும்.
இக்கோயில், அருணகிரி நாதர், முருகப்பெருமானை குறித்து ஒரு பாடல் பாடிய காரணத்தினாலும் புகழ்பெற்று விளங்குகிறது. சேலத்தின் ஊடே செல்லும் திருமணிமுத்தாற்றின் கரையில் உள்ளது இந்த சிவாலயம். கிளி கொஞ்சும் வனமாக இருந்ததாலும் கிளி முக சுகமுனி தவமியற்றி வழிபட்ட இடமாதலால் இங்குள்ள இறைவன் சுகவனேசுவரர் எனப்படுகிறார். புராண வரலாறு என்ன சொல்கிறது என முதலில் பார்ப்போம்.
பிரம்மன் தன் படைக்கும் தொழிலை பற்றி முனிவர்களிடம் விளக்க அதனை கேட்டுக்கொண்டிருந்த சுகமுனி சரஸ்வதியிடம் அப்படியே சொல்லி விட்டார். பிரம்மன் அதனால் அவரை கிளிமுகனாக சபிக்கிறார். இதனால்தான் சொன்னதை சொல்கிறது கிளி. சாபம் பெற்ற சுகமுனிவர் இத்தலம் வந்து தவமியற்றுகிறார். ஒருநாள் கிளி வேட்டைக்கு வந்த வேடன் கிளிகளை பிடிக்க வந்தபோது அனத்தும் ஒர் புற்றில் பதுங்க வேடனும் விடாமல் புற்றை இடிக்கிறான். புற்றினுள் சிவலிங்கம் இருக்கிறது, அதுஉடையாமல் காக்க சுகமுனி தன் இறக்கையால் போர்த்தி பாதுகாக்கிறார். வேடன் வெட்டியதால் இறக்கையில் இருந்து ரத்தம் கசிந்து லிங்கத்தின் மேல் விழ பெருமான் சுக முனிவருக்கு பாவ நிவர்த்தி தருகிறார்.
ஔவையார் தத்து பெண்ணிற்கு இறைவன் அருளால் திருமணம் செய்விக்கிறார். ஆதிசேஷன் வழிபட்ட தலம். பல்லி விழுந்த தீங்குகள் நீங்க இங்கு வழிபடலாம். கிழக்கிலும் மேற்கிலும் மூன்று நிலை கோபுரங்கள் உள்ளன. கிழக்கில் கருங்கல் ஸ்தம்பம் மற்றும் தீர்த்த குளமும் உள்ளது. கோபுரத்து இடதில் குரும்ப விநாயகர் சிறிய அளவிலான தனி சன்னதி கொண்டுள்ளார். கோபுரம் தாண்டியதும் முதல் சன்னதியாக அம்பிகை தெற்கு நோக்கியபடி உள்ளதை கண்டு வணங்கி விட்டு மகா மண்டபத்தில் உள்ள பெரிய நந்தியை காணலாம். நந்தியின் பின்புறம் பித்தளை கவசமிடப்பட்ட கொடிமரம் உள்ளது.
அழகிய முறையில் எவரையும் வசீகரிக்கும் வண்ணம் உள்ளது இரு துவார பாலகர்கள் சிலைகள். உள்ளே எம்பெருமான் கம்பீரமாய் ஆளுயரத்தில் பெருத்த பாணத்துடன் சதுர ஆவுடை கொண்டு சுகவனேசுவரர் உள்ளார். தென்மேற்கில் இரட்டை விநாயகரும் வடமேற்கில் முருகனும் தனி கோயில் கொண்டுள்ளனர். தென்புறம் அறுபத்து மூவரும் தென்கிழக்கில் பைரவரும் உள்ளனர். இறைவன் இறைவி சன்னதி இடையில் அமண்டூக தீர்த்தம் எனும் கிணறு உள்ளது இதில் தவளைகள் வசிப்பதில்லை என்பதால் இப்பெயர். இதனை ஒட்டி சுகமுனி வியாசர் விநாயகர் சிலைகள் உள்ளன.
அனைத்து வகையான விழாக்களும் சிறப்புற நடடைபெற்று வருகின்றன. இக்கோயில், அருணகிரி நாதர், முருகப்பெருமானை குறித்து ஒரு பாடல் பாடிய காரணத்தினாலும் புகழ்பெற்று விளங்குகிறது. பல்வேறு வரலாற்றுச் சிற்பங்களையும், பாண்டியரின் மீன் சின்னங்களும் இக்கோயிலின் பிரகாரத்தில் காணலாம். சேலத்திற்கு வருகை தரும் யாவரும் இப்பழம்பெரும் கோயிலுக்கு சென்று வருதல் அவசியம்.
- கடம்பூர் விஜயன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.