ஒரே நாளில் நவக்கிரக கோயில்களை தரிசிப்பது எப்படி? 

கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியை சுற்றி ஒன்பது நவக்கிரக ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. ஒன்பது நவக்கிரக ஆலயங்களை ஒரே நாளில் தரிசனம்...
ஒரே நாளில் நவக்கிரக கோயில்களை தரிசிப்பது எப்படி? 
Published on
Updated on
3 min read

கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியை சுற்றி ஒன்பது நவக்கிரக ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. ஒன்பது நவக்கிரக ஆலயங்களை ஒரே நாளில் தரிசனம் செய்ய எந்த வழித்தடத்தில் சென்றால் உரிய நேரத்தில் கோயிலை அடையலாம் என்று பார்ப்போம். 

ஒன்பது நவக்கிரக ஆலயங்களில் முதலில் தரிசனம் செய்ய வேண்டியவை திங்களூர் (சந்திரன் ஸ்தலம்). கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கி.மீ தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்குச் சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.

இரண்டாவதாக தரிசனம் செய்யவேண்டியது ஆலங்குடி (குரு ஸ்தலம்). ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

இதற்கு நடுவில் காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்துக் கொள்ளலாம்

மூன்றாவதாக தரிசிக்கவிருப்பது திருநாகேஸ்வரம் (ராகு ஸ்தலம்). கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கி.மீ தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில் 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாகச் செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

நான்காவதாக செல்லவிருப்பது சூரியனார் கோவில் (சூரியன் ஸ்தலம்). நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவக்கிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாகக் கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இங்குச் சூரிய பகவானைத் தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

ஐந்தாவதாக நாம் தரிசிக்கவிருப்பது கஞ்சனூர் (சுக்கிரன் ஸ்தலம்). சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கி.மீ தொலைவிலேயே அமைந்திருப்பதால் 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15 மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

ஆறாவதாக தரிசிக்கவிருப்பது வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய் ஸ்தலம்). நவக்கிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து  20 கி.மீ தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கி.மீ தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

ஏழாவதாக நாம் தரிசனம் செய்ய வேண்டியது திருவெண்காடு (புதன் ஸ்தலம்). வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கி.மீ அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிடத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00 மணிக்கு கிளம்ப வேண்டும்.

எட்டாவதாக தரிசனம் செய்யவிருப்பது கீழ்பெரும்பள்ளம் (கேது ஸ்தலம்). திருவெண்காட்டிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்குப் பரிகாரம் செய்ய இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். 45 நிமிடத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00 மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம். 

ஒன்பதாவதாக திருநள்ளாறு (சனி ஸ்தலம்). நவக்கிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாகச் செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம்.     கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00 மணிக்கு புறப்பட்டால் 40 கி.மீ தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகமாகச் சென்றால் 8.00 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணி நேரம் தரிசிக்கலாம்.

9.30 மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம். 

குறிப்பு; 
நவக்கிரக கோயிலை பேருந்து மூலம் செல்வது சற்று கடினம். ஏனெனில் சரியான நேரத்திற்கு அனைத்து இடங்களிலும் பேருந்து கிடைக்க வேண்டும். இது காரில் செல்பவர்களுக்கு எளிதாக இருக்கும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com