மஹாளய பட்சமும் நம் வீடு தேடி வரும் முன்னோர்களும்

இன்று முதல் மஹாளய பக்ஷம் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு தினமும் முன்னோர்களை வழிபடுவது நன்மையைத் தரும்.
மஹாளய பட்சமும் நம் வீடு தேடி வரும் முன்னோர்களும்
Published on
Updated on
2 min read

இன்று முதல் மஹாளய பக்ஷம் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு தினமும் முன்னோர்களை வழிபடுவது நன்மையைத் தரும். தாயார் தகப்பனார் இல்லாதவர்கள் தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. மற்றவர்கள் தினமும் காலையில் குளித்தவுடன் முன்னோர்களை வணங்கி விட்டு அதன் பின் வேலைகளை தொடங்குவது நல்லது. 

மஹாளய பட்சமாகிய இந்தப் பதினைந்து நாட்களும் நமது முன்னோர்களே நம் வீடு தேடி வந்து, நம்முடன் தங்கியிருந்து, நாம் அளிக்கும் உபசாரங்கள், பூஜைகள் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்று, நம்மை ஆசீர்வதிக்கின்றனர். பித்ருக்கள் மனநிறைவு பெற்று நம்மை ஆசீர்வதிப்பதால், முற்பிறவித் தவறுகளால் இப்பிறவியில் நமக்கு ஏற்படும் அல்லது ஏற்படக்கூடிய கடன் தொல்லைகள், நோய்கள், குடும்பப் பிரச்னைகள், குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் தடங்கல்கள், செய்வினை தோஷங்கள், நியாயமில்லாமல் பிறரால் கொடுமைக்கு ஆளாகுதல், புத்திரப்பேறின்மை, கணவன்-மனைவியரிடையே அன்யோன்யம் குறைதல், கணவன்-மனைவி பிரிந்திருத்தல், உத்தியோகத்தில் தொல்லைகள், மனநலக்குறைவு, குடும்பத்தில் ஏற்படும் தற்கொலைகள், அகால மரணங்கள், காரணமற்ற மனபயம் ஆகிய மிகக்கொடிய துன்பங்களும்கூட அடியோடு நீங்கிவிடும் என்பது ஐதீகம். 

பித்ருக்கள் எப்படி வருவார்கள்? 
மஹாளய பட்சம் ஆரம்ப தினத்தன்று பித்ரு தேவதைகள், சூரிய பகவான், தர்மராஜன் ஆகியோரின் அனுமதி பெற்று பித்ருக்கள், ஸ்வர்ண (தங்கம்) மயமான விமானங்களில் ஏறி நம்மிடம் வருகிறார்கள். இந்த விமானங்கள் சூரியனின் ஒளிக்கற்றைகள் மூலம் பறந்து வருகின்றன. இவ்விதம் பித்ருக்கள் பூமியில் இறங்கும்போது அவர்களைத் தேவர்களின் உலகிலுள்ள மகரிஷிகள் ஆசீர்வதிக்கின்றனர்.  தேவர்கள் வணங்குகின்றனர்.

பித்ருக்கள் பரம பவித்திரமானவர்கள். தங்களது ஜீவித காலத்தில் செய்துள்ள புண்ணிய செயல்களால் புடமிட்ட தங்கம்போல் ஒளிபொருந்தியவர்களாகப் பித்ருக்கள் பிரகாசிக்கிறார்கள் எனப் புராதன நூல்கள் போற்றிப் புகழ்கின்றன. மீண்டும், தங்கள் குழந்தைகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதால், அவர்கள் பேருவகை அடைவதாக ‘கருடபுராணம்’ கூறுகிறது. அவர்கள் நம்மிடையே வந்து நம்முடன் தங்கும் இந்தப் பதினைந்து புனித நாட்களும் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேசவேண்டும், வீட்டை எப்படிப் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ‘வைத்யநாத தீக்ஷிதம்’ என்ற வடமொழி நூல் அதிஅற்புதமாக விளக்கியுள்ளது.

பதினைந்து நாட்களும் எப்படி இருக்க வேண்டும்?
இந்த, பதினைந்து நாட்களிலும், ஒவ்வொருவரும் நமது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.

நாம் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குச் சுத்தமாக இருக்கிறோமோ, எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குப் பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கிறோமோ அந்த அளவிற்கு இந்தப் பதினைந்து நாட்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அடைகிறார்கள். பித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாட்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மையைக் கண்டு மனத் திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள்.

நமக்கு உதவியவர்களுக்கும் திதி கொடுக்கலாம்...
நமக்குப் பல தருணங்களில் அன்பும், இரக்கமும் காட்டி உதவிய பித்ருக்களுக்கும் இந்த மஹாளய பட்சத்தில் நினைவுகூர்ந்து திதி செய்யலாம். இவர்களுக்கு ‘காருண்ய பித்ருக்கள்’ என்று பெயர். அதாவது நாம் துன்பப்படும்போது நம்மீது கருணைகாட்டி உதவிய பித்ருக்கள் என்று பொருள்.

இவ்வாறு, சிரத்தையுடன் மஹாளய பட்சத்தை அனுஷ்டிப்பவர்கள் குடும்பங்களில் எத்தகைய துன்பமானாலும் நொடியில் தீர்ந்து அந்தக் குடும்பம் செழிப்பதை அனுபவத்தில் காணலாம். இந்தப் பதினைந்து நாட்கள் பூஜையைச் செய்யாமல் விடுபவர்கள் எளிதில் கிட்டாத ஓர் அரிய நல்வாய்ப்பினை இழந்துவிடுகிறார்கள். ஆதலால் பரம பவித்திரமான இந்தப் பூஜையை அன்பர்கள் அனைவரும் செய்து பயனடைய வேண்டும் 

மேஷம் - ரிஷபம் - சிம்மம் - துலாம் - விருச்சிகம் - தனுசு ஆகிய ராசிக்காரர்கள் தினமும் முன்னோர்களை வணங்கி வந்தால் சனியின் உக்ரம் குறையும்.

குறிப்பு - (தாய், தந்தையர் இருப்பவர்கள் திதி பூஜை செய்யக்கூடாது).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com